சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

தொடர்ந்து நான்கு நாட்கள் சரிவைக் கண்ட நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை திடீர் ஏற்றம் கண்டது.
சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

தொடர்ந்து நான்கு நாட்கள் சரிவைக் கண்ட நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை திடீர் ஏற்றம் கண்டது.
குஜராத்தில் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல், ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிடவுள்ள நிதி கொள்கை குறித்த எதிர்பார்ப்பு ஆகியவற்றால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
நான்கு நாள்கள் சரிவின் காரணமாக பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாகப் பயன்படுத்தி உள்நாட்டு முதலீட்டாளர்கள் அவற்றில் முதலீட்டை அதிகரித்தனர். இதையடுத்து, பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன.
தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கியதையடுத்து அவற்றின் விலை 1.37 சதவீதம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்பம் 1.08 சதவீதமும், உலோகம் 0.50 சதவீதமும், மருந்து 0.32 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 0.31 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 0.30 சதவீதமும் உயர்ந்தன.
அதேசமயம், ரியல் எஸ்டேட், மின்சாரம், வங்கி, மோட்டார் வாகன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடம் வரவேற்பு காணப்படவில்லை. 
நிறுவனங்களைப் பொருத்தவரையில், அமெரிக்க சந்தையில் புற்றுநோய்க்கான மருந்துகளை விற்க அனுமதி கிடைத்ததாக தெரிவித்ததையடுத்து பயோகான் நிறுவனப் பங்கின் விலை அதிக அளவாக 15 சதவீதம் ஏற்றம் கண்டது.
மேலும், இன்ஃபோசிஸின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக சலீல் பரேக் நியமிக்கப்பட்டது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்நிறுவனப் பங்கின் விலையும் 2.80 சதவீதம் அதிகரித்தது. ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்கின் விலை 1.37 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி 1.25 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.06 சதவீதமும் உயர்ந்தது. இவைதவிர, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டீஸ், ஆக்ஸிஸ் வங்கி, எல் & டி, அதானி போர்ட்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டிசிஎஸ் நிறுவனப் பங்குகளின் விலையும் 1.03 சதவீதம் வரை அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 36 புள்ளிகள் அதிகரித்து 32,869 புள்ளிகளாக நிலைத்தது. நான்கு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 891 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்த நிலையில் ஏற்பட்ட இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 5 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 10,127 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com