ரிசர்வ் வங்கி நிதி கொள்கை எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகளில் சரிவு

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குறித்த எதிர்பார்ப்பால் இந்திய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
ரிசர்வ் வங்கி நிதி கொள்கை எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகளில் சரிவு

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குறித்த எதிர்பார்ப்பால் இந்திய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
நிதி கொள்கை தொடர்பான ரிசர்வ் வங்கியின் கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை (டிச.6) வெளியாக உள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்பில்லை என்பதே பெரும்பாலான சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த எதிர்பார்ப்பு பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். மேலும், குஜராத்தில் இந்த வாரம் இறுதியில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்த எதிர்பார்ப்பும் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாக இருந்தது.
தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச், இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை 6.9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக குறைத்தது. இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை அதிகரிப்பதாக அமைந்தது. 
பங்கு வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் அதிக வீழ்ச்சி காணப்பட்ட நிலையில், சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பால் சரிவு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. 
முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி மின்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து அவற்றின் விலை சராசரியாக 1.06 சதவீதம் வரை சரிவைக் கண்டது. உலோகத் துறை நிறுவனப் பங்குகளின் விலை 0.85 சதவீதமும், பொறியியல் பொருள்கள் 0.62 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 0.61 சதவீதமும், அடிப்படை கட்டமைப்பு 0.56 சதவீதம், மோட்டார் வாகனம் 0.52 சதவீதம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனப் பங்குகளின் விலை 0.38 சதவீதமும் சரிந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 2.31 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. டாடா ஸ்டீல், என்டிபிசி, டாக்டர் ரெட்டீஸ், ஓஎன்ஜிசி, பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ, எல் & டி, மஹிந்திரா & மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எச்யுஎல், லூபின், கோல் இந்தியா, ஐடிசி, டாடா மோட்டார், ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுஸுகி மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளின் விலை 1.71 சதவீதம் வரை குறைந்தது.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை 1.92 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.18 சதவீதமும் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 67 புள்ளிகள் சரிந்து 32,802 புள்ளிகளில் நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 9 புள்ளிகள் குறைந்து 10,118 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com