எங்கேயும் எப்போதும் டிஜிட்டல் பரிவர்த்தனை சாத்தியமா?

ரூ.500, ரூ.1,000 கரன்சி மதிப்பு நீக்க நடவடிக்கையானது, கருப்புப் பணத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எங்கேயும் எப்போதும் டிஜிட்டல் பரிவர்த்தனை சாத்தியமா?

ரூ.500, ரூ.1,000 கரன்சி மதிப்பு நீக்க நடவடிக்கையானது, கருப்புப் பணத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால், இதனால் கடந்த ஓராண்டு காலமாக பாதிக்கப்பட்டுள்ளது சாமானியர்களும்தான்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது, டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்பாடுகளை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று நிதி அமைச்சர் ஜேட்லி கூறியுள்ளார். கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுப்போம், கூடுதல் பேரை வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் கொண்டு வருவோம் என்கிறார் அவர்.
பணமதிப்பிழப்பு அறிவித்த 2016 நவம்பர் 2-ஆவது, 3-ஆவது வாரங்களில் மட்டும் பேடிஎம் செயலி மூலம் நாள்தோறும் சுமார் 70 லட்சம் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 

கடந்த ஓராண்டாக இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் காணப்படுகிறது. நகரங்களில் ஏராளமானோர் வழியின்றி டிஜிட்டல் பேமென்ட் முறைக்கு மாறி வருவதால், பேடிஎம், பேயூமணி, ஃபிரீசார்ஜ் போன்ற பல நிறுவனங்கள் இத் துறையில் முன்னிலை வகிக்கின்றன. இத்தகைய நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்கின்றன. உலகின் மிகப் பெரிய இணைய நிறுவனமான கூகுள் அண்மையில் தேஜ் என்ற டிஜிட்டல் பேமென்ட் செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

ரொக்கப் புழக்கத்தைக் குறைக்கவே, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் இருந்ததைவிட தற்போது, அதாவது கடந்த ஓராண்டில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 2500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டில் 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 3-இல் 1 பங்கு அளவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது நாடு முழுவதும் சுமார் 70 கோடி டெபிட் கார்டு எனப்படும் பற்று அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இவை பெரும்பாலும், ஏடிஎம்-களில் பணம் எடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பொருள்கள் வாங்குவதற்கு விற்பனையகங்களில் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. இதற்கு பிஓஎஸ் அல்லது கார்டு ஸ்வைப் கருவிகள் பெரும்பாலான விற்பனையகங்களில் இல்லை என்பதே காரணமாகக் கூறப்படுகிறது. அதாவது, 70 கோடி பற்று அட்டைகளுக்கு 25 லட்சம் பிஓஎஸ் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் பெரு நகரங்களிலேயே அதிகம் உள்ளன. மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பற்று அட்டைகளின் பயன்பாடு 3 மடங்காக அதிகரித்தது. தற்போது அது கணிசமாகக் குறைந்துள்ளது என்பதே உண்மை. பொதுமக்கள் ரொக்கமாக பணத்தைக் கொடுத்து பொருள், சேவையைப் பெறவே விரும்புகின்றனர் என்று வங்கி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் ரொக்கமாகப் பணத்தைக் கொடுத்து பொருள், சேவையைப் பெறவும், விற்பனையாளர் ரொக்கமாகவே பொருளுக்கான விலையைப் பெறவும் விரும்புகின்றனர். பொதுமக்கள் அன்றாடச் செலவுகளை ரொக்கமாகவே மேற்கொள்ள விரும்புகின்றனர்.

தற்போது ரொக்கத்தின் புழக்கம் அதிகமிருந்தாலும், வருங்காலங்களில் இது குறைந்து, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும். தற்போது சுமார் 95 சதவீத பரிவர்த்தனையானது, ரொக்கம் மற்றும் காசோலைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது வருங்காலத்தில் குறையும். அதாவது, 2020-இல் ரூ.50,000 கோடி அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் என்கிறது ஒரு புள்ளிவிவரம். 

தற்போதைய நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சற்று குறைந்தாலும், இது ஒரு பழக்கமாக மாற சிறிது காலம் ஆகும் என்கிறார் கூகுள் நிறுவனத்தின் சரக்கு நிர்வாகப் பிரிவின் துணைத் தலைவர். நுகர்வோர் ரொக்கப் பணத்துடன் டிஜிட்டல் கரன்ஸியையும் கையில் கொண்டு செல்கின்றனர்; அதுவே இன்றைய நிலை என்கிறார் அவர். தேஜ் செயலியை அறிமுகப்படுத்திய இரண்டு நாள்களுக்குள் அதனைத் தங்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்தோரின் எண்ணிக்கை 2.5 லட்சமாக அதிகரித்துள்ளது.

பேடிஎம் 26 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மொபிகுவிக் 6 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 19.5 கோடி டிஜிட்டல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. பேடிஎம் மூலம் சுமார் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் தினசரி பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். மொபிகுவிக் மூலம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். மேலும், இதன் பயன்பாட்டை எந்தெந்த தளங்களில் அதிகரிக்கச் செய்ய முடியுமோ, அங்கெங்கெல்லாம் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, மும்பையில் போக்குவரத்து விதிகளை மீறிவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை டிஜிட்டல் பேமென்ட் மூலம் வசூலிக்கப்படுகிறது. அதுபோல, புணே நகரில் சொத்து வரி டிஜிட்டல் பேமென்ட் மூலம் வசூலிக்கப்படுகிறது.

வங்கிகள் ரொக்கப் பணத்தை நன்றாகக் கையாளுகின்றன. ஆனால், வங்கிச் செயலிகளின் மின்னணு பரிவர்த்தனைகளில் பலவித குறைபாடுகள் உள்ளன என்ற புகார் உள்ளது. பாதுகாப்பு, துரிதம், நம்பகத்தன்மை ஆகியவை இன்னும் முக்கியக் கவலையாக உள்ளன. பல செயலிகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. 

"டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள்' என்று பல்வேறு தளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் சிறு வணிகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை.

தற்போதைய நிலையில், ரொக்கமாக செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளபோதுதான், டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பலரும் நாடுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. மூத்த குடிமக்கள், கல்லாதோர் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்வதில் சிரமப்படுகின்றனர். ஆனால் படித்தவர்கள் அனைவரும் இந்த பரிவர்த்தனை முறையை முழு மனதுடன் ஏற்றுவிட்டார்கள் என்றும் கூறிவிட முடியாது. மேலும், தாங்கள் ஏமாற்றப்படுவோமோ என்றும் சில வாடிக்கையாளர்கள் பயப்படுகின்றனர்.

பணம் செலுத்தும் முறைகள் முன்பு இருந்ததைவிட, தற்போது எளிமையாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும், நுகர்வோருக்கும் விற்பனையாளருக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது.

அனைவருக்கும் கல்வி என்பதுபோல, அனைவரும் டிஜிட்டல் உலகுக்கு மாற இந்தியாவில் எவ்வளவு காலம் ஆகும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், ஸ்வீடன், தென் கொரியா, டென்மார்க், கனடா போன்ற நாடுகளில் பெருமளவு பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது 75 முதல் 85 சதவீத அளவுக்கு டிஜிட்டல் பயன்பாடு உள்ளது. நார்வேயில் காசோலைகள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சேவைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் போக்குவரத்துத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. உதாரணமாக, ஹாங்காங்கில் மெட்ரோ பயணக் கட்டணத்துக்கென ஆக்டோபஸ் கார்டு 1997-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த அட்டைகள் அனைத்துப் போக்குவரத்துக் கட்டணத்துக்கும், அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள் என பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மொத்த பரிவர்த்தனைகளில் அட்டைப் பயன்பாடு 95 சதவீத அளவுக்கு உள்ளது எனக் கூறப்படுகிறது. அதுபோல, சிங்கப்பூரில் ஈஸிலிங்க், தென் கொரியாவில் யூபாஸ் ஆகிய கார்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அமெரிக்காவில் 50-50 சதவீத அளவுக்கு ரொக்கம் - டிஜிட்டல் பரிவர்த்தனை உள்ளது. 

இந்தியாவில் தற்போது ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது 50 சதவீதம் குறைந்துள்ளது, அடுத்த 2 ஆண்டுகளில் டிஜிட்டல் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்று வங்கியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த நிலையும் மாறும். இந்தியாவில் கடன் அட்டை, பற்று அட்டைகளே வழக்கொழிந்து விடும் என்கிறார் நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த். மொபைல்போன் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது அதிகரிக்கும் நிலையில், இன்னும் 4 ஆண்டுகளில் கடன் அட்டை, பற்று அட்டை, ஏ.டி.எம். இயந்திரங்களின் தேவை அதிகம் இருக்காது என்கிறார் அவர். இளம் தலைமுறையினர் விகிதம் நாட்டில் அதிகமாக இருப்பது நமக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மத்திய அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், வேறு தொகைகளுக்கும் புதிய நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை அவ்வளவு எளிதில் நம்மிடமிருந்து பிரிக்க முடியாவிட்டாலும், டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற புதுமையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது காலத்தின் கட்டாயம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com