ஜியோ வாடிக்கையாளர்கள் 10 கோடி பேர்: முகேஷ் அம்பானி பெருமிதம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஜியோ வாடிக்கையாளர்கள் 10 கோடி பேர்: முகேஷ் அம்பானி பெருமிதம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி தொலைத் தொடர்பு சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனையடுத்து, வெறும் 170 நாட்களில் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு வினாடிக்கும் 7 வாடிக்கையாளர்கள் என்கிற கணக்கில் ஜியோ சேவையில் இணைந்து வருகின்றனர். இது, உலகில் எந்தவொரு தொலைத் தொடர்பு நிறுவனமும் இதுவரையில் செய்திராத சாதனையாகும்.
ஜியோ தொலைத் தொடர்பு சேவையின் மூலம் 200 கோடி நிமிட அழைப்புகள், 100 கோடி ஜிபி-க்கும் மேற்பட்ட டேட்டா சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்று மகிழ்ந்துள்ளனர்.
நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சலுகை திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இருப்பினும், இலவச அழைப்பு மற்றும் தேசிய ரோமிங் சலுகைகள் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் தொடரும்.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டண விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பிற நிறுவனங்களைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான டேட்டா சேவை வழங்கும் திட்டமும் அதில் அடங்கும்.
தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. வரும் 2019-ஆம் ஆண்டு மார்ச் வரையில் இதே சேவையைப் பெற மாதத்துக்கு ரூ.303 கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். ஒரு முறை இணைப்புக் கட்டணமாக ரூ.99 செலுத்த வேண்டும்.
இனி வரும் மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா சேவையை வழங்கும் வகையில் அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவதில் ஜியோ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வரும் 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள 99 சதவீத மக்களை ஜியோ தொலைத் தொடர்பு சேவைக்குள் கொண்டு வர திட்டமிடப்படுள்ளது என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com