தங்கப் பத்திரம் விற்பனை பிப். 27-இல் தொடக்கம்

பொதுமக்களின் சேமிப்புக்கான நடப்பு நிதி ஆண்டின் கடைசி வாய்ப்பாக தங்கப் பத்திரம் விற்பனை பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்குகிறது.
தங்கப் பத்திரம் விற்பனை பிப். 27-இல் தொடக்கம்

பொதுமக்களின் சேமிப்புக்கான நடப்பு நிதி ஆண்டின் கடைசி வாய்ப்பாக தங்கப் பத்திரம் விற்பனை பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட தங்கப் பத்திர விற்பனையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
தங்கப் பத்திரங்கள் விற்பனை ஏற்கெனவே 6 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், 7-ஆவது கட்ட தங்கப் பத்திர விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்கி மார்ச் 3-ஆம் தேதி வரையில் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளன.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மார்ச் 17-ஆம் தேதி தங்கப் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் 500 கிராம் வரையில் பொதுமக்கள் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என மத்திய நிதி அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் நேரடியாக தங்கத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு பதிலாக கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தங்க சேமிப்புப் பத்திர திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம், பொதுமக்கள் முதலீட்டு நோக்கில் தங்கத்தை வாங்கி கையிருப்பில் வைக்காமல் பல்வேறு கிராம் எடையில் வெளியிடப்படும் தங்கப் பத்திர திட்டங்களில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப முதலீடு செய்யலாம்.
இந்த தங்கப் பத்திரங்கள், வங்கி, அஞ்சல் அலுவலகங்கள் பங்கு சந்தைகள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
மத்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி ஐந்து கட்டங்களாக வெளியிட்ட தங்கப் பத்திர விற்பனை மூலம் அரசுக்கு ரூ.3,060 கோடி கிடைத்துள்ளது.
எட்டு ஆண்டு முதிர்வு காலத்தைக் கொண்ட இந்த தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வோருக்கு ஆண்டுக்கு 2.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டத்திலிருந்து வெளியேறிக் கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒரு நிதி ஆண்டில் தனிநபர் ஒருவர் 500 கிராமுக்கும் மேலாக இந்த தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com