சிறு சேமிப்புக்கு பெரும் பின்னடைவு

கூட்டு வட்டி என்பது உலகின் 8-ஆவது அதிசயம்; இதைப் புரிந்து கொண்டவர்கள் சேமிப்பின் மூலம் அதிலிருந்து சம்பாதிப்பார்கள்
சிறு சேமிப்புக்கு பெரும் பின்னடைவு

கூட்டு வட்டி என்பது உலகின் 8-ஆவது அதிசயம்; இதைப் புரிந்து கொண்டவர்கள் சேமிப்பின் மூலம் அதிலிருந்து சம்பாதிப்பார்கள், புரிந்து கொள்ளாதவர்கள் சேமிக்காமல் பணத்தை இழப்பார்கள்' என்பது பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்று. ஐன்ஸ்டீன் பொருளாதார நிபுணர் இல்லையென்றாலும், கணிதவியலில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஞானம், மனித சமுதாயத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் முக்கியமானது "கூட்டு வட்டி' என்று அவரைக் கூற வைத்தது.
காலச் சக்கரத்துக்கும் பணத்துக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. நன்கு ஆராய்ந்து சரியான முறையில் செய்யப்படும் சேமிப்பும், முதலீடும் கால ஓட்டத்தில் பணத்தை பெருக்கித் தரும். அதே நேரத்தில் சரியான காலத்தில் மேற்கொள்ளப்படாத சேமிப்பும், முறையாக ஆராய்ந்து மேற்கொள்ளப்படாத முதலீடும் காலச் சக்கரத்தில் சிக்கி கரைந்து போய்விடும்.
மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் மட்டும் செலுத்தும் பரஸ்பர நிதித் திட்டம் முதல் பங்குச் சந்தை சார்ந்த பல சிறு முதலீட்டுத் திட்டங்கள் வரை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதிக வட்டி தருவதாகக் கூறப்படும் கார்ப்பரேட் நிரந்தர வைப்புத் திட்டங்கள் பல இருந்தாலும், இப்போதும் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களின், முக்கியமாக கோடிக்கணக்கான கிராமப்புற மக்களின் நம்பிக்கைக்குரியதாகவும், எளிதில் அணுகக் கூடிய சேமிப்பு முறையாகவும் இருப்பது அஞ்சலகம் சார்ந்த சிறு சேமிப்புத் திட்டங்கள்தான்.
பரஸ்பர நிதித் திட்டங்கள் என்னதான் 12 முதல் 15 சதவீதம் வரை வட்டி ஈட்டுவதாகக் கூறப்பட்டாலும், அவற்றின் இறுதியில் தொக்கி நிற்கும் "சந்தை அபாயங்களுக்கு உள்பட்டது' என்ற வாக்கியம் முதலீட்டுக்கு உத்தரவாதத்தை எதிர்பார்க்கும் மக்களின் மனதில் தயக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யவதில் உள்ள சில இடர்பாடுகளும் நமது கிராம மக்களைப் பெரும்பாலும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களையே நாட வைக்கிறது. சேமிப்பின் மீது கிடைக்கும் ஆதாயம் சற்று குறைவாக இருந்தாலும், அதில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்பதுதான் இதற்குக் காரணம். அதிக வட்டி தருவதாக அறிவித்து பணத்தை மோசடி செய்த நிறுவனங்கள் நமது மக்களுக்கு நிறைய பாடங்களைக் கற்றுத்தந்துள்ளன.
நம்பகத்தன்மை வாய்ந்த சேமிப்புக்கு எப்போதுமே முதன்மையான வாய்ப்பாக இருந்து வருவது அஞ்சலக சேமிப்பு, நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள்தான். மேலும், வங்கிகள் அளிக்கும் வட்டியைவிட அஞ்சலக சேமிப்புகளில் சற்று கூடுதல் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு 2016-ஆம் ஆண்டு பெரும் பின்னடைவாகவே அமைந்தது. ஏனெனில் கடந்த ஆண்டில் மட்டும் அனைத்து அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியும் 0.5 முதல் 1.5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் இதே நிலைதான் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
எனினும், இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை என்பது திடீரென அறிவிக்கப்பட்டதல்ல. 2016-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே, சந்தையில் நிலவும் வட்டி விகிதத்துக்கு ஏற்ப சிறுசேமிப்புகளுக்கான வட்டியும் நிர்ணயிக்கப்படும் (ஆதாவது குறைக்கப்படும்) என்பதை மத்திய அரசு கோடிட்டுக் காட்டிவிட்டது. இதற்கு முதல்படியாக சிறு சேமிப்புகளுக்கான வட்டி ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மறுநிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. அதன்படி 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இப்போது வரை சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டுதான் வருகிறது. குறுகியகால சேமிப்புக்கு மட்டுமின்றி நீண்டகால முதலீட்டுக்கும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இது காலம்காலமாக அஞ்சலக சேமிப்புத் திட்டங்களை மட்டுமே நம்பி இருந்த பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களும், சீட்டு நிறுவனங்களும் சிறு சேமிப்புகளுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறினாலும், அவற்றின் நம்பகத்தன்மை எப்போதுமே கேள்விக் குறியாகவே உள்ளது. அதே நேரத்தில் வட்டி சற்று குறைவாக இருந்தாலும் அரசின் உத்தரவாதம், வட்டியுடன் முதலீடு திரும்பக் கிடைக்கும் என்ற நம்பகத்தன்மை ஆகியவை அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மீதான மக்களின் ஆர்வத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தன. அஞ்சலகங்களும் காப்பீடு வசதிகளை அளித்து வருவது கிராமப்புற மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இப்போதும் நமது நாட்டில் வங்கி வசதி இல்லாத கிராமங்களில் ஒரே நம்பகமான சேமிப்பு மையமாக உள்ளது அஞ்சலகங்கள் மட்டும்தான்.
பாரம்பரியமான சேமிப்புத் திட்டங்கள் மட்டுமின்றி, பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டமாக பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டமும் வட்டிக் குறைப்பில் இருந்து தப்பவில்லை. 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் மோடி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது இதற்கான வட்டி 9.1 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த 2 மாதங்களில் இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் 9.2 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு, இப்போது 8.5 சதவீத வட்டி என்ற நிலைக்கு வந்துவிட்டது. இதேபோல அஞ்சல நிரந்தர வைப்பு, தொடர் வைப்பு, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என அனைத்துப் பிரிவுகளிலும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டியை முக்கிய வருவாயாக நம்பி வாழும் மூத்த குடிமக்கள் பலர் நமது நாட்டில் உள்ளனர். இந்த வட்டிக் குறைப்பு நடவடிக்கை அவர்களுக்கு பேரிடியாக அமைந்தது என்றால் மிகையாகாது.
ஏற்கெனவே வங்கிகளும் தொடர் வைப்பு, நிரந்தர வைப்பு உள்ளிட்டவற்றுக்கு வட்டியைக் குறைத்து வருகின்றன. உயர் மதிப்பு ரூபாய் வாபஸ் நடவடிக்கையால் வங்கிகளில் பெருமளவில் பணம் குவிந்துள்ளது. இதனால் வங்கிகளும் டெபாசிட்களுக்கான வட்டியைக் குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலக சேமிப்புகளுக்கான வட்டிக் குறைப்பு நடப்பு ஆண்டிலும் தொடர்ந்தால் கிராமப்புற மக்கள் தங்கள் சேமிப்பை தங்கம் அல்லது அதிகவட்டி தருவதாகக் கூறும் தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்யும் நிலை ஏற்படும். மத்திய அரசு ஏற்கெனவே தங்க இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பணம் புழக்கத்தில் இல்லாமல் தங்கமாக முடங்கும்.
அஞ்சலக சிறு சேமிப்புகளுக்கு இதற்கு மேலும் வட்டியைக் குறைக்காதிருத்தல், குறைந்த அளவில் பணத்தை தொடர் வைப்பாக சேமிப்பவர்களுக்கும், நீண்டகாலத்துக்கு பணத்தை முதலீடு செய்பவர்களுக்கும் சற்று கூடுதல் வட்டி தருதல் போன்ற நடவடிக்கை மூலம் கிராமப்புற சிறு சேமிப்பாளர்களின் நலனைக் காக்க முடியும்.
வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் ஏழை, நடுத்தர மக்களின் நிதி நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் அறிவிப்பில், சிறு சேமிப்புத் திட்டங்கள் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-சு.வெங்கடேஸ்வரன்
"விதி 72' தெரியுமா?

நிதியியலில் வட்டியைக் கணக்கிட பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. இதில் முக்கியமான "விதி 72'. முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகும் என்பதைக் கணக்கிட மிகவும் எளிமையான முறை விதி 72. இதுவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் உருவாக்கம்தான். ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளில் சார்பு கோட்பாடுதான் மிகச் சிறந்தது என்று உலகமே கூறினாலும், தனது கண்டுபிடிப்புகளில் தனக்கு மிகவும் பிடித்தமானதும், மிகப்பெரியது என்றும் தான் கருவதும் "விதி 72' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டி விகிதத்தை 72-ஆல் வகுத்தால் கிடைக்கும் விடைதான், முதலீடு இரட்டிப்பாவதற்கு தேவைப்படும் ஆண்டுகளாகும். உதாரணமாக நிரந்தர வைப்புத் தொகைக்கு 10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது என்றால் (72/10 = 7.2) 7.2 ஆண்டுகளில் அந்த முதலீடு இரட்டிப்பு ஆகும்.
முதலீடு இரட்டிப்பு ஆவதற்கு மட்டுமின்றி பணவீக்கத்தால் எதிர்காலத்தில் நமது செலவு எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும் என்பதையும் 72 மூலம் கணக்கிட முடியும். உதாரணமாக கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்து வந்தால் (72/6 = 12) 12 ஆண்டுகளில் கல்விக் கட்டணத்துக்கான தொகை இரு மடங்காகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com