வரும் மார்ச் 31-க்குள் பணப் புழக்கம் சீராகும்: பிஎன்பி வங்கி மேலாண் இயக்குர் உஷா அனந்தசுப்ரமணியன்

வரும் மார்ச் 31-க்குள் பணப்புழக்கம் சீராகும் என பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான உஷா அனந்தசுப்ரமணியன் தெரிவித்தார்.
வரும் மார்ச் 31-க்குள் பணப் புழக்கம் சீராகும்: பிஎன்பி வங்கி மேலாண் இயக்குர் உஷா அனந்தசுப்ரமணியன்

வரும் மார்ச் 31-க்குள் பணப்புழக்கம் சீராகும் என பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான உஷா அனந்தசுப்ரமணியன் தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வங்கி மேலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டில் எங்களது வங்கியின் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான வர்த்தகம் ரூ. 10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 123 ஆண்டுகால வங்கியின் வரலாற்றில் இது ஒரு மைல்கல். இதை வரும் நிதியாண்டில் ரூ. 11 லட்சம் கோடியாக உயர்த்த பாடுபடுவோம்.
வங்கியின் வர்த்தகம் உயர்ந்துள்ளதால், கடனுக்கான வட்டியை கடந்த 3 மாதங்களில் கணிசமாக குறைத்துள்ளோம். இதன்படி, கடந்த ஆண்டு கடனுக்கான வட்டி 9.15 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.45 சதவீதமாக குறைந்துள்ளது.
முற்றிலும் ரொக்கமற்ற பரிவர்த்தனை என்பது சாத்தியமல்ல. குறைந்த பண பரிவர்த்தனை சாத்தியமே. குறைந்த பணப் பரிமாற்ற முறையுள்ள சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிகளில் எங்களது வங்கி ஈடுபடும். இதற்காக பிள்ளையார்பட்டி, ஏத்தாக்குடி ஆகிய கிராமங்களை எங்களது வங்கி தத்தெடுத்துள்ளது. அங்கு பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவித்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த உள்ளோம்.
ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்குப் போதுமான பணம் வழங்கப்படவில்லை. தற்போது, ரிசர்வ் வங்கி போதுமான பணத்தைப் புழக்கத்தில் விட்டுள்ளது. மேலும், புதிய நோட்டுகளும் அதிக அளவில் வங்கிகளுக்குத் திரும்ப வரத் தொடங்கியிருப்பதால், பணப் புழக்கம் வரும் மார்ச் 31-க்குள் சீராகும்.
உயர் மதிப்பு கரன்சி மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு, எங்களது வங்கி கிளைகளில் இதுவரை ஏறத்தாழ ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் வழங்கியுள்ளோம். வங்கி வாராக் கடனாக ரூ. 56 ஆயிரம் கோடி உள்ளது. கடந்த அரையாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி வாராக் கடன்களை வசூலித்துள்ளோம். தற்போது அதிக அளவில் வாராக் கடன்களை வசூலித்து வருகிறோம்.
வரும் நிதியாண்டில் ஸ்ரீரங்கம், கோவை உள்ளிட்ட 20 இடங்களில் புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் உஷா அனந்தசுப்ரமணியன்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகிறார்
பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் உஷா அனந்தசுப்ரமணியன். உடன் சென்னை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி,
கோவை மண்டல மேலாளர் ஆர். தாமோதரன் ஆகியோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com