பங்குச் சந்தைகளுக்கு ஏற்றமான வாரம்

உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பால் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரத்தில் நடைபெற்ற வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 
பங்குச் சந்தைகளுக்கு ஏற்றமான வாரம்

உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பால் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரத்தில் நடைபெற்ற வர்த்தகம் ஏற்றத்துடன்
நிறைவடைந்தது. 
கரன்ஸி விவகாரத்தால் தயாரிப்புத் துறையின் உற்பத்தி சூடுபிடிக்காதது, சரக்கு-சேவை வரி கூட்டத்தில் முழுமையான அளவில் உடன்பாடு எட்டப்படாதது
போன்றவை சென்ற வார பங்கு வர்த்தகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இருப்பினும், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு
மேற்கொண்டதையடுத்து நடப்பு ஆண்டின் தொடக்க வாரம் நம்பிக்கையூட்டும் விதமாக ஏறுமுகத்துடன் முடிவடைந்தது. 
அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை தொடர்ச்சியாக விற்பனை செய்து முதலீட்டை திரும்ப பெற்று வருவதால் பங்குச் சந்தைகளின் ஏற்றம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.
கடந்த வாரத்தில் மட்டும் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.1,880.82 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக "செபி' தெரிவித்துள்ளது. 
எச்1பி விசாக்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்ற நிலைப்பாட்டால் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கான தேவை கடந்த வாரத்தில் மிகவும் குறைந்து காணப்பட்டது. அதேசமயம், வங்கி துறை பங்குகளுக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது. 
லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் அதிக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளை விற்பனை செய்ததால் அவற்றின் விலை சராசரியாக 2.90
சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. அதேசமயம், ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் விலை 7.21 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 5.80 சதவீதமும் அதிகரித்தன.
இவை தவிர, உலோகம் (5.24%), மோட்டார் வாகனம் (3.71%), எண்ணெய்-எரிவாயு (3.04%), பொறியியல் பொருள்கள் (3.06%), மின்சாரம் (2.60%) உள்ளிட்ட நிறுவனப்
பங்குகளின் விலையும் கணிசமான அளவில் உயர்ந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாடா ஸ்டீல் பங்கின் விலை 7.31 சதவீதம் ஏற்றம் பெற்றது. அதானி போர்ட்ஸ் பங்கின் விலை 6.47 சதவீதமும்,
ஓ.என்.ஜி.சி. 5.75 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 5.61 சதவீதமும், மாருதி சுஸூகி 5.45 சதவீதமும் அதிகரித்தன. இவை தவிர, ஏஷியன் பெயிண்ட்ஸ் (5.61%),
பார்தி ஏர்டெல் (4.77%), டாக்டர் ரெட்டீஸ் (3.56%), எல் & டி (3.09%) நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேசமயம், இன்ஃபோசிஸ் பங்கின் விலை 3.88
சதவீதமும், எச்.டி.எப்.சி. 3.54 சதவீதமும், டி.சி.எஸ். 3.32 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி 1.52 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 0.69 சதவீதமும்
சரிவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 132 புள்ளிகள் (0.50%) அதிகரித்து 26,759 புள்ளிகளாக நிலைத்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.14,123.73 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 58 புள்ளிகள் (0.71%) உயர்ந்து 8,243 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.84,147.90 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com