ஆலை அமைக்க ஆப்பிள் தீவிரம்

இந்தியாவில் செல்லிடப்பேசி ஆலையைத் தொடங்குவது குறித்து விவாதிப்பதற்காக, ஆப்பிள் நிறுவனம் வரும் 25-ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் குழுவை நேரில் சந்திக்க உள்ளது.
ஆலை அமைக்க ஆப்பிள் தீவிரம்

இந்தியாவில் செல்லிடப்பேசி ஆலையைத் தொடங்குவது குறித்து விவாதிப்பதற்காக, ஆப்பிள் நிறுவனம் வரும் 25-ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் குழுவை நேரில் சந்திக்க உள்ளது.
இந்தியாவில் செல்லிடப்பேசி ஆலையை அமைக்க பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக, நீண்ட கால அடிப்படையில் வரி விலக்கு, ஊக்குவிப்பு சலுகைகள் உள்ளிட்டவற்றை எதிர்நோக்கியது.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் குழு ஜனவரி 25-ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் குழுவை சந்தித்து பேச உள்ளது. அந்தக் குழுவில், வர்த்தகம், தொழில் கொள்கை-மேம்பாடு, வருவாய், சுற்றுச்சூழல்-வனம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் கோரிய சலுகைகள் அளிக்கப்படாவிட்டாலும், இந்தியாவில் செல்லிடப்பேசி உற்பத்தி ஆலையை அமைப்பதில் ஆப்பிள் நிறுவனம் உறுதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஹுவாவே, ஜியோமி உள்ளிட்ட 42 நிறுவனங்கள் இந்தியாவில் செல்லிடப்பேசிகளை தயாரித்து வருகின்றன. ஆனால், எந்தவொரு நிறுவனமும் மத்திய அரசிடம் கூடுதல் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
இருப்பினும், உள்நாட்டில் மின்னணு தயாரிப்பு துறையை ஊக்குவித்து அதன் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, திருத்தப்பட்ட சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் மின்னணு துறைக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம், கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகளில் ஆலைகளை அமைத்து செல்லிடப்பேசி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
சீனா, ஜெர்மனி,அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் செல்லிடப்பேசி சில்லறை விற்பனை மையங்களை ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக அமைத்துள்ளது.
அதேசமயம், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமாக விற்பனையகங்கள் கிடையாது.
ரெடிங்டன் மற்றும் இங்ரம் மைக்ரோ ஆகிய விநியோக நிறுவனங்கள் மூலமாகவே ஆப்பிள் நிறுவன செல்லிடப்பேசிகள் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com