வட தமிழக பாய் நகரம்-வந்தவாசி!

வந்தவாசியில் தரமான கோரைப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தாலும், அரசின் சலுகைகள் இல்லாததால் தொழில் நலிவடைந்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வட தமிழக பாய் நகரம்-வந்தவாசி!

வந்தவாசியில் தரமான கோரைப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தாலும், அரசின் சலுகைகள் இல்லாததால் தொழில் நலிவடைந்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வந்தவாசியில் பல ஆண்டுகளாக கோரைப்பாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் ஆற்றோரங்களில் விளைந்த மானாவாரி கோரைகளை அறுத்து, கைகளால் பாய் நெய்து வந்தனர். இந்த பாய்களை தெருத்தெருவாக தலையில் சுமந்து சென்று விற்பனை செய்தனர்.
பின்னர் 1979-ம் ஆண்டு கோரைப்பாய் தயாரிக்க இயந்திரம் வந்தவாசியில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கோரைப்பாய் உற்பத்தி படிப்படியாக இயந்திரமயமாகியது. தற்போது வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் கோரைப்பாய் தயாரிக்கப்படுகிறது.
தொடக்கத்தில் ஜப்பானிலிருந்து கோரைப்பாய் தயாரிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. ஆனால் தற்போது சென்னையில் வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படுகிறது. சுமார் ரூ.2 லட்சம் முதல், ரூ.4.50 லட்சம் வரையிலான விலையில் இந்த இயந்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த கோரைப்பாய் தயாரிப்புக்கென வந்தவாசியை சுற்றியுள்ள தென்னாங்கூர், வடநாங்கூர், மாலையிட்டான்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோரை பயிரிடப்படுகிறது.
மேலும் தேவைக்கு திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோரை வரவழைக்கப்படுகிறது. கோரை ஒருமுறை நடவு செய்தால் தொடர்ந்து 10 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும் தன்மை கொண்டதாகும். 6 மாதத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படும் கோரையானது, அளவு மற்றும் தரம் வாரியாக பிரிக்கப்பட்டுத் தேவையான வர்ணம் ஏற்றப்பட்டு வெயிலில் காய வைக்கப்படுகிறது.
பின்னர் இயந்திரங்கள் மூலம் பல்வேறு அளவுகளில் பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு இயந்திரம் மூலம் மணிக்கு சுமார் 5-லிருந்து 6 பாய்கள் வரை நெய்யலாம். பின்னர் பாய்களின் 2 ஓரங்களிலும் வர்ண நாடாக்கள் தைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கோரைப்பாய்கள் 2.5 அடி அகலம் முதல் 4 அடி அகலம் வரை பல்வேறு அளவுகளில் நெய்யப்படுகின்றன. இவை ரூ.80-லிருந்து ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதில் முகூர்த்த பாய்கள், பல்வேறு வடிவங்கள் பொறித்த பாய்கள், பந்தி பாய்கள், திருமணப் பரிசாக வழங்க மணமக்கள் பெயர் பொறித்த பாய்கள் என நாளொன்றுக்கு மொத்தம் சுமார் 3 ஆயிரம் பாய்கள் வரை வந்தவாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பாய்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும், மேற்கு வங்கம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
ஓர் இயந்திரம் அமைக்க ஆயிரம் சதுர அடி இடம் தேவைப்படும். மேலும், தரமான கோரைகளைப் பிரித்தல், சாயம் ஏற்றி காய வைத்தல், நெசவு, நாடா தைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு என ஒரு இயந்திரத்துக்கு குறைந்தபட்சம் 4 பேர் தேவை. இத்தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலைப் பாதுகாக்க கோரிக்கை

தொழிலாளர் பற்றாக்குறை, நிரந்தரமற்ற விற்பனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோரைப்பாய் உற்பத்தி நலிவடைந்து வருவதாக கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோரைப்பாய் உற்பத்தியாளர் பி.நிஜாமுதீன் கூறியதாவது:
வந்தவாசியில் கோரைப்பாய் உற்பத்தியில் கடந்த 30 ஆண்டுகளாக பணி புரியும் தொழிலாளர்களே தற்போதும் பணியில் உள்ளனர். இளைஞர்கள் யாரும் இந்தப் பணிக்கு விரும்பி வருவதில்லை. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் பாய் உற்பத்தி பெருமளவில் குறையும் அபாயம் உள்ளது.
மேலும் மூலப் பொருளான கோரையின் விலையும் ஸ்திரமாக இருப்பதில்லை. தற்போது கோரை கட்டுக் கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலை உயரும்போது எங்களுக்கு அனுப்பப்படும் கோரை கட்டுகளின் சுற்றளவு குறைகிறது. ஆனால் அதற்கு உயர்த்தப்பட்ட விலையையே நாங்கள் கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே கோரைகளை கட்டுகளாக விலை நிர்ணயிப்பதை தவிர்த்து, கிலோ கணக்கில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசைத் தறி உற்பத்தியாளர்களுக்கு 750 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம் என அரசு அறிவித்தது. ஆனால் அதன் பயன் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் மற்றும் வட்டியில்லா நகைக் கடன் வழங்குவதைப்போல பாய் உற்பத்தியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை பிராட்வே பகுதியில் உள்ள பிரதான பாய் கடை சந்தைக்கு பாய்களை அரசுப் பேருந்துகளில் விற்பனைக்காக அனுப்பி வந்தோம். ஆனால் பிராட்வேயிலிருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டவுடன், பிராட்வே பாய் சந்தைக்கு நாங்கள் பாய்களை அனுப்புவதற்குப் பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே வந்தவாசியிலிருந்து பிராட்வேக்கு அரசுப் பேருந்துகளை இயக்கினால் எங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
மேலும் கோரைப்பாய்களை நாங்கள் நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பினை அரசு எங்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். கோரைப்பாய் உற்பத்திக்கு என தனி வாரியம் அமைக்க வேண்டும். வந்தவாசி நகரில் கோரை நெசவாளர் தொழில் பூங்கா அமைக்க வேண்டும். வந்தவாசி நகரத்தை பாய் நகரமாக அறிவித்து கோரைப்பாய் உற்பத்தி தொழிலைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com