டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமனம்

டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமனம்

டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டாடா சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், தற்போது, டி.சி.எஸ். தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான என். சந்திரசேகரனை டாடா சன்ஸ் தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. தேர்வுக் குழு ஒருமனதாக பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவரது சீரிய தலைமையின் கீழ் டாடா குழும நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்த சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு, 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாஸன் தலைமையிலான அந்தக் குழுவில், ரத்தன் டாடா, பெய்ன் கேபிடலின் அமித் சந்திரா, ரோனன் சென், குமார் பட்டாச்சார்யா ஆகியோரும் இருந்தனர்.
இந்தக் குழு, 4 மாதங்களுக்குள் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கான புதிய தலைவரைத் தேர்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்வுக்குழு டி.சி.எஸ். நிர்வாக இயக்குநர் சந்திரசேகரனை ஒருமனதாக டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளது. அதற்கான ஒப்புதலை இயக்குநர்கள் குழு வழங்கியுள்ளது.
வரும், பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி, டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் பொறுப்பேற்க உள்ளார்.
10,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.60 லட்சம் கோடி) மதிப்பில் உப்பு முதல் மென்பொருள் வரையிலான பல்வேறு வர்த்தகங்களில் கோலோச்சி வரும் டாடா நிறுவனங்கள் அனைத்தின் மேம்பாட்டாளர் பங்குகளை டாடா சன்ஸ் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
திருச்சியில் கல்வி: திருச்சி ரீஜனல் இன்ஜியனியரிங் கல்லூரியில் (ஆர்.இ.சி.) கம்யூட்டர் அப்ளிகேஷன் பட்டமேற்படிப்பை முடித்த என். சந்திரசேகரன் கடந்த 1987-ஆம் ஆண்டு டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று நிர்வாக இயக்குநரானார். இவர், மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது திறமையான நிர்வாகத்தின் கீழ் இயங்கிய டி.சி.எஸ். நிறுவனம், கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்தது. மேலும், ரூ.4.62 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் நாட்டின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com