அழுத்தத்துக்கு உள்ளாகி வரும் பங்குச் சந்தை

நிறுவனங்களின் திருப்தி அளிக்காத மூன்றாம் காலாண்டு செயல்பாடுகளால் ஏற்கெனவே அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்த பங்குச் சந்தை தற்போது மேலும் ஒரு புதிய விவகாரத்தால்
அழுத்தத்துக்கு உள்ளாகி வரும் பங்குச் சந்தை

நிறுவனங்களின் திருப்தி அளிக்காத மூன்றாம் காலாண்டு செயல்பாடுகளால் ஏற்கெனவே அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்த பங்குச் சந்தை தற்போது மேலும் ஒரு புதிய விவகாரத்தால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 20) அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அமெரிக்காவை மீண்டும் வலிமை மிக்க நாடாக மாற்றுவேன் என்ற வாக்குறுதியுடன் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பது அவருடைய முக்கிய கொள்கைகளில் ஒன்றாக உள்ளது.
அந்த நாட்டில் பல தொழில்களும் அயல் பணி முறையில் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டன. தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்த அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புத் துறையே கூட தற்போது அயல் பணி முறைக்கு மாறியது.
டிஜிட்டல் மயமான புது யுகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையும் பெரும்பாலும் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கே வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறை வேலைவாய்ப்புகளைப் பொருத்தவரை, வரலாற்று ரீதியாகப் பார்க்கையில், 2000-ஆம் ஆண்டு ஏற்பட்ட "ஒய்-2-கே' நெருக்கடிக்குப் பிறகுதான் இந்தியா போன்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்புகள் செல்லத் தொடங்கின.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் மதிப்பு தற்போது 15,000 கோடி டாலர் (சுமார் ரூ. 10.2 லட்சம் கோடி) என்று கூறப்படுகிறது. சுமார் 80 நாடுகளில் உள்ள 200 நகரங்களில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் அந்தத் துறையின் வருவாயில் 60 சதவீத அளவு அமெரிக்காவின் பங்களிப்பாக உள்ளது. அமெரிக்காவிலிருந்து இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிடைக்கும் தொழில் வாய்ப்புகள் சரிந்தால் நாடு எவ்வளவு கடுமையாக பாதிக்கப்படும் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
சீனா உள்ளிட்ட நாடுகளிலும் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை ஏற்படுத்தக் கூடிய தாக்கம் கணிசமாகவே இருக்கும். இவையெல்லாம் உலகப் பொருளாதாரத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் அதிபர் டிரம்ப்பின் தேர்தல் பிரசாரம் வேறு, நடைமுறை என்பது வேறு என்று பார்வையாளர்கள் தேறுதல் கூறுகின்றனர்.
இந்த நிலையில், உடனடி அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு இடமாக பங்குச் சந்தை குறிப்பிடப்படுகிறது. "வரும் வாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடும் தொழிற் கொள்கை இந்திய பங்குச் சந்தைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று கோட்டக் செக்யூரிட்டீஸ் முதலீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சீவ் ஜர்படே கூறுகிறார். மேலும், நமது நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள், இறுதிக் காலாண்டு செயல்பாடு குறித்த எதிர்பார்ப்புகள், மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் ஆகியவையும் முதலீட்டாளர்களுக்கு நெருக்குதலை அளிக்கும் என்கிறார் அவர்.
எச்.டி.எஃப்.சி., பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் ஆகிய பெருநிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு செயல்பாடு குறித்த அறிக்கைகள் இந்த வாரம் வெளியாகவுள்ளன.
இந்திய பங்குச் சந்தையின் போக்கை இவை நிர்ணயிக்கும். அதையடுத்து, மத்திய பட்ஜெட் அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் எபிக் ரிசர்ச் நிதி ஆய்வு நிறுவனத்தின் முஸ்தபா நதீம்.
முன்பேர சந்தை கணக்குகளை இந்த வாரம் முடிக்க வேண்டும். அது பங்குச் சந்தையில் கடும் ஏற்ற இறக்கத்துக்கு வழி வகுக்கும் என்பது நிச்சயம் என்கிறார் ஆம்ரபாலி ஆத்யா நிதி ஆலோசனை நிறுவனத்தின் அப்னீஷ் குமார் சுதான்சு.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாதிக்கும் பி-நோட் பயன்பாடு குறித்த அறிவிப்பை செபி இவ்வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகே பங்குச் சந்தைகளில் ஒரு தெளிவு பிறக்கும் என்பது பெரும்பாலான முதலீட்டாளர்களின் கணிப்பாக இருக்கிறது.
பங்குச் சந்தையில் 82 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 82 புள்ளிகள் உயர்வு பெற்று சென்செக்ஸ் 27,117 புள்ளிகளாக நிலைத்தது. பங்குச் சந்தைகளில் நாள் முழுவதும் கடும் ஏற்ற-இறக்கம் நிலவியது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் 42 புள்ளிகள் உயர்வு பெற்று, நிஃப்டி குறியீடு 8,391 புள்ளிகளாக நிலைத்தது.
உலகின் பிற முக்கிய பங்குச் சந்தைகளிலும் கடும் ஏற்ற-இறக்கம் காணப்பட்டு, வர்த்தக இறுதியில் அவை இழப்பில் முடிவுற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com