இந்தியா சிமென்ட்ஸ்: நிகர லாபம் ரூ.35 கோடி

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் கடந்த 2016 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 3-ஆவது காலாண்டில் ரூ.35.34 கோடியை நிகர லாபமாக ஈட்டியது.
இந்தியா சிமென்ட்ஸ்: நிகர லாபம் ரூ.35 கோடி

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் கடந்த 2016 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 3-ஆவது காலாண்டில் ரூ.35.34 கோடியை நிகர லாபமாக ஈட்டியது.
இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீநிவாசன் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசியதாவது:
பெட்கோக், வெளிநாட்டு நிலக்கரி ஆகியவற்றின் விலை அதிகரித்த போதிலும் நிர்வாகச் செலவுகளை கட்டுப்படுத்தியதாலும், உற்பத்தியை மேம்படுத்தியதாலும் கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.3 கோடியாக இருந்த நிகர லாபம் தற்போது ரூ.35 கோடியாக உயர்ந்துள்ளது.
சிமென்ட் விற்பனை 19.37 லட்சம் டன்னிலிருந்து தற்போது 23.59 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த உற்பத்தி திறனில் தற்போது 65 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்கிறோம்.
சிமென்ட் துறையைப் பொருத்தவரை அதிகாரப்பூர்வ தகவல்படி மூன்றாவது காலாண்டில் உற்பத்தியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு நாடு முழுவதும் 4.3 சதவீத வளர்ச்சியையும், தென்னிந்தியாவில் 8 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கட்டுமான வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களும், தனிநபர், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிச்சலுகையும் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டபோது தொடக்கத்தில் சிமென்ட் விற்பனையில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. இருப்பினும் அடுத்தடுத்த வாரங்களில் காசோலை பரிமாற்றம், பண பரிவர்த்தனைக்கான பி.ஓ.எஸ். கருவி பயன்பாடு ஆகியவை வெகுவாக அதிகரித்தது.
இது தொடர்பான உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்பட பல பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிமென்ட் விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்களைச் சந்தித்து கருத்துக் கேட்டேன். அப்போது பண மதிப்பிழப்பு அறிவிப்பால் சிமென்ட் விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றனர். விநியோகஸ்தர்கள், வணிகர்களுக்கு பி.ஓ.எஸ். கருவியை சலுகை விலையில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com