புதிய ஆண்டில் இந்தியாவும் உலகப் பொருளாதாரமும்

உலக அளவில் ஒவ்வொரு நாடும் 2016-இல் பொருளாதாரத் தேக்க நிலையை எதிர்கொண்டன.
புதிய ஆண்டில் இந்தியாவும் உலகப் பொருளாதாரமும்

உலக அளவில் ஒவ்வொரு நாடும் 2016-இல் பொருளாதாரத் தேக்க நிலையை எதிர்கொண்டன. கடந்த ஆண்டு பொருளாதாரத் துறையைப் பொருத்தவரையில் மிகவும் மோசமான ஆண்டாக இருந்தது என்றால் அது மிகையல்ல.
2017-ஆம் ஆண்டிலாவது பொருளாதாரத்தை சீரமைத்து, பல்வேறு பிரச்னைகளிலிருந்தும் விடுபட முனைப்புடன் உலக நாடுகள் செயலாற்றி வருகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரையில், உயர் மதிப்பு கரன்சி வாபஸ் விவகாரமானது, நமது பொருளாதாரத்தை ஒரு புதிய கோணத்தில் செல்ல வைத்துள்ளது என்று கூறலாம்.
2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு அப்படி ஓர் அறிவிப்பை பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என்று யாராவது எதிர்பார்த்தார்களா? நாட்டில் 85 சதவிகித அளவுக்குப் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 கரன்சி நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு சாதாரணக் குடிமகன் முதல் கருப்புப் பண முதலைகள் வரை அனைவரையும் குலை நடுங்கச் செய்தது. அவர் அறிவிப்பு வெளியிட்டு, 75 நாள்களாகிவிட்டன. இருந்தாலும், பணப் புழக்கம் முற்றிலும் இயல்பு நிலைக்கு வரவில்லை. ஆரம்பத்தில், வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் செலவிட கையில் பணமின்றி சிரமப்பட்ட மக்கள், இன்று அந்த சிரமத்தையும் பழகிக் கொண்டு விட்டார்கள் என்று கூடச் சொல்லலாம். இன்னும் ஏ.டி.எம்.கள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. தொழில் நிறுவனங்கள் மீண்டு வரவில்லை. அறிவிப்புக்கு எதிரான போராட்டங்களும் முடிந்தபாடில்லை.


ஊழல், கருப்புப் பணப் புழக்கம் ஆகியவற்றை ஒழிப்பதே தமது முக்கிய நோக்கம் என்று சூளுரைத்த பிரதமர், ஏழைகளின் நலனுக்காகவே இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார். செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ரூ.15.44 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தன. இவற்றில் ரூ.12.44 லட்சம் கோடி மதிப்பிலான கரன்சிகள் வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன. அதாவது, 80 சதவிகிதத் தொகை மீண்டும் வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. காகித கரன்சி புழக்கத்துக்குப் பதிலாக, மின்னணு பணப் பரிமாற்ற முறை இந்த இரண்டு மாத காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. ரொக்கப் பயன்பாடு குறைவாக உள்ள பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை முனைப்புடன் செயல்படுத்த பல்வேறு சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இதற்காக பல்வேறு தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொபைல் வாலெட்டுகள் பற்றி போதிய விழிப்புணர்வு 2012-13 ஆம் நிதியாண்டில் பெரிய அளவில் ஏற்படவில்லை. இதை யாரும் பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். 2013-14ஆம் நிதியாண்டில் இதன் மூலம் சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது. 2014-15ஆம் நிதியாண்டில் பரிவர்த்தனை ரூ.1,00,000 கோடி அளவுக்கு இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டில் ரூ.5,00,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது என்று அசோசேம் அமைப்பு தெரிவித்துள்ளது. அதுபோல, கடன் அட்டை, பற்று அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கடன் அட்டை, பற்று அட்டை பெற பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான இரண்டு நாள்களுக்குள் சுமார் 10 லட்சம் கடன் அட்டை, பற்று அட்டை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தி மேம்பட ஒவ்வொரு நாடும் பல சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதாக அறிவித்த பிறகு, அந்த நாடு தனக்கென பொருளாதாரக் கொள்கையை வகுத்து வருகிறது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் பிரிட்டனின் பொருளாதாரம் 0.6 சதவிகித அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அந்நாட்டின் சேவைத் துறையில், இரண்டாவது காலாண்டில் 1 சதவிகித அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2017-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான வளர்ச்சி ஏற்படும் என்று அந் நாட்டு பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், 2017-இல் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
ஜப்பானைப் பொருத்த வரையில், சந்தைப் பொருளாதாரத்தில் உலக அளவில் 4-ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் உலக அளவில் 3-ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. இந்த நாட்டில் உள்ள வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை பல ஆண்டுகளாக மாற்றியமைக்காமல் உள்ளன. மேலும், ஜப்பான் அரசும் பல்வேறு சலுகைகளை ஏற்றுமதியாளர்களுக்கு அளித்து வருகிறது. அதன் மூலம் வருவாய் பெருகும், நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.


இந்நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்த ஐரோப்பிய மத்திய வங்கியும் கடனுக்கான வட்டி விகிதத்தை பெரிய அளவில் மாற்றியமைக்கவில்லை.
பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் குறைந்து வருவதையடுத்து, ஓ.பி.இ.சி. என்று அழைக்கப்படும் பெட்ரோலியப் பொருள்கள் உற்பத்தி-ஏற்றுமதி செய்யும் நாடுகள், கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளன.
அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் அண்மையில் பதவியேற்றார். இவரும் அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சில கொள்கைகளை வகுத்துள்ளார். அவற்றில் சில மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. நிறுவனங்களுக்கான வரியை தற்போதைய 35 சதவிகித அளவிலிருந்து 15 சதவிகிதமாகக் குறைப்பது, வெளிநாடுகளில் தலைமையகங்களைக் கொண்டுள்ள அமெரிக்க நிறுவனங்களை தாய்நாட்டுக்கே மீண்டும் கொண்டு வர உதவும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1 லட்சம் கோடி டாலர் செலவிடுவது - இவை குறிப்பிடத்தக்க திட்டங்கள். இவற்றின் மூலம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று டிரம்ப் நம்புகிறார்.
இதேபோல, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பல்வேறு பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றன.
இனி, நமது நாட்டுக்கு வருவோம். உயர் மதிப்பு கரன்சி மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியும், லஞ்சம், ஊழல் குறையும். முக்கியமாக, பல்வேறு வரிகளைச் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம், கஜானா நிறையும். இந்த நிதியானது, நாட்டில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும். ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஆனால் அந்த நடவடிக்கைக்கு உடனே கைமேல் பலன் கிடைக்குமா என்பதுதான் பொதுவாக எழுப்பப்படுகிற கேள்வி. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அடுத்த 2, 3 காலாண்டுகளுக்கு நுகர்வு சாதனங்களின் விற்பனை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், 2017-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 1 - 1.5 சதவிகித அளவில் பாதிப்பு இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும், ரொக்கப் பரிமாற்றத்தைச் சார்ந்துள்ள துறைகள் பல்வேறு விதங்களில் பாதிப்படையும். சிறு வர்த்தகத்தைச் சார்ந்துள்ள பெருவர்த்தகப் பிரிவு, சில வகை ஏற்றுமதிகள் பாதிக்கப்படாது. மேலும், தகவல் தொழில்நுட்பம், மருந்துப் பொருள் உற்பத்தி, பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம் சார்ந்த நிறுவனங்களில் 43 சதவிகித நிறுவனங்கள் பாதிக்கப்படாது. வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள், ஆட்டோமொபைல், நிதி சேவைகள் துறை என 53 சதவிகித நிறுவனங்கள் இரண்டு காலாண்டுகளுக்கு பாதிப்பைச் சந்திக்கும். மேலும், சிமெண்ட், பெயிண்ட் ஆகிய பிரிவுகளில் 4 சதவிகித நிறுவனங்களே இரண்டு காலாண்டுகளுக்கும் மேல் பாதிப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். 2017-இல் ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்படும், தங்கம் விலை குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை மாதம் நடைமுறைக்கு வரவிருக்கும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொழில் துறையில் பல்வேறு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். சில மாற்றங்கள் உடனே நிகழ்ந்துவிட வாய்ப்பில்லை. இவற்றுக்கென பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகட்டும், ஜி.எஸ்.டி. அமலாக்கம் ஆகட்டும், அவற்றால் உடனே பலனை எதிர்பார்க்க முடியாது. அதற்கு சில மாதங்கள், சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால், அது நிரந்தரப் பயனாக இருக்கும் என்று நம்பலாம்!
- பா.ராஜா


* பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியும், லஞ்சம், ஊழல் குறையும், பல்வேறு வரிகளைச் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம், கஜானா நிறையும். இந்த நிதியானது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும்.*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com