ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 18% ஜி.எஸ்.டி.: தடுமாறும் பின்னலாடை தொழில் துறை

பின்னலாடைத் துறையைப் பொருத்த வரை, உற்பத்தி நிறுவனங்களை சார்ந்து, தையல், பிரிண்டிங், செக்கிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் திருப்பூரில் மட்டுமே பல்லாயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன.
ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 18% ஜி.எஸ்.டி.: தடுமாறும் பின்னலாடை தொழில் துறை

பின்னலாடைத் துறையைப் பொருத்த வரை, உற்பத்தி நிறுவனங்களை சார்ந்து, தையல், பிரிண்டிங், செக்கிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் திருப்பூரில் மட்டுமே பல்லாயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. கீழ் 18 சதவீத வரி அறிவிப்பு ஜாப் ஒர்க் நிறுவனங்களைக் கடுமையாக பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதால், ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்து அறிவித்தது.
மத்திய அரசின் அறிவிப்புக்குத் தொழில் துறையினர் உள்ளிட்டோர் மத்தியில் பெரும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பை உற்று நோக்கியவர்களுக்கே புரிந்தது, மத்திய அரசானது சில முக்கிய அம்சங்களைத் தவிர்த்தே ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்து அறிவித்துள்ளது என்பது.
குறிப்பாக, ஜாப் ஒர்க் ஆன் யார்ன் (நூல்), ஜாப் ஒர்க் ஆன் பேப்ரிக் (துணி) ஆகியவற்றுக்கு வரியைக் குறைத்த மத்திய அரசு, துணியை வெட்டிய பிறகு பின்னலாடைத் துறையில் மேற்கொள்ளப்படும் ஜாப் ஒர்க் பணிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதமாகவே வைத்துள்ளது.
குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால், பின்னலாடைத் துறையில் மேற்கொள்ளப்படும் நிட்டிங், டையிங், பிளீச்சிங், ரோட்டரி பிரிண்டிங், ரைஸிங், ரோல் வாஷிங், காம்பேக்டிங், பேப்ரிக் கட்டிங் ஆகிய பணிகளுக்கு 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், செஸ்ட் எம்ப்ராய்டரிங், செஸ்ட் பிரிண்டிங், தையல், கார்மென்ட் வாஷிங், காஜா பட்டன், கையால் மேற்கொள்ளப்படும் எம்ப்ராய்டரி, செக்கிங், அயர்னிங், பேக்கிங் ஆகிய ஜாப் ஒர்க் பணிகளுக்கு 18 சதவீத வரியே நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இவ்விஷயத்தில் பாரபட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பின்னலாடைத் துறையை அரசு முழுமையான கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தொழில் துறையினர் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் ஆண்டுக்கு ரூ. 28 ,000 கோடி ஏற்றுமதி வர்த்தகமும், ரூ. 12 ,000 கோடி அளவுக்கு உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுவதில், மேற்கூறப்பட்ட வெட்டப்பட்ட துணிகள் மீதான ஜாப் ஒர்க் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலில், தையல், செக்கிங், பேக்கிங், அயர்னிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் பணிகளைப் பொருத்த வரை, பெரும்பாலும் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு உற்பத்திப் பொருள் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு குறைந்த முதலீட்டில் சிறு பரப்பளவில் நடத்தப்படும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் மூலமாக கிராமப்புறப் பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறுகின்றனர்.
ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்குப் பணிகளை (ஆர்டர்) அளிக்கும் நிறுவனங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையே ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான கூலியை அளிப்பது வழக்கம். இச்சூழலில் 18 சதவீத வரி என்பதை மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்பது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கடியை அளிக்கக் கூடியதாகும். இதனால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்னரே எச்சரிக்கப்பட்டது.

வேலையிழக்கும் தொழிலாளர்கள்

இந்நிலையில், வரி விதிப்பின் தாக்கமானது தற்போது வெளிப்படத் தொடங்கி விட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளனர். பலர் மீண்டும் நகரத்தை நோக்கி வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.
ஆர்டர் அளிக்கும் பெரும் நிறுவனங்கள், 18 சதவீத வரி விதிப்பை தாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதாலும், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் அதைச் சமாளிக்க அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க முடியாத சூழலாலும், மேற்படி ஜாப் ஒர்க் பணிகளைத் தாங்களே மேற்கொள்ளத் தொடங்கியிருப்பது முக்கியக் காரணம் என்கிறார், இளம் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் துணைத் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினருமான கே.சி.எம். குமார் துரைசாமி.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
18 சதவீத வரியை சம்பந்தப்பட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இல்லையெனில் ஜாப் ஒர்க் அளிக்கும் நிறுவனத்தினர் செலுத்தலாம் என்று ஜி.எஸ்.டி.யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் தொழில் பிரச்னைகளில், வேலையளிக்கும் நிறுவனங்கள் எதற்காக கூடுதல் சுமையை ஏற்றுக் கொண்டு ஜாப் ஒர்க் அளிக்க வேண்டும்?
பதிலாக, கூடுதல் பணியாளர்கள், இயந்திரங்களை வைத்து, வெளியில் கொடுத்து மேற்கொள்ளப்படும் ஜாப் ~ஒர்க் பணிகளைத் தாங்களே செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டு, அதைச் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டதே ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு முக்கிய காரணம்.
மேலும், 18 சதவீத வரி விதிப்பை சமாளிக்க முடியாது என்பதாலும் அவை மூடப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 7,000 ஜாப் ஒர்க் நிறுவனங்களில் தற்போது 2,000 நிறுவனங்கள் வரை மூடப்பட்டுவிட்டன. பிற நிறுவனங்களும் மந்த நிலையில்தான் செயல்படுகின்றன. இதனால் கிராமப்புறத் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால், பல லட்சம் தொழிலாளர்கள் விரைவில் வேலையிழக்கும் சூழல் ஏற்படும். தொழிலாளர்களாக இருந்து சிறு முதலாளிகளாக மாறிய பலர், தற்போது மீண்டும் தொழிலாளிகளாக மாறியுள்ளனர். இது தடுக்கப்பட வேண்டும். நாடு முழுவதுமே பின்னலாடைத் துறையில் இத்தகைய சூழல்தான் நிலவுகிறது.
18 சதவீத வரியை 5 சதவீதமாக மத்திய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும். இல்லையெனில் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், ஏற்றுமதியும் பாதிக்கப்படும். தேக்க நிலை ஏற்பட்டு உற்பத்தி வளர்ச்சி குறையும். இந்திய தொழில் துறையின் முதுகெலும்பாக உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களை அரசு காப்பாற்ற வேண்டும் என்றார்.

முற்றிலும் வரி விலக்கு வேண்டும்

இதுகுறித்து திருப்பூர் தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:
ஜாப் ஒர்க் நிறுவனங்களை நம்பியே உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு உற்பத்தி நிறுவனங்களையும் பாதிக்கும். 18 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை, ஜாப் ஒர்க் நிறுவனத்தினரை தொழிலை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளியுள்ளது.
பின்னலாடைத் துறையைப் பொருத்த வரை, உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு சரக்கு கையிலிருந்து சென்ற பிறகே அதற்கான பணம் கையில் கிடைக்கும். அதற்குப் பிறகே ஜாப் ஒர்க் நிறுவனத்தினருக்கு உரிய கூலி வழங்கப்படும். இந்நிலையில், மாதந்தோறும் அவர்கள் வரி செலுத்த வேண்டுமானால், அதற்குரிய தொகையை உற்பத்தி நிறுவனங்களிடம் எதிர்பார்க்க நேரிடும். அத்தகைய நிலையில், மாதந்தோறும் பணம் கொடுப்பதற்கு பதிலாக ஜாப் ஒர்க் பணிகளை உற்பத்தி நிறுவனங்கள் தாங்களே மேற்கொள்ளும். அதனால் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு வேலையில்லாது போகும். அதுவே தற்போது நிகழ்ந்து வருகிறது.
ரூ. 100 கோடி முதலீட்டில் தொழில் செய்வோருக்கு 5 சதவீத வரி விதித்துள்ள அரசு, ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழில் செய்வோருக்கு 18 சதவீதம் வரி விதித்திருப்பது ஏற்புடையதல்ல. ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.
நீண்ட கால கண்ணோட்டத்துடன் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வந்திருந்தாலும், இதுபோன்ற அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விஷயங்களில் உடனடி மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com