ஜி.எஸ்.டி. எதிரொலி: எப்.எம்.சி.ஜி. பொருள்கள் விற்பனை குறையும்

ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் பிஸ்கட் உள்ளிட்ட வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களின் (எப்.எம்.சி.ஜி) விற்பனை தாற்காலிகமாக குறையும் என பிரிட்டானியா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. எதிரொலி: எப்.எம்.சி.ஜி. பொருள்கள் விற்பனை குறையும்

ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் பிஸ்கட் உள்ளிட்ட வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களின் (எப்.எம்.சி.ஜி) விற்பனை தாற்காலிகமாக குறையும் என பிரிட்டானியா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தற்போதுள்ள பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சமச்சீரான வரி விதிப்பை நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தவுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்துவதற்கான அனைத்து பூர்வாங்கப் பணிகளும் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன.
ஜி.எஸ்.டி. அமலாக்கம் எப்.எம்.சி.ஜி. விற்பனையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டானியாவின் விநியோக பங்குதாரர் நிறுவனங்கள் தங்களது கையிருப்பை கணிசமாக குறைத்து வருகின்றன என்று தெரியவந்துள்ளது. அதன் எதிரொலியாக, விநியோக நிறுவனங்களுக்கு எவ்வளவு பொருள்களை அனுப்பி வைக்க வேண்டும் என்பதில் இருதரப்பினருக்கும் இடையே தெளிவற்ற நிலை காணப்படுகிறது.
ஆனால், ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் விற்பனை குறைவு என்பது தாற்காலிகமாகவே இருக்கும். அடுத்த மூன்று மாதங்களில் விற்பனை சகஜ நிலைக்கு திரும்பும். அதுவரை எப்.எம்.சி.ஜி. நிறுவனங்களுக்கு நெருக்கடியான கால கட்டமாகவே இருக்கும். ஜி.எஸ்.டி. அமலாக்கம் பொருள்கள் விற்பனையை எந்த விதத்தில் பாதிப்பதாக உள்ளது என்பது விநியோக நிறுவனங்களுடனான நேரடி தொடர்பின் மூலம் கண்டறியப்படும் என்கிறார் பிரிட்டானியாவின் நிர்வாக இயக்குநர் வருண் பெரி.
விநியோக நிறுவனங்களின் கையிருப்பு குறைப்பால் ஏற்படும் இடர்பாடு மற்றும் புதிய வரி விதிப்பு நடைமுறைக்குப் பிறகு, பொருள்களை வாங்கும் பழக்கத்தை நுகர்வோர் எவ்வாறு கையாள்கின்றனர் போன்றவை குறித்து அடுத்து வரும் 3-6 மாதங்களில் தெரியவரும்.
மத்திய அரசு, ஜி.எஸ்.டி.யில் பிஸ்கட்டுக்கு 18 சதவீத வரியை நிர்ணயித்துள்ளது. புதிய வரி விகிதங்கள் பெரும்பாலும் நடுநிலையானதாகவே உள்ளன. அதற்கான பலன் எப்.எம்.சி.ஜி. துறை நிறுவனங்கள் மற்றும் நுகர்வோருக்கு நீண்ட கால அடிப்படையில் தான் கிடைக்கும் என்கிறார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com