மின் மிகை தேசமாகும் இந்தியா!

மின் பற்றாக்குறை வெகுவாக குறைந்துள்ளதையடுத்து, நடப்பு நிதி ஆண்டிலேயே இந்தியா மின் மிகை தேசமாக உருவெடுக்கும் சூழல் கனிந்துள்ளது.
மின் மிகை தேசமாகும் இந்தியா!

மின் பற்றாக்குறை வெகுவாக குறைந்துள்ளதையடுத்து, நடப்பு நிதி ஆண்டிலேயே இந்தியா மின் மிகை தேசமாக உருவெடுக்கும் சூழல் கனிந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் 1.4 சதவீதமாக காணப்பட்ட மின் பற்றாக்குறை நடப்பாண்டில் இதே கால அளவில் 1 சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 0.5 சதவீதமாக சரிந்துள்ளது.
குறிப்பாக, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி மாநிலங்களில் மின் பற்றாக்குறை என்பது 0.1 சதவீதம் அளவுக்கே இருந்தது. அதேசமயம், வட கிழக்கு மாநிலங்களில் மின் பற்றாக்குறை 4.5 சதவீதமாகவும், வடக்குப் பகுதிகளில் 1.5 சதவீதமாகவும் இருந்தது.
நடப்பு ஆண்டு ஏப்ரலில் நாடு முழுவதிலும் உச்சகட்ட பயன்பாட்டு நேர மின் பற்றாக்குறை அளவு கூட 0.8 சதவீதமாக சரிந்துள்ளது. நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இது 0.1 சதவீமாகவே காணப்பட்டது.
இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உச்சகட்ட பயன்பாட்டு நேர மின் பற்றாக்குறை 2.2 சதவீதமாகவும், வடக்கு பகுதிகளில் இது 1.8 சதவீதமாகவும் காணப்பட்டதாக மத்திய மின் ஆணையம் தெரிவிக்கிறது.
நடப்பு ஆண்டு ஏப்ரலில் பல மாநிலங்களில் மின் பற்றாக்குறை என்பது இல்லை. மேலும், உச்சகட்ட நேர மின் பற்றாக்குறையும் பூஜ்யமாகவே இருந்தது. சத்தீஸ்கர், குஜராத். ஹரியாணா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிஸா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த நிலை காணப்படுகிறது.
அதேசமயம், ஆந்திரம், தில்லி, ஹிமாசல பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், மேகாலயம், புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரகண்ட் மாநிலங்களில் மின் மற்றும் உச்சக்கட்ட நேர மின் பற்றாக்குறை என்பது 1 சதவீத அளவுக்கே காணப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் மின் பற்றாக்குறை என்பது 14 சதவீதமாக மிகவும் அதிகரித்திருதது. ஆனால், தற்போது அந்தப் பற்றாக்குறையின் அளவு 1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதுதவிர, உச்சகட்ட மின் பற்றாக்குறையும் பூஜ்யமாக உள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகளால், நடப்பு நிதி ஆண்டில் இந்தியா மின் மிகை தேசமாக உருவெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது என்கிறது மத்திய மின்துறைஅமைச்சகம்.
இந்தியா முழுவதிலும் மின் உபரி 8.8 சதவீதமாகவும், உச்கட்ட மின் உபரி 6.8 சதவீதமாகவும் இருக்கும்.
குறிப்பாக, தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் வட-கிழக்கு மாநிலங்களில் மின் உபரியின் அளவு முறையே 7.4 சதவீதம், 13 சதவீதம், 9.8 சதவீதம், 3 சதவீதமாக இருக்கும்,
அதேநேரம், கிழக்கு மாநிலங்களில் மின்பற்றாக்குறை வெறும் 0.2 சதவீதமாக காணப்படும். இதர மாநிலங்களின் உபரியைக் கொண்டு இந்தப் பற்றாக்குறை ஈடு செய்யப்படும். உச்சக்கட்ட நேர மின் உபரியின் அளவு வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு, மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முறையே 6.7 சதவீதம், 17.2 சதவீதம், 1 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 2.7 சதவீதமாக இருக்கும் என்கிறது மத்திய மின் அமைச்சகம்.
இவை தவிர, கடன் உள்ளிட்ட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அனல் மற்றும் புனல் மின் உற்பத்தி நிலையங்களின் இடர்பாட்டைத் தீர்த்து அவை மீண்டும் செயல்பட வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருக்கிறார்.
வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடம் இது தொடர்பாகப் பல சுற்றுப் பேச்சுவார்த்தை ஏற்கெனவே நடத்தப்பட்டுவிட்டது என்கிறார் அவர். இதில் சம்பந்தப்பட்டுள்ள தொகை ரூ. 16,709 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டால், இதன் மூலம், 11,639 மெகாவாட் உற்பத்தி திறன் சீரடையும்.
அடுத்த ஐந்தாண்டுகளில், நாட்டில் அனல் மின் திட்டங்களின் உற்பத்தித் திறனைவிட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. ஆண்டுக்கு 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறன் உருவாக்கப்பட்டு வருகிறது.

* அடுத்த ஐந்தாண்டுகளில், நாட்டில் அனல் மின் திட்டங்களின் உற்பத்தித் திறனைவிட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் அதிகமாக இருக்கும்*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com