1000 ஹெலிகாப்டர்கள்! 100 விமானங்கள்! எச்.ஏ.எல். தயாரிக்கத் திட்டம்

பொதுத் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்.ஏ.எல்.), விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் தயாரிக்கும் திட்டத்தை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளது.

பொதுத் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்.ஏ.எல்.), விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் தயாரிக்கும் திட்டத்தை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளது.
ராணுவத் தளவாடப் பொருள்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முன்னணி நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னிறைவு, அன்னியச் செலாவணி மிச்சப்படுத்துதல் நோக்கத்துடன் மத்திய அரசு உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தீர்மானித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளைத் தளர்த்துவது உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனை சிறந்த வாய்ப்பாக கருதிய எச்.ஏ.எல். நிறுவனம் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ராணுவத்துக்குத் தேவையான ஹெலிகாப்டர்கள், விமானங்களை உருவாக்கும் திட்டத்தை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து எச்.ஏ.எல். தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி. சுவர்ணா ராஜு தெரிவிக்கும்போது: இந்திய விமானப் படைக்கு 123 தேஜஸ் இலகு ரக போர் விமானங்களைத் தயாரித்து அளிக்க வேண்டியுள்ளது. அதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் முழு அளவில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 8 தேஜஸ் விமானங்களை மட்டுமே தயாரிக்க முடியும். வரும் 2018-19 நிதியாண்டு முதல் இந்த எண்ணிக்கை 16-ஆக அதிகரிக்கும்.
தேஜஸின் இறக்கைகள், விமான உடற்பகுதி உள்ளிட்டவற்றை இதர நிறுவனங்களிடமிருந்து வாங்கும்போது அதன் உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகள் உண்மையில் நிறுவனத்துக்கு மிக முக்கியமான காலகட்டம் ஆகும். இதனை உணர்ந்து, சுகோய், ஜாகுவார், மிராஜ் மற்றும் ஹாக் உள்ளிட்ட போர் விமானங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த பத்து ஆண்டுகளில் கமோவ் 226 உள்ளிட்ட ராணுவத்துக்குத் தேவையான 1,000 ஹெலிகாப்டர்கள், இலகு ரகப் போர் ஹெலிகாப்டர்கள், அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை கட்டமைக்க வேண்டியுள்ளது. குறைந்த எடையுடைய பன்முகப் பயன்பாட்டைக் கொண்ட "கமோவ் 226டி' ஹெலிகாப்டர்களைத் தயாரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தத்தை எச்.ஏ.எல். மற்றும் ரஷிய பாதுகாப்பு நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
பழைமையான சீட்டா மற்றும் சேதக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக கமோவ் 226டி அமையும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com