வாராக் கடன் பிரச்னைக்கு விரைவில் தீர்வு

வாராக் கடன் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான புதிய கொள்கை குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாராக் கடன் பிரச்னைக்கு விரைவில் தீர்வு

வாராக் கடன் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான புதிய கொள்கை குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலைபோல அதிகரித்து வரும் வாராக் கடன் வங்கி துறைக்கே மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால், வங்கிகள் செயல்பாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவைகளின் சொத்து மதிப்பும் சீரழிந்துள்ளது.
வாராக் கடன் பிரச்னைக்குத் தீர்வு காண துரித கதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு புதிய கொள்கை திட்டங்கள் வகுத்து வருகிறது.
புதிய கொள்கைத் திட்டம், கடன் வாங்கியவர்கள் திரும்பச் செலுத்தத் தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொண்டிருக்கும் என்று அண்மையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
வாராக் கடன் பிரச்னை என்பது ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் உருவாக்கியதல்ல. அதிகபட்சமாக 50 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டது.
எனவே, புதிய கொள்கை அதற்கேற்ற தீர்வு காணும் வழிமுறைகளைக் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வாராக் கடன் பிரச்னை தீர்வுக்கான கொள்கை உருவாக்கத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இம்மாத இறுதி அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் புதிய கொள்கை குறித்த அறிவிப்பு வெளியாகும்.
வங்கிகளின் மொத்த வாராக் கடனில் பெரும் தொகைகளின் பங்களிப்பு 70 சதவீதமாகும். அதிக மதிப்பு கொண்ட கடன் வழக்குகளில் வேகமாக தீர்வு காண, இறுதியாக ஒரு முறை வாய்ப்பளிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்தும் புதிய கொள்கையில் விரிவாக அலசப்பட்டுள்ளது.
புதிய கொள்கை வாராக் கடன் பிரச்னையில் வங்கிகளுக்குத் தெளிவான கண்ணோட்டத்தை வழங்கும் என்பதுடன், மத்திய அரசு கடனை திரும்பச் செலுத்தாதவர்களின் மீதான பிடியை இறுக்க ஏதுவாகவும் இருக்கும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்த வசதி இருந்தும் அதனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாமல் இழுத்தடிக்கும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய கொள்கையில் இடம்பெறும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com