விண்வெளித் தொழிலில் வானமே எல்லை!

2017, பிப்.15-ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அமெரிக்கா (96), ஸ்விட்சர்லாந்து (1), இஸ்ரேல் (1), கஜகஸ்தான் (1), ஐக்கிய அரபு அமீரகம் (1), நெதர்லாந்து (1), இந்தியா (3)
விண்வெளித் தொழிலில் வானமே எல்லை!

2017, பிப்.15-ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அமெரிக்கா (96), ஸ்விட்சர்லாந்து (1), இஸ்ரேல் (1), கஜகஸ்தான் (1), ஐக்கிய அரபு அமீரகம் (1), நெதர்லாந்து (1), இந்தியா (3) ஆகியவற்றின் 104 செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி விண்ணில் சீறிப்பாய்ந்தது பிஎஸ்எல்வி-37 ஏவுகலன்.
உலக நாடுகள் வியந்த விண்வெளி நிகழ்வை சப்தமில்லாமல் செய்து காட்டியிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ). விண்வெளி தொழில்நுட்பத்தைக் கட்டமைக்கவும், அதன் பயன்பாட்டை நாட்டின் பல்வேறு தேவைகளுக்கு உபயோகிக்கவும் 1969, ஆக.15-ஆம் தேதி தொடங்கப்பட்டதுதான் இஸ்ரோ.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொன்விழாவை எதிர்நோக்கியுள்ள இஸ்ரோ, 87 விண்கலங்களை உருவாக்கி விண்ணில் செலுத்தியது. உலகின் 23 நாடுகளில் இருந்து 180 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் விண்கலத்தையும், செவ்வாய் கிரகத்தின் பரப்பை ஆராய்ந்தறிய மங்கள்யான் விண்கலத்தையும் ஏவி, இந்தியாவின் தொழில்நுட்பத் திறனைஉலகுக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
மங்கள்யான் விண்கலத்தை குறைந்த செலவில் சாதித்துக் காட்டியதை உலக நாடுகள் இன்றும் விவாதப் பொருளாக வைத்துள்ளன.
48 ஆண்டு காலமாக இந்திய நாட்டுக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தை உருவாக்கி வந்த இஸ்ரோ, தனது விண்வெளிப் பயணத்தில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க முன்வந்துள்ளது.
ஏவுகலன் (ராக்கெட்), செயற்கைக்கோள்களுக்குத் தேவைப்படும் வன்பொருள்கள், உபகரணங்கள், துணைக் கருவிகள் தயாரிப்பில் மட்டும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதித்து வந்த இஸ்ரோ, ஏவுகலன், செயற்கைக்கோள், ஏவுதளம் ஆகியவற்றிலும் தனியாரை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.
2021-ஆம் ஆண்டுக்குள் 71 விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதால், ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சிறிய ஏவுகலன்கள், சிறிய செயற்கைக்கோள்களைத் தயாரிக்கவும், அவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகியவற்றை கற்றுக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின்கீழ் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க அரசுக்குச் சொந்தமாக உள்ள- தன்னிச்சையாக செயல்படும் நிறுவனம் (எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ஞஜ்ய்ங்க் ஹய்க் இர்ம்ல்ஹய்ஹ் ஞல்ங்ழ்ஹற்ங்க்-எஞஇஞ) என்ற திட்டத்தை வடிவமைத்துள்ள இஸ்ரோ, ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக 25 ஏவுதளங்கள், 10 திரவ தொலைநிலை மோட்டார் (எல்ஏஎம்) என்ஜின்கள், 200 உந்துவிசைக் கருவிகளை (திரஸ்டர்ஸ்) தயாரிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவிருக்கிறது.
இஸ்ரோவின் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் முயற்சிகள் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் தொழில் வாய்ப்புகளைப் பெருக்கியுள்ளதோடு, தொழில் முதலீடுகளுக்கான கதவுகளையும் திறந்துள்ளது.
இஸ்ரோவின் புதிய முயற்சிகள் குறித்து இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநரும், விண்வெளி விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சிப் பரப்பு, தேவை, பயன்பாடு விரிவடைந்துள்ளதால், விண்வெளிப் பயணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இஸ்ரோ செயல்படுத்தும் விண்வெளித் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவிருக்கிறோம்.
வன்பொருள்கள், உபகரணங்கள், துணைக் கருவிகளை மட்டும் தயாரித்து வழங்கிவந்த விண்வெளித் தொழில் நிறுவனங்களை செயற்கைக்கோள் சோதனை, கட்டுப்பாட்டுக் கருவிகள் சோதனை, செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனையிடல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்திருக்கிறோம்.
செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு முன்பாக பல கட்டப் பரிசோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது. அப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் திட்டம் வகுத்துள்ளோம். இதன் மூலம் விண்வெளித் தொழில் துறையில் அதிக அளவில் முதலீடுகள் குவிய வாய்ப்புள்ளது.
இஸ்ரோவின் தொழில்நுட்பத் திறன் மட்டுமல்லாது, கட்டமைப்பையும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும் தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ உதவும். ஐஆர்என்எஸ் செயற்கைக்கோள் திட்டத்தில் 5 நிறுவனங்கள் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மாதமொரு செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்த இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளதால், அதைச் செயல்படுத்த குறைந்தது 4-5 நிறுவனக் குழுக்கள் தேவைப்படும். இதன்மூலம் ஒரே நேரத்தில் 4-5 செயற்கைக்கோள்களைத் தயாரிக்க முடியும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயற்கைக்கோள்களைத் தயாரித்து, விண்ணில் செலுத்த இயலும். அதாவது 18 மாதங்களில் ஒரு செயற்கைக்கோளைத் தயாரித்து, விண்ணுக்கு அனுப்பி வைக்க முடியும்.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் ஒப்பந்தப்புள்ளி வழியே அனுமதிக்கப்படும். தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்பத் திறன், கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். தற்போது 75 நிறுவனங்கள் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.
ஏவுகலன், செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படும் முக்கியத்துவம் வாய்ந்த, உயர் தரமான, அதிநுண்ணிய பல உதிரி பாகங்கள், வயர்கள், உபகரணங்கள், ஹீட்டர்கள், ரெசிஸ்டர்கள், கெப்பாசிட்டர்கள், ஐசிக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு பெருகினால், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தில் இவை அனைத்தையும் இந்தியாவில் உற்பத்தி செய்யலாம். செயற்கைக்கோள்களைச் சோதிப்பது மட்டுமின்றி, இயக்குவது, பயன்படுத்துவதிலும் தனியார் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றலாம்.
குறிப்பாக, ஒன்று முதல் பத்து கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களைத் தயாரிக்க முன்னுரிமை அளித்துவருகிறோம். ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் செயலாற்றக்கூடிய யூஎஸ்பி இன்டர்பேஸான ககன் டாங்கலையூம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
செயற்கைக்கோள்கள் மூலம் கிடைக்கும் புவிவெளி சார்ந்த தரவுகளைப் பயன்படுத்தி பொலிவுறு நகரத் திட்டம், நகரத் திட்டமிடல் போன்றவற்றுக்கு ஆலோசனைகளை வழங்கும் சேவைகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடலாம்.
ஐ.ஆர்.என்.எஸ். செயற்கைக்கோளில் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி விமானங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட சாலை வாகனங்களின் போக்குவரத்தைக் கண்காணித்து சீர்படுத்தலாம். தானியங்கி சேவைகளுக்கு செயற்கைக்கோள்களின் தரவுகள் பயன்படுத்தலாம்.
கப்பல் போக்குவரத்து, மீன்பிடி எல்லை கண்காணிப்பு, வனவிலங்கு மேலாண்மை, காட்டுத் தீ கட்டுப்பாடு, விவசாயப் பரப்பு மற்றும் விளைச்சல் போன்ற பல பணிகளுக்கு செயற்கைக்கோளின் உதவி தேவைப்படுகிறது.
பாலம், மேம்பாலம், வீடு, கட்டடம் போன்றவற்றின் கட்டுமானப் பணிகளை செயற்கைக்கோள் வழியே கண்காணிக்க இயலும். அதற்கேற்ப புதிய செயற்கைக்கோள்களைத் தயாரித்து, விண்ணில் செலுத்த வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
இதை விரைந்து சாத்தியமாக்குவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியப் பங்காற்றும். விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வானமே எல்லை என்பதை இந்திய அரசும், இஸ்ரோவும் அறிந்துள்ளன.
அடுத்த 3-4 ஆண்டுகளில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை அனுப்பவிருக்கிறோம். அடுத்த 3 மாதங்களில் ஜிசாட்-9, 17, 19 ஆகிய 3 செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தவிருக்கிறோம்.
செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து வெள்ளி (வீனஸ்) கிரகத்தை ஆய்வுசெய்வது குறித்து யோசித்து வருகிறோம்.
பிற நாடுகளுக்காக ஏவுகலன், செயற்கைக்கோள்களை வியாபார நோக்கோடு விண்ணில் செலுத்தும் பணியை இஸ்ரோ-வின் துணை அமைப்பான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் கவனித்து வருகிறது.
கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக செயற்கைக்கோள்களை கட்டணம் செலுத்தி இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்தலாம். இப்படி பல வாய்ப்புகளை இஸ்ரோ வழங்கி வருவதால், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் இஸ்ரோ பங்காற்றத் தொடங்கியுள்ளது என்றார்.

உலக விண்வெளி சந்தை...

செயற்கைக்கோள்களை உற்பத்தி செய்தல், விண்னில் செலுத்துதல், தரவுகளைப் பயன்படுத்துதல் ஏவுகலன்களை வாடகைக்கு விடுதல், விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்களைத் தயாரித்தல், கட்டமைப்புகளை உருவாக்குதல், ஏவுதளங்களைக் கட்டமைத்தல் உள்ளிட்ட விண்வெளி சார்ந்த பல்வேறு வர்த்தக செயல்பாடுகள் கொண்ட உலக விண்வெளித் தொழில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. செலவைக் குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், உலகின் பல நாடுகளும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது, தளவாடங்களை உற்பத்தி செய்வது, உபகரணங்களைத் தயாரிப்பது என்று களமிறங்கத் தொடங்கியுள்ளன. 2015-இல் உலக விண்வெளித் தொழில் சந்தை மதிப்பு 32,300 கோடி டாலராக (சுமார் ரூ.22 லட்சம் கோடி) உள்ளது. இத்தொழில் ஆண்டுக்கு 9% வேகத்தில் வளர்ச்சி அடைந்துவந்தாலும், 2024-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியின் வேகம் 20 சதவீதமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. உலக விண்வெளித் தொழில் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 1 சதவீதமாக இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இது 5 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


உயரப் பறக்கும் செயற்கைக்கோள் சந்தை

இஸ்ரோவின் வணிகப்பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் சந்தையைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறது.
இந்திய அளவில் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் தவிர, உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளும் செயற்கைக்கோளை செலுத்த இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.
தற்போதைய உலக செயற்கைக்கோள் சந்தையின் மதிப்பு 20,800 கோடி டாலராக (சுமார் ரூ.14.14 லட்சம் கோடி) உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 3% வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருந்தது.
2024-ஆம் ஆண்டுக்குள் 50 கிலோவுக்கும் குறைந்த எடை கொண்ட 1,400 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வாய்ப்பிருக்கிறது.
இதே காலகட்டத்தில், வளர்ந்துவரும் 20 நாடுகள் 550 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன. இதன் வர்த்தக வாய்ப்பு 25,500 கோடி டாலராகும் (சுமார் ரூ.17.34 லட்சம் கோடி). 2020-ஆம் ஆண்டுக்குள் 1 முதல் 10 கிலோ எடை கொண்ட 2000 முதல் 2500 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கைக்கோள் உற்பத்தித் தொழில் ஆண்டுக்கு 22% வளர்ச்சி காணும். இதில் கணிசமான பங்கை (வருவாயை) அள்ள ஆன்ட்ரிக்ஸ் திட்டமிட்டு வருகிறது.
விண்வெளி சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திவரும் ஆன்ட்ரிக்ஸின் கடந்த ஆண்டின் வருவாய் ரூ.1,860 கோடியாகும். அடுத்த 2 ஆண்டுகளின் இது இரட்டிப்பாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com