பங்குச் சந்தையில் 184 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 184 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது.
பங்குச் சந்தையில் 184 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 184 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது.
சர்வதேச நிலவரங்கள், அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகள் குறித்து முதலீட்டாளர்களின் கவலை ஆகிய காரணங்கள் இந்திய பங்குச் சந்தையின் சரிவுக்குக் காரணமாகக் கூறப்பட்டது.
திங்கள்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே பங்குச் சந்தை நஷ்டத்தில் இயங்கி வந்தது. குறிப்பாக முக்கியப் பங்குகளின் பட்டியலான சென்செக்ஸ் நாள் முழுவதும் நஷ்டத்தில் இயங்கியது. சென்செக்ஸ் குறைந்தபட்ச நிலையாக 29,163 புள்ளிகளைத் தொட்டபோதிலும், பின்னர் சற்று சுதாரித்து 29,237 புள்ளிகளாக நிலைத்தது. முந்தைய வர்த்தக தினத்தைவிட 184 புள்ளிகள் சரிந்தது.
அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை 3.15 சதவீதம் இழப்பை சந்தித்தது. அடுத்தபடியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை 2.76 சதவீதம் சரிந்தது. ஓராண்டுக்கு முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) விதித்த தடையின் எதிரொலியாக அந்நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தது. பங்குச் சந்தைகளின் சரிவுக்கு ரிலையன்ஸ் விவகாரமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை. எச்.ஸி.எல். டெக்னாலஜீஸ் பங்கு விலை 1.8 சதவீதமும், விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை 1.79 சதவீதமும் டெக் மஹிந்திரா பங்கு விலை 1.25 சதவீதமும் சரிந்தன.
குறிப்பிடத்தக்க நஷ்டத்தை அடைந்த மற்றொரு துறை மருந்து தயாரிப்புத் துறையாகும். அமெரிக்காவில் முந்தைய ஒபாமா அரசு அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு மாற்றாகப் புதிய காப்பீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை மருந்துத் துறை நிறுவனங்களைக் கவலை அடையச் செய்துள்ளது.
சன் ஃபார்மா மற்றும் லூபின் பங்குகள் 1.76 சதவீதம் நஷ்டம் அடைந்தன. ஏஷியன் பெயின்ட்ஸ், கெயில், ஓ.என்.ஜி.சி., அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு இழப்பைத் தேடித் தந்தன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள 1,630 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டம் அடைந்தன; 1,158 பங்குகள் லாபம் ஈட்டின; 231 பங்குகளின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றமில்லை.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 62 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. வர்த்தக இறுதியில் நிஃப்டி குறியீடு 9,100 என்ற அளவுக்கு கீழே சரிந்து, 9,024 புள்ளிகளாக முடிவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com