கோதுமை, துவரம்பருப்பு இறக்குமதிக்கு 10% வரி

கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோதுமை, துவரம்பருப்பு இறக்குமதிக்கு 10% வரி

கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தெரிவித்ததாவது:
நடப்பு ஆண்டில் விளைச்சல் சாதனை அளவை எட்டும் என்ற மதிப்பீட்டாலும், உள்நாட்டு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், கோதுமை, துவரம்பருப்பு ஆகியவற்றின் இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை மார்ச் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அது, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கோதுமை மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றின் தற்போதைய இறக்குமதி நிலவரப்படி அவற்றின் இறக்குமதிக்கான வரி விதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.840 கோடி வருவாய் கிடைக்கும் என்றார் அவர்.
மத்திய அரசின் இந்த இறக்குமதி வரி விதிப்பு மொத்த விலை சந்தையில், கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலை வீழ்ச்சியடைவதை தடுக்க உதவியாக இருக்கும். மேலும், விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு அவற்றுக்கான ஆதரவு விலை கிடைப்பதும் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் சந்தைகளுக்குப் புதிய கோதுமை வரத்து தொடங்கியுள்ளது.
சாதகமான பருவ நிலையை அடுத்து கடந்த 2015-16-ஆம் ஆண்டு பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்) 9.23 கோடி டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி 2016-17 இல் சாதனை அளவாக 9.66 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று மத்திய அரசின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, துவரம் பருப்பு உற்பத்தியும் 25.6 லட்சம் டன்னிலிருந்து 42.30 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தைகளில் இருப்பை அதிகரிக்கவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி கோதுமைக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து பூஜ்யமாக குறைக்கப்பட்டது. அதேபோன்று, துவரம் பருப்புக்கான இறக்குமதி வரியும் பூஜ்யமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com