ஹெச்1பி விசாவுக்கு கட்டுப்பாடு இந்தியாவுக்கு சாதகமா பாதகமா ?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு, இப்போது உலக அளவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஹெச்1பி விசாவுக்கு கட்டுப்பாடு இந்தியாவுக்கு சாதகமா பாதகமா ?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு, இப்போது உலக அளவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் பணிபுரிய தாற்காலிகமாக அனுமதிக்கப்படும் பிற நாட்டு திறன்மிகு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாவை ஏப்ரல் 3 முதல் நிறுத்திவைத்து அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
அமெரிக்கக் குடிமக்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவே இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த உத்தரவால் இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஆனால், டிரம்ப் ஆணையால் உண்மையில் அமெரிக்காவுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும்; இந்தியா சமாளித்துக் கொள்ளும் என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
வல்லரசு நாடான அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தில் முதன்மை வகிக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சார்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அயல்பணிகளை இந்திய நிறுவனங்கள் பல மேற்கொள்கின்றன.
தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.) இந்தியா ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொறியாளர்களை உருவாக்குகிறது. அவர்களில் திறமை மிக்கவர்கள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இயங்கும் ஐ.டி. நிறுவனங்களில் வேலையில் சேர்கின்றனர்.
இந்த அயல்பணிகளைச் செய்யும் திறன்மிகு பணியாளர்கள் அமெரிக்கா சென்று பணிபுரியும் தேவை ஏற்படும்போது, அவர்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனமே அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்து ஹெச்1பி விசாவை பெற்றுத் தரும். அமெரிக்காவின் சிலிக்கான்வேலி பகுதியில் இந்தியர்களின் செல்வாக்கு அபரிமிதம். தாற்காலிக விசா பெற்று அமெரிக்கா சென்ற இந்தியர்கள் பலர் தங்கள் திறமையால் அங்கேயே குடியுரிமை பெற்று அமெரிக்கவாழ் இந்தியர்களாகி உள்ளனர்.
2016-இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப்பின், 'அமெரிக்கர்களுக்கே அமெரிக்கப் பணிகளை அளிப்போம்' என்ற முழக்கம் அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஹெச்1பி விசாவுக்கு தடை விதித்திருக்கிறார்.
இந்த உத்தரவின்படி, இனிமேல் ஹெச்1பி விசா பெற வேண்டுமானால், அந்தப் பணியாளரின் ஆண்டு ஊதியம் ஒரு லட்சம் டாலருக்கு மேல் இருந்தாக வேண்டும்.
இந்தக் கட்டுப்பாட்டின்படி, அமெரிக்க விசா பெற்று ஐ.டி. பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால், இந்திய நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் கூடுதல் செலவாகும். அமெரிக்க நிறுவனங்களும் கூடுதல் செலவு செய்து இந்திய ஐ.டி. நிபுணர்களை பணியமர்த்தத் தயங்கும். எனவே அந்த வாய்ப்புகள் உள்ளூர்ப் பணியாளர்களுக்கு கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.
உலக அளவில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கும் சேவைகளில் சுமார் 62 சதவீதம் அமெரிக்காவுக்குத்தான் அளிக்கப்படுகின்றன. 2015-ஆம் வருடத்திய உலக வங்கி அறிக்கையின்படி, அமெரிக்காவின் வர்த்தக செலவினத்தில் இந்தியாவின் பங்கு 10.96 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 70,500 கோடி) ஆகும்.
தற்போதைய விசா கட்டுப்பாடு காரணமாக இந்த வர்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மறுக்க முடியாது.
அதேசமயம், இந்திய நிறுவனங்களுக்கு சிறு சரிவு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்கிறார் தேசிய மென்பொருள் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) தலைவர் ஆர்.சந்திரசேகர். ''உள்நாட்டில் ஐ.டி. துறை வெகுவேகமாக வளர்ந்துவருவதால், அமெரிக்க விசா தடையால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பில் பெருத்த பாதிப்பு ஏற்படாது'' என்கிறார் இவர்.
அமெரிக்க விசா கட்டுப்பாடுகளால், திறன்மிகு பணியாளர்களுக்கு லாபமே என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ''அவர்களின் ஆண்டு ஊதியம் ஒரு லட்சம் டாலராக (ரூ. 64 லட்சம்) மாறலாம். அதனால் இந்திய ஐ.டி. துறைக்கு ஆண்டுக்கு 2.6 பில்லியன் டாலர் (ரூ. 16,640 கோடி) கூடுதல் செலவு ஏற்படக் கூடும். இருப்பினும் இந்தியர்கள் பெறும் விசா எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்றே தோன்றுகிறது'' என்கிறார் பான்யன் ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனரான இக்னேசியஸ் சிதேலன்.
அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களில் பெருவாரியானோர் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய (STEM)  4 துறைகளில் பணிபுரிகின்றனர். இத்துறைகளில் போதிய திறன் மிகுந்த அமெரிக்கர்கள் கிடைப்பதில்லை. இத்துறைகளில் அமெரிக்காவில் உள்ளூர்க்காரர்களுக்கு வேலைவாய்ப்பின்மையின் அளவு 3 சதவீதம் மட்டுமே என்பது அண்மையில் கிடைத்துள்ள அமெரிக்க தொழிலாளர் துறை புள்ளிவிவரமாகும்.
எனவே, தற்போதைய நிலவரத்தைப் பரிசீலிக்கும்போது, இந்தியப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தவே டிரம்ப் உத்தரவு பயன்படும் என்று தெரிகிறது.
எனினும், டிரம்ப்பின் ஆணை எதிர்பார்க்கப்பட்ட பீதியை உருவாக்கிவிட்டது. அமெரிக்காவில் பணிபுரியும் தொழில்நுட்ப நிபுணர்களில் பலர் நாடு திரும்பத் துவங்கிவிட்டனர். 2016 டிசம்பரில் இந்தியா திரும்ப விண்ணப்பித்த பணியாளர்களின் எண்ணிக்கை 600 ஆக இருந்தது. இதுவே 2017 மார்ச்சில் 7,000 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவைப் பின்பற்றி, ஆஸ்திரேலியாவும் திறன்மிகு பணியாளர்களுக்கு வழங்கிவந்த '457 விசா' திட்டத்தை ரத்து செய்துள்ளது. இதனால் சுமார் 95 ஆயிரம் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் (24.6 சதவீதம்).
சிங்கப்பூர், நியூஸிலாந்து நாடுகளும் தங்கள் விசா திட்டத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பிரிட்டனும் தனது இரண்டடுக்கு குடியேற்ற விசா பெற பணியாளரின் குறைந்தபட்ச ஊதியம் 35 ஆயிரம் யூரோவாக இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. இவை அனைத்துமே உள்நாட்டு குடிமக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை.
தங்கள் குடிமக்களைக் காக்க உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் யாரும் குறை காண முடியாது. அதேசமயம், இருநாட்டு பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள், உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றை மீறுவதாக அவை அமையக் கூடாது.
அமெரிக்க அதிபரின் விசா தடையுத்தரவை விமர்சித்துள்ள இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் இயங்குகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது'' என்று எச்சரித்திருக்கிறார். ''உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு மாறான நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா எதிர்ப்பு தொடர்ந்து தெரிவிக்கும். தொழில் நிறுவனங்களிடையே திறன் படைத்தவர்கள் செல்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது. இதுகுறித்து அமெரிக்காவுடன் பேசுவோம்'' என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
வாஷிங்டனில் கடந்த ஏப்ரல் 23-இல் நடைபெற்ற உலக வங்கிக் கூட்டத்தில் பேசிய இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ''வல்லரசு நாடுகள் வர்த்தகப் பாதுகாப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகள் உலகப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும். உள்கட்டமைப்பு, ஆற்றல், மனிதவளம் உள்ளிட்டவற்றில் நாடுகளிடையிலான பங்களிப்பை உறுதிப்படுத்துவதே நீடித்த வளர்ச்சிக்கு உதவும்'' என்று தெளிவுபடுத்தினார்.
1990-களில் உலகமயமாக்கம் வல்லரசு நாடுகளின் நிர்பந்தத்தால் துவங்கியது. உலக நாடுகளிடையிலான வர்த்தகத்துக்கு தேசிய சிந்தனையுடன் கட்டுப்பாடுகள் விதிப்பதை புதுப்பிக்கப்பட்ட காட்(GATT) ஒப்பந்தம் தடை செய்தது. சுதந்திரமாக இருந்த உலக நாடுகளின் வர்த்தகத்தில் தலையிட ஒரு வாய்ப்பாகவே உலக வர்த்தக அமைப்பு  (WTO) 1995-இல் நிறுவப்பட்டது. பல்வேறு நாடுகளில் உலக வர்த்தக அமைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதை மீறி உலகமயமாக்கல் பாதையில் நாடுகள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் இன்று நாம் எந்தக் கட்டுப்பாடும் அற்ற உலக வர்த்தக மண்டலத்தில் இருப்பதாகக் கருதினாலும், வளர்ந்த நாடுகள் தங்கள் குடிமக்களைக் காக்க தேசியப் பாதைக்குத் திரும்புகின்றன. இது யாரும் எதிர்பாராத திருப்புமுனை.
ஒரு காலத்தில் நமது இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைதேடிச் செல்வதை அறிவிழப்பு  (Knowledge Drain)  என்று நாம் கருதியதுண்டு. இன்று அவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இந்தியாவின் அறிவுச்செல்வமாகி (Knowledge Gain)) இருக்கின்றன. அந்த அறிவுச் செல்வத்துக்கு தடைபோடத்தான் டொனால்டு டிரம்ப் முயன்றிருக்கிறார்.
டார்வின் பரிணாம விதிப்படி திறனுள்ளதே வாழும். அந்த வகையில் டிரம்ப் பிறப்பித்துள்ள ஹெச்1பி விசா தடையுத்தரவு, இந்திய இளைஞர்களுக்கு புதிய சவால்களையும் வழிகளையும் உருவாக்கவே வாய்ப்புகள் அதிகம். சிறிய சரிவை ஏற்படுத்தும் இந்தத் தடையை நமது திறன்மிகு பணியாளர்கள் சீரியமுறையில் தாண்டுவார்கள் என்றே தோன்றுகிறது.
ஹெச்1பி விசா என்பது என்ன?
ஒவ்வொரு நாடும் பிற நாட்டினர் தங்கள் நாட்டினுள் நுழையவும் தங்கி இருக்கவும் நுழைவு இசைவு எனப்படும் விசா நடைமுறைகளைக் கொண்டுள்ளன. இந்த விசா இல்லாமல் வெளிநாட்டில் பணிபுரியவோ, சுற்றுலா செல்லவோ, கல்வி கற்கவோ இயலாது.
அந்த வகையில் அமெரிக்கா தனக்குத் தேவைப்படும் திறன்மிகு பணியாளர்களை தாற்காலிகமாக அனுமதிக்க 'ஹெச்1பி விசா' என்ற நடைமுறையைக் கொண்டுள்ளது. இது கால வரையறைக்கு உள்பட்ட தாற்காலிக விசா ஆகும்.
அறிவியல், பொறியியல், மருத்துவம், கணிதம், கலை உள்ளிட்ட துறைகளில் திறன் மிகுந்த பணியாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த விசாவை அமெரிக்க அரசு வழங்குகிறது.
இதைப் பெற மேற்கண்ட துறைகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டத்தைப் பணியாளர் பெற்றிருக்க வேண்டும். அவருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமே ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதன் கால அளவு மூன்று ஆண்டுகள். பிறகு மீண்டும் விண்ணப்பித்து 2 அல்லது 3 ஆண்டுகள் விசா காலத்தை நீட்டிக்கலாம். பாதுகாப்புத் துறைகளில் பணிபுரிவோருக்கு மட்டும் 10 ஆண்டுகால நீட்டிப்புக்கு வாய்ப்புண்டு.
அமெரிக்க கணக்கு வருடம் அக்டோபரில் துவங்குகிறது. அதையடுத்து 60 நாள்களுக்குள் இந்த விசாவைப் பெறலாம். அதற்கு ஏப்ரலில் விண்ணப்பிக்க வேண்டும்.
இளநிலைப் பட்டம் பெற்ற பணியாளர்கள் 65 ஆயிரம் பேருக்கும், முதுநிலைப் பட்டம் பெற்ற 20 ஆயிரம் பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் இந்த விசா வழங்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு அயல்பணிகளை (அவுட்சோர்ஸிங்) மேற்கொள்ளும் பிற நாட்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு எளிய விசா நடைமுறையாக இது இருந்து வந்தது. இந்த விசாவைப் பெற உலக நாடுகளில் மிகுந்த போட்டி நிலவுகிறது. 2016-இல் இந்த விசாவுக்காக விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 2.33 லட்சம்! எனவே பெறப்படும் விண்ணப்பங்களை குலுக்கல் முறையில் பரிசீலித்தே அமெரிக்கா ஹெச்1பி விசாவை வழங்குகிறது.
ஹெச்1பி விசா பெறுவோரில் 40 சதவீதத்தினர் ஆசியர்கள். இவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

2015-ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசா பெற்றுச் சென்ற
ஐ.டி.நிறுவனங்களின் இந்தியபணியாளர்கள்:


இன்போசிஸ் 8,991
டி.சி.எஸ். 6,339
காக்னிஸன்ட் 15,680
அக்ùஸன்ச்சர் 5,793
விப்ரோ 4,803
ஹெச்.சி.எல். 2,776
ஐ.பி.எம். 2,500
மஹிந்திரா 2,657

- வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com