பாரத ஸ்டேட் வங்கி: வீட்டுக் கடன் வட்டி குறைப்பு

குறைந்த விலை வீடுகளுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி: வீட்டுக் கடன் வட்டி குறைப்பு

குறைந்த விலை வீடுகளுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.
இது தொடர்பாக வங்கியின் சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளர் பி.ரமேஷ் பாபு செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வீட்டுக் கடனைப் பொருத்தவரை, ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீடுகளுக்கு வாடிக்கையாளர் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் 8.60 சதவீதத்திலிருந்து 8.35 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதம் மே 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தகுதியுள்ள நபர்கள் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூ.2.67 லட்சத்தை வட்டிக்கான மானியமாகப் பெறலாம். நடுத்தர வருமானப் பிரிவினர் 'பிரதான் மந்திரி ஆவாஸ்' (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் முதல் முறையாக வீடு வாங்கினால் வீட்டுக் கடனுக்கான வட்டி மானியமாக வழங்கப்படும்.
ஜூலை 31 வரை சலுகை: இந்த வட்டி விகிதக் குறைப்பு ஒரு சிறப்புச் சலுகையாகும். இந்தச் சலுகை ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். சிறப்புச் சலுகையாக வீட்டுக்கடனை மற்ற நிதி நிறுவனங்களிடம் இருந்து ஏற்றுக் கொள்வதற்கான செயல்முறைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். கடந்த ஓரிரு ஆண்டுகளில் 1 சதவீதம் முதல் 1.20 சதவீதம் வரை வங்கிகள், கடனுக்கான வட்டியைக் குறைத்து அறிவித்திருப்பதால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மாதச் சந்தா தொகை (இஎம்ஐ) கணிசமாகக் குறைந்துள்ளது. வீட்டுக் கடன் குறித்த கோரிக்கைகள் அண்மைக்காலமாக மிக அதிகமாக வந்துள்ளது. தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் பல லட்சம் பேர் பயன் பெறுவர். அவர்களின் வீடு வாங்கும் கனவு நனவாகும் என்றார் ரமேஷ் பாபு.
இந்தச் சந்திப்பின்போது பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டாரப் பிரிவு பொது மேலாளர்கள் ஜே.ராகவா, டி.இந்துசேகர், துணைப் பொதுமேலாளர் குமார் ஆகியோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com