இந்திய தொலைத் தொடர்புத் துறையின் இப்போதைய தேவை உதிவிக் கரம்!

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மொத்த கடன் தொகை சுமார் ரூ. 4.6 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. இது கடந்த மார்ச்சில் முடிவுற்ற 2016-2017 நிதி ஆண்டு இறுதியில் இருந்த தோராயமான நிலை.
இந்திய தொலைத் தொடர்புத் துறையின் இப்போதைய தேவை உதிவிக் கரம்!

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மொத்த கடன் தொகை சுமார் ரூ. 4.6 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. இது கடந்த மார்ச்சில் முடிவுற்ற 2016-2017 நிதி ஆண்டு இறுதியில் இருந்த தோராயமான நிலை.
இந்தத் தொகை நிறுவனங்களின் செயல்பாட்டுக்காக வாங்கிய கடனால் ஏற்பட்ட சுமை அல்ல. அலைக்கற்றை உரிமத்தை ஏலத்தில் வாங்குவது உள்ளிட்ட செலவுகளுக்காக வாங்கிய கடன்தான் இந்த 4.6 லட்சம் கோடி ரூபாய்.
நிலைமை இப்படியிருக்க, வெண்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் நாடு முழுவதும் 4ஜி தொழில்நுட்பத்தில் சேவை அளிக்கத் தொடங்கியது.
ரிலையன்ஸ் ஜியோ எல்லோரையும் போல சேவை அளிக்கத் தொடங்கியிருந்தால், அது ஒரு புதிய நிறுவனம் சேவை அளிக்கத் தொடங்கியதற்கான சாதாரண செய்தியாகத்தான் இருந்திருக்குமே தவிர, குறிப்பிடத் தகுந்த செய்தியாக இருந்திருக்காது.
முன்பே குறிப்பிட்டதுபோல, வெண்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி, ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையுடன் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. தொழில்நுட்பமோ 4ஜி - 90 நாட்களுக்கு முற்றிலும் இலவச அழைப்பு, இலவச இணையதளப் பயன்பாடு என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.
இதை உடனடியாக மற்ற நிறுவனங்கள் எதிர்க்காததற்குக் காரணம், இதில் எந்த சட்ட, விதிமுறை மீறலும் இல்லை என்பதுதான். புதிய நிறுவனம் சேவை தொடங்கும்போது, முதல் 90 நாட்களுக்கு இலவச சேவை அளிக்கலாம் என்பது விதிமுறை. இதுவரை வேறு எவரும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக, அந்த விதிமுறையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதில்லை. ரிலையன்ஸ் ஜியோ அதைச் செய்தது. இதையடுத்து, பழைய நிறுவனங்களின் இணையப் பயன்பாடு குறைந்தது.
இதில் பழைய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு சிக்கல் - புதிய தொழில்நுட்ப மேம்பாடு நடவடிக்கை, பழைய அலைக்கற்றை உரிமம் காலாவதியாகி, பெரும் பொருட்செலவில் புதிய அலைக்கற்றை உரிம ஏலம் - இவை நடைபெற்ற சூட்டோடு, புதிய வரவான ரிலையன்ஸ் ஜியோ கொடுத்த அடியையும் பழைய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
இது அந்த நிறுவனங்களின் வருவாயையும் லாபத்தையும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கியது.
பிற நிறுவனங்களைப் போலவே தொலைத் தொடர்பு நிறுவனங்களின், கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு நிதிச் செயல்பாடு அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது நான்காம் காலாண்டு நிகர லாபம் 72% குறைந்ததாகத் தெரிவித்துள்ளது. சென்ற நான்கு ஆண்டுகளிலேயே அந்த நிறுவனத்துக்கு இதுதான் மிகப் பெரிய வீழ்ச்சி.
வோடஃபோனின் கடந்த முழு நிதி ஆண்டின் செயல்பாட்டு லாபம் 10.2% குறைந்தது.
ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு வருவாயும் லாபமும் வீழ்ச்சியடைந்ததாக அறிவித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ. 325.6 கோடி நஷ்டம்.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், இத் துறையில் முதல் மூன்று இடத்தில் உள்ள நிறுவனங்களுமே கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாம் அரையாண்டில் கிட்டத்தட்ட ஒரே போல, சுமார் 10 சதவீத வருவாய் இழப்பை சந்தித்திருக்கின்றன.
இரண்டாம் அரையாண்டு என்பதில்தான் விசேஷம் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ சேவை சென்ற நிதி ஆண்டு செப்டம்பரில்தான் தொடங்கியது.
அதே போல, ஒரு வாடிக்கையாளர் மூலம் சராசரியாக ஈட்டும் வருவாய் (ஏ.ஆர்.பி.யூ.) அந்த முதல் மூன்று இட நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி 20% வரை சரிவைக் கண்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் மூலமான சராசரி வருவாயைத்தான் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வருவாய் மதிப்பீட்டுக்கான முக்கியக் குறியீடாக கொள்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனினும், நிதி ஆண்டின் இறுதிக் காலாண்டான ஜனவரி-மார்ச் காலாண்டில், பல புதிய திட்டங்களை அறிவித்தும், செலவுகளைக் கட்டுப்படுத்தியும் தங்களின் சரிந்த வருவாயை மீட்டுக் கொள்கிறாற்போல அந்த நிறுவனங்கள் பார்த்துக் கொண்டன.
இதனிடையே, வோடஃபோன் - ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்பு அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களில் இணைப்பு நடைபெறவிருக்கிறது. இணைப்புக்குப் பிறகு, மொத்த சந்தையில் 35% வாடிக்கையாளர்களுடனும், 41.1% சந்தைப் பங்களிப்புடனும் நாட்டின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக அது திகழும்.
இப்போதைக்கு சுமார் 24% வாடிக்கையாளர்களுடன் பார்தி ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது.ஜியோ மிகச் சுருங்கிய காலத்தில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றது. இதில் சுமார் 7 கோடிக்கும் மேல் "பிரைம்' என்னும் சிறப்புத் திட்டம் பெற்ற வாடிக்கையாளர்கள்.
இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மொத்த ஆண்டு வருவாய் சென்ற 2016-2017 நிதி ஆண்டில் ரூ. 1.88 லட்சம் கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய 2015-2016 நிதி ஆண்டில் வருவாய் ரூ. 1.88 லட்சம் கோடி என்பது நினைவுகூரத்தக்கது. 2008-2009 நிதி ஆண்டிலிருந்து வருவாயில் சரிவே காணாத தொலைத் தொடர்புத் துறை கடந்த நிதி ஆண்டில்தான் முதல் முறையாக சரிவை சந்தித்தது.
நடப்பு 2017-2018 நிதி ஆண்டிலும் வருவாய் சற்று சரிந்து ரூ. 1.84 லட்சம் கோடியாக இருக்கும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இதுவும் ஜியோவின் கைங்கரியமே!
இந்த நிலையில்தான், "எங்களுடைய நிலையைக் கருத்தில் கொண்டு ஏதாவது தயவு காட்டுங்கள்' என்று சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன.
இதில் நாம் நன்றாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த துறை நலிவுற்ற துறை அல்ல. மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற, தொடர்ச்சியாகக் கூடுதல் வருவாய் ஈட்டிக் கொடுக்க வல்ல துறைதான் இது. ஆனால் ஒரு புதிய வரவால் அந்தத் துறையில் இருந்த பழைய நிறுவனங்களின் வருவாய் ஒழுக்கு குறைந்துவிட்டது, அவ்வளவுதான்.
இப்போது முதலில் குறிப்பிட்ட மொத்த கடன் தொகை சுமார் ரூ. 4.6 லட்சம் கோடிக்கு மீண்டும் வருவோம்.
உரிமம் வழங்கும் மத்திய தொலைத் தொடர்புத் துறை முதல், மத்திய அரசின் நிதி சேவைத் துறை, வருவாய் துறை, பொருளாதார விவகாரத் துறை, வங்கித் துறை என பல்வேறு தரப்புகள் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக உள்ளன.
எனவே சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் உள்படுத்திக் கொண்டு, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளைப் பற்றி மட்டுமல்லாமல், அந்தத் துறையின் பொதுவான பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கான தீவிர ஆலோசனையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
வருவாய், நிதி விவகாரங்களைப் பொருத்த வரையில், மத்திய நிதித் அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முடிவெடுக்கலாம். ஆனால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான சட்ட திட்டங்களில் உச்ச நிலையில் உள்ள அமைப்பு தொலைத் தொடர்பு ஆணையம்.
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரச்னைகளில் கொள்கை அளவில் உள்ள புகார் அல்லது கோரிக்கைகளை தொலைத் தொடர்பு ஆணையம்தான் பரிசீலித்து இறுதி முடிவு எடுக்க முடியும். தற்போதைய பிரச்னை உரிமம் பிரச்னையையும் உள்ளடக்கியது. இன்றைக்கு உள்ள விதிமுறைகளின் கீழ், உரிமத் தொகை உள்ளிட்ட தற்போதைய நிலவரத்துக்கு அந்த ஆணையம் மட்டுமே தீர்வு அளிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அவற்றின் பங்குதாரர்கள், கடன் அளித்த வங்கிகள் ஆகிய அனைத்து தரப்பினரின் கருத்துகளும் அறியப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அரசுத் துறை மட்டுமல்லாமல், அரசின் பொதுவான கருத்து என்ன என்பதும் அறியப்பட வேண்டும்.
உரிமத் தொகை தவணைகளைச் செலுத்த கூடுதல் அவகாசம் அளிப்பது தீர்வில் ஒரு பகுதி. ஆனால் அந்த சலுகையை இலவசமாக கொடுத்துவிட வேண்டாம். சலுகை பெறுவதற்கு ஒரே முறை செலுத்தும் கட்டணமாக ஒரு தொகையை நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று கூறலாம்.
இதை கடன் மறுசீரமைப்பாக கருத தேவையில்லை. உரிமத் தொகை தொடர்புள்ளதால் "தவணை மறுசீரமைப்பு' என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.
உரிமம் பெறுவதற்காக வங்கிகள் அளித்த கடன் தொகைக்கும் இதே போன்ற ஒரு சிறப்பு சலுகை அளித்து, அதற்கான சிறு கட்டணத்தைச் செலுத்தச் சொல்லலாம்.
முன்பே குறிப்பிட்டது போல, இது நலிந்த துறையோ அல்லது நலிவுறும் துறையோ அல்ல. நல்ல வருமானத்தைத் தொடர்ந்து அளித்து வரும் துறை, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களால் மேலும் வளர வாய்ப்பிருக்கும் துறையும் கூட. எனவே பணத்தைத் திரும்பப் பெறும் விஷயத்தில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.
டிராய் புள்ளிவிவரப்படி, கடந்த மார்ச் மாத இறுதியில் மொத்த வாடிக்கையாளர்கள் 119.45 கோடி. இணைய வாடிக்கையாளர்கள் 27.65 கோடி. நாட்டின் மக்கள்தொகையில் டெலிகாம் பெருக்கம் 92.98%. உலகில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு சந்தை நம்முடையதுதான். மேலும், இது தொடர்ந்து வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
ஆனால் தொலைத் தொடர்பு உரிமக் கட்டணங்களின் மாபெரும் தொகைகளின் வருவாய் எதிர்பார்ப்பில் மத்திய அரசு ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கிறது. அந்தக் கணக்கு பிசகிவிடும். மத்திய அரசும் அதன் வருவாய் கணக்கில் சமரசம் செய்து கொள்ள வேண்டி வரும் நிலைக்குத் தள்ளப்படும்.
அனைத்து சாத்தியங்களையும் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை நன்கு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். எனவேதான் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் இந்த விவகாரத்தில் சம்பந்தமுள்ள அனைவருமே ஒன்றுகூடி அமர்ந்து சமரசமான, சுமுகமான தீர்வை விரைந்து காண முயற்சி எடுக்க வேண்டும்.
இந்திய தொலைத் தொடர்புத் துறைக்கு இப்போது தேவைப்படுவது -ஓர்
உதவிக்கரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com