அக்டோபர் மாத கார் விற்பனை 3% வளர்ச்சி

மாருதி சுஸுகி, டொயோட்டா, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை சென்ற அக்டோபர் மாதத்தில் ஒற்றை இலக்க அளவாக 3.5 % வளர்ச்சி கண்டுள்ளது.
அக்டோபர் மாத கார் விற்பனை 3% வளர்ச்சி

மாருதி சுஸுகி, டொயோட்டா, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை சென்ற அக்டோபர் மாதத்தில் ஒற்றை இலக்க அளவாக 3.5 % வளர்ச்சி கண்டுள்ளது. பண்டிகை கால விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத காரணத்தால் விற்பனை குறைந்த அளவுக்கே வளர்ச்சி கண்டதாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மாருதி சுஸுகி
கார் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் மாருதி சுஸுகியின் அக்டோபர் மாத விற்பனை உள்நாட்டில் 9.9 சதவீதம் வளர்ச்சி கண்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் 1,23,764 ஆக இருந்த வாகன விற்பனை சென்ற அக்டோபரில் 1,36,000 ஆக அதிகரித்தது.
குறிப்பாக, ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மாடல்களின் விற்பனை 50,116 லிருந்து 24.7 சதவீதம் அதிகரித்து 62,480 ஆக இருந்தது. அதேசமயம், ஆல்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட குறைந்த விலை பிரிவு கார்களின் விற்பனை 4.2 சதவீதம் குறைந்து 32,490 ஆக இருந்தது.
மஹிந்திரா
உள்நாட்டைச் சேர்ந்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை 48,729 லிருந்து அதிகரித்து 48,818 ஆக இருந்தது.வாகன விற்பனை குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (ஆட்டோமோட்டிவ் பிரிவு) ராஜன் வதேரா தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு அக்டோபரில் வந்த அனைத்து பண்டிகை தினங்களிலும் வாகன விற்பனை சிறப்பான அளவில் இருந்தது. இந்த ஆண்டிலும் விற்பனை மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான தேவை படிப்படியாக குறைந்து போனது என்றார்.
டாடா மோட்டார்ஸ் 
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற அக்டோபர் மாதத்தில் 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு 16,475 ஆக இருந்தது.
பஜாஜ் ஆட்டோ
சென்ற அக்டோபரில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3,82,464 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 3,52,168 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 7.38 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டில் வாகன விற்பனை 3.53 சதவீதம் அதிகரித்து 2,47,210 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் 2,12,997 ஆக இருந்த மோட்டார் சைக்கிள் விற்பனை நடப்பு ஆண்டு அக்டோபரில் 2,11,553 ஆக குறைந்து போனது.
ஏற்றுமதி 94,895 என்ற எண்ணிக்கையிலிருந்து 20.37 சதவீதம் அதிகரித்து 1,14,225 ஆனது. வர்த்தக வாகன விற்பனை 48,276 லிருந்து 17.42 சதவீதம் உயர்ந்து 56,686 ஆனது.
ஃபோர்டு இந்தியா
புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துவதில் காட்டிய மும்முரம் அக்டோபர் மாத விற்பனையில் எதிரொலித்துள்ளது. வாகன விற்பனை 43.82 சதவீதம் வீழ்ச்சி கண்டு 4,218 ஆக ஆனது என்று ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுராக் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.
ஹுண்டாய் மோட்டார்
ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற அக்டோபரில் 50,017 என்ற எண்ணிக்கையிலிருந்து சரிந்து 49,588-ஆனது.
டிவிஎஸ் மோட்டார்
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் சென்ற அக்டோபரில் 2,70,372 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனை 2,72,229-ஆக இருந்தது.
ராயல் என்ஃபீல்டு
ஐஷர் மோட்டார் நிறுவனத்தின் இருசக்கர வாகன பிரிவான ராயல் என்ஃபீல்டு வாகன விற்பனை அக்டோபரில் 68,014 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவு விற்பனையான 58,379 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 16.5 சதவீதம் அதிகமாகும்.
சுஸுகி 
சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை 36,493 என்ற எண்ணிக்கையிலிருந்து 26.1 சதவீதம் அதிகரித்து 46,020-ஆக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com