இந்தியாவில் தங்கத்துக்கான தேவை குறைந்தது

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) 24 சதவீதம் சரிவைக் கண்டதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) 24 சதவீதம் சரிவைக் கண்டதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் (இந்திய பிரிவு) பி.ஆர். சோமசுந்தரம் தெரிவித்துள்ளதாவது:
ஜிஎஸ்டி அமலாக்கம் தங்கம் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்ச்சி நிலையில் இருந்த தங்கம் ஆபரணங்களுக்கான தேவை மூன்றாவது காலாண்டில் 25 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதுதவிர, தங்க கட்டிகள் மற்றும் நாணயங்கள் விற்பனையும் முறையே 23 சதவீதம் மற்றும் 31 சதவீதம் குறைந்துள்ளது.
இதையடுத்து, உள்நாட்டில் தங்கத்துக்கான தேவை மூன்றாவது காலாண்டில் 24 சதவீதம் குறைந்து 145.9 டன்னாக மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் அதற்கான தேவை 193 டன்னாக காணப்பட்டது.
தங்கத்துக்கான தேவை மதிப்பின் அடிப்படையில் ரூ.55,390 கோடியிலிருந்து 30 சதவீதம் சரிந்து ரூ.38,540 கோடியானது.
குறிப்பாக, ஆபரண தங்கத்துக்கான தேவை அளவின் அடிப்படையில் 152.7 டன்னிலிருந்து 25 சதவீதம் சரிந்து 114.9 டன்னாக மட்டுமே இருந்தது. மதிப்பின் அடிப்படையில் இது 43,880 கோடியிலிருந்து 31 சதவீதம் குறைந்து 30,340 கோடியானது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் முதலீட்டு தங்கத்துக்கான தேவை 40.1 டன்னிலிருந்து குறைந்து 31 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் இது 11,520 கோடியிலிருந்து சரிந்து ரூ.8,200 கோடியாக இருந்தது.
மூன்றாம் காலாண்டில் தங்கத்துக்கான தேவை குறைந்துள்ள போதிலும், தங்க ஆபரணங்கள் விற்பனை பண்டிகை காலத்தையொட்டி விறுவிறுப்படைந்துள்ளது. இதன் காரணமாக, நான்காவது காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை நிச்சயம் அதிகரிக்கும்.
இந்தியா மட்டுமின்றி, உலக அளவிலும் மூன்றாம் காலாண்டில் தங்கத்துக்கான தேவை குறைந்து போயுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் தங்க இ.டி.எஃப். திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு கணிசமான அளவு சரிவடைந்ததையடுத்து இந்த நிலை ஏற்பட்டது. மூன்றாவது காலாண்டில் தங்கத்துக்கான தேவை 9 சதவீதம் குறைந்து 915 டன்னாக இருந்தது. உலக அளவில் ஆபரண தங்கத்துக்கான தேவை 495 டன்னிலிருந்து 479 டன்னாக குறைந்தது.
சீனாவில் சில்லறை முதலீட்டுப் பிரிவில் தங்கத்துக்கான தேவை அதிகரிப்பு, துருக்கி, ரஷியா மற்றும் கசகஸ்தான் நாடுகளின் மத்திய வங்கிகளில் தங்க கையிருப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளிட்டவற்றால் நான்காவது காலாண்டில் உலக அளவிலும் தங்கத்துக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com