மாருதி சுஸுகி கார் விற்பனை 9.3% அதிகரிப்பு

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 9.3 சதவீதம் வளர்ச்சி கண்டது.
மாருதி சுஸுகி கார் விற்பனை 9.3% அதிகரிப்பு

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 9.3 சதவீதம் வளர்ச்சி கண்டது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மாருதி சுஸுகி சென்ற செப்டம்பரில் 1,63,071 கார்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 1,49,143 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 9.3 சதவீதம் அதிகமாகும். 
உள்நாட்டில் கார் விற்பனை 1,37,321 என்ற எண்ணிக்கையிலிருந்து 10.3 சதவீதம் அதிகரித்து 1,51,400-ஆக இருந்தது.
குறைந்த விலை பிரிவில், ஆல்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட கார்களின் விற்பனை 44,395 என்ற எண்ணிக்கையிலிருந்து 13.3 சதவீதம் சரிவடைந்து 38,479 ஆகவும், அதேசமயம், ஸ்விஃப்ட், எஸ்டிலோ, டிசையர், பலேனோ வகை கார்கள் விற்பனை 44.7 சதவீதம் உயர்ந்து 72,804-ஆக இருந்தது. 
கார் ஏற்றுமதி 11,822-லிருந்து 1.3 சதவீதம் சரிந்து 11,671-ஆக இருந்தது என மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ விற்பனை 14% வளர்ச்சி
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சென்ற செப்டம்பரில் 4,28,752 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 3,76,765 வாகனகளுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகமாகும்.
மோட்டார் சைக்கிள் விற்பனை 3,31,976 என்ற எண்ணிக்கையிலிருந்து 11 சதவீதம் அதிகரித்து 3,69,678 ஆனது. உள்நாட்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை 7 சதவீதம் உயர்ந்து 2,47,418-ஆக இருந்தது.
வர்த்தக வாகனங்கள் விற்பனை 44,789-லிருந்து 32 சதவீதம் வளர்ச்சி கண்டு 59,074-ஆனது.
ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 21 சதவீதம் அதிகரித்து 1,46,973-ஆக இருந்தது என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. 
டாடா மோட்டார்ஸ் விற்பனை 25% உயர்வு 
டாடா மோட்டார்ஸ் சென்ற செப்டம்பர் மாதத்தில் 53,965 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 43,031 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 25 சதவீதம் அதிகமாகும்.
ஒட்டுமொத்த வர்த்தக வாகனங்கள் விற்பனை 29 சதவீதம் உயர்ந்து 36,679-ஆக இருந்தது.
எஸ்சிஆர் தொழில்நுட்பம், பிஎஸ்4 வாகன தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு பெருகியுள்ளதையடுத்து வாகன விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகன விற்பனைப் பிரிவு தலைவர் கிரிஷ் வாஹ் தெரிவித்துள்ளார்.
ஹுண்டாய் மோட்டார் விற்பனை 17% அதிகரிப்பு 
ஹுண்டாய் மோட்டார் இந்தியா செப்டம்பர் மாதத்தில் 50,028 கார்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 42,605 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 17.4 சதவீதம் அதிகமாகும்.
புதிய அறிமுகமான வெர்னா காருக்கு சந்தையில் வரவேற்பு கூடி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் நடுத்தர செடன் வகையைச் சேர்ந்த 6,000 கார்கள் விற்பனையாகியுள்ளதாக ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (விற்பனை-சந்தைப்படுத்துதல்) ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
ஹோண்டா கார்ஸ் விற்பனை 21% உயர்வு
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் (ஹெச்சிஐஎல்) சென்ற செப்டம்பர் மாதத்தில் 18,257 கார்களை விற்பனை செய்தது. 
கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 15,034 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் அதிகமாகும்.
செப்டம்பர் மாத விற்பனை சூடுபிடித்துள்ளது என்பது பண்டிகை கால விற்பனைக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. 
வரும் மாதங்களில் கார் விற்பனை இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது என்று ஹெச்சிஐஎல்-ன் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான யோஷிரோ யுநோ தெரிவித்துள்ளார்.
சுஸுகி மோட்டார் சைக்கிள் விற்பனையில் சாதனை 
சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் சென்ற செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டில் 50,785 வாகனங்களை விற்பனை செய்தது. இது முன்னெப்போதும் கண்டிராத அதிகபட்ச விற்பனையாகும். 
தொடர்ந்து பல மாதங்களாக விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த செப்டம்பரில் ஒட்டுமொத்த வாகன விற்பனை (உள்நாடு + ஏற்றுமதி) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32.99 சதவீதம் வளர்ச்சி கண்டு 57,469-ஆக இருந்தது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் விற்பனை 41.73 சதவீதம் அதிகரித்து 2,81,182-ஆக இருந்தது என சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com