இந்தியாவில் பொதுப்பங்கு வெளியீடுகள் வரலாறு காணாத வகையில் வளரும்: எர்ன்ஸ்ட் யங்

இந்தியாவில் நடப்பு ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) வரலாறு காணாத அளவில் வளர்ச்சி அடையும் என எர்ன்ஸ்ட் யங் நிதி ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) வரலாறு காணாத அளவில் வளர்ச்சி அடையும் என எர்ன்ஸ்ட் யங் நிதி ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மும்பை பங்குச் சந்தையில் சிறிய நடுத்தர நிறுவனங்களின் (எஸ்எம்இ) பட்டியலில் இடம்பெற்றுள்ள 16 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு 180 கோடி டாலரை (ரூ.11,700 கோடி) திரட்டின. ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகம்.
குறிப்பாக, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்கி 130 கோடி டாலரை திரட்டியதே அதிகபட்ச அளவாக உள்ளது.
சென்ற ஜூலையில் ஜிஎஸ்டி அறிமுகமாகவிருந்ததையடுத்து பங்கு சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது. இருப்பினும், பொதுப் பங்கு வெளியீடுகளைப் பொருத்தவரையில் விறுவிறுப்பு குறையவில்லை.
ஒழுங்காற்றுதல் தொடர்பான விதிகள் மாற்றியமைக்கப்பட்டதையடுத்து பொதுப் பங்கு வெளியீட்டில் காப்பீட்டு துறைகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இதையடுத்து, காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு ஆயத்தமாகி வருகின்றன. மேலும், இந்திய அரசும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களின் பங்குகளை வெளியிட தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதையடுத்து, நடப்பு நிதி ஆண்டில் வரலாறு காணாத அளவில் பொதுப் பங்கு வெளியீடுகளின் மதிப்பு 500 கோடி டாலரை (ரூ.32,500 கோடி) எட்டும்.
சர்வதேச அளவில் கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஓ நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெருகியே வந்துள்ளது. 2007-இல் உலக அளவில் 1,600 நிறுவனங்கள் 19,000 கோடி டாலரை (ரூ.12.35 லட்சம் கோடி) திரட்டின. நடப்பு 2017-இல் இது 1,700 நிறுவனங்களாகவும் திரட்டும் தொகை 20,000 கோடி டாலராகவும் (ரூ.13 லட்சம் கோடி) இருக்கும்.
ஐபிஓ எண்ணிக்கையை பொருத்தவரையில் கடந்த ஆண்டில் நிகழ்த்தப்பட்ட சாதனை நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.
உலக அளவிலுள்ள 1,156 நிறுவனங்கள் 12,690 கோடி டாலரை திரட்டியுள்ளன. 2016 உடன் ஒப்பிடும்போது நிறுவனங்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை இது 59 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 55 சதவீதம் அதிகம். 
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகே இந்தியப் பங்குச் சந்தைகளில் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்தே, பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு பங்குச் சந்தையில் களமிறங்க தைரியமாக முடிவெடுத்ததாக எர்ன்ஸ்ட் யங் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com