பங்குச் சந்தையில் லாபகரமான வாரம்

பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகம் லாபகரமாக நிறைவுற்றது.
பங்குச் சந்தையில் லாபகரமான வாரம்

பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகம் லாபகரமாக நிறைவுற்றது.
மும்பை பங்குச் சந்தையின் முந்தைய இரு வார வீழ்ச்சி நிலை மாறி 530 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையிலும் ஏற்றம் காணப்பட்டு நிஃப்டி மீண்டும் 9,900 புள்ளிகளைக் கடந்தது.
காந்தி ஜயந்தியை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், வாரத்தில் மொத்தம் நான்கு நாட்களே வர்த்தகம் நடைபெற்றது. ரிசர்வ் வங்கியின் வட்டிக் கொள்கை அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு, சர்வதேச சந்தைகளின் நிலவரம், பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் அளித்த எதிர்பார்ப்பு ஆகிய காரணங்களால் பங்குச் சந்தையில் பொதுவாக சாதகமான சூழல் நிலவி வந்தது.
பொதுவாகப் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தபடியே, வட்டிக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. அதே சமயத்தில், அரசுப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் வங்கிகள் கட்டாயமாக முதலீடு செய்ய வேண்டிய நிதி விகிதத்தை அரை சதவீதம் குறைத்தது. வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை அதிகரிக்கச் செய்யவும், அதன் மூலம் கடன் அளிப்பை அதிகரிக்கச் செய்யவும் இந்த நடவடிக்கை உதவும் என்று முதலீட்டாளர்கள் கருதினர். அரசு வங்கிகளில் கூடுதல் மூலதனம் செலுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஆட்டோ மொபைல் துறை விற்பனை விவரங்கள் வெளியானது. அனைத்துப் பிரிவுகளிலும் விற்பனை அதிகரித்தது முதலீட்டாளர்களின் மன நிலைக்கு ஊக்கம் தந்தது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் எஃகு உற்பத்தி விகிதம் அதிகரித்ததாக வெளியான புள்ளிவிவரம் பங்கு முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிறுவனங்களுக்குப் பல புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்றும், பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு வலு சேர்த்தன.
வாரத் தொடக்கத்தில் 31,537 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் அதிகபட்ச அளவாக 31,844 புள்ளிகளைத் தொட்டது. எனினும் வார இறுதியில் 31,814 என்ற அளவில் சென்செக்ஸ் நிலைத்தது. வார அளவில் 530 புள்ளிகள் ஏற்றம் காணப்பட்டது. முந்தைய இரு வாரங்களில் சென்செக்ஸ் 988 புள்ளிகள் சரிந்தது நினைவுகூரத்தக்கது. இது 3.06 சதவீத வீழ்ச்சியாகும். மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ. 13,317.73 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
நிறுவனங்களின் பங்குகளைப் பொருத்த வரையில், அதிகபட்சமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 6.99 சதவீதம் அதிகரித்தது. டாடா ஸ்டீல் பங்கு விலை 6.2 சதவீதம் அதிகரித்தது. டாடா மோட்டார்ஸ், சன் ஃபார்மா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை முறையே 5.72 சதவீதம், 5.41 சதவீதம் உயர்வு பெற்றன. முப்பத்தொரு நிறுவனங்களை அடங்கிய சென்செக்ஸில் 24 நிறுவனங்களின் பங்குகள் லாபம் பெற்றன. ஏழு நிறுவனங்களின் பங்குகள் இழப்பை சந்தித்தன.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் கடந்த வாரம் ரூ. 2,668.46 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர் என்று செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் வாரத் தொடக்கத்தில் நிஃப்டி குறியீடு 9,893 புள்ளிகளாக இருந்தது. அதிகபட்சமாக 9,989 புள்ளிகளைத் தொட்டபோதிலும், வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது நிஃப்டி 9,979 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ. 1,02,004.46 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com