பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

(அக். 13) நடைபெற இருந்த நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக ஐக்கிய பெட்ரோலிய முன்னணி புதன்கிழமை தெரிவித்தது.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எல்லைக்குள் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டு வருவது, அதிக லாப விகிதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெட்ரோலியப் பொருள் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய பெட்ரோலிய முன்னணி வரும் வெள்ளிக்கிழமை (அக். 13) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

பெட்ரோலியப் பொருள்கள் விற்பனைக்கான லாப விகிதத்தை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களிடம் வலியுறுத்தி வருகிறோம். 

மேலும், முதலீடுகளுக்குத் தகுந்த லாபம், பணியாளர்களை நியமிப்பதில் உள்ள பிரச்னைகள், பெட்ரோலியப் பொருள்கள் விரயமாவது குறித்த புதிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம், எரிபொருள் போக்குவரத்து மற்றும் எரிபொருளுடன் எத்தனால் கலப்பதில் உள்ள பிரச்னைகள் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளையும் எண்ணெய் நிறுவனங்களிடம் வலியுறுத்தி வருகிறோம்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக எங்களுக்கும், அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களுக்கும், மத்திய அமைச்சரவைச் செயலருக்கும் கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி கடிதம் எழுதினோம். எனினும், அந்தக் கடிதத்தின் மேல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை (அக். 13) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றிருந்தது.

இந்நிலையில், அக்டோபர் 13-ந் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக பெட்ரோலிய பொருள் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய பெட்ரோலிய முன்னணி புதன்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com