நோபல் வென்ற ரிச்சர்ட் தேலர்

பொருளாதாரத்துக்காக இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ள ரிச்சர்ட் தேலர் மற்ற பொருளாதார நிபுணர்களிலிருந்து மிகவும் மாறுபட்டவர் என்று கூறலாம்.
நோபல் வென்ற ரிச்சர்ட் தேலர்

பொருளாதாரத்துக்காக இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ள ரிச்சர்ட் தேலர் மற்ற பொருளாதார நிபுணர்களிலிருந்து மிகவும் மாறுபட்டவர் என்று கூறலாம். பொருளாதாரக் கோட்பாடுகளில் மனிதர்களை வாடிக்கையாளர்களாகவும் நுகர்வோராகவும் பார்க்கக் கூடிய நிலைதான் பொதுவாக உள்ளது. 
மனிதர்கள் தங்கள் தேவைகளைப் பகுத்தாராய்ந்து தேர்வு செய்து பூர்த்தி செய்து கொள்கிறார்கள் என்பது பொருளாதாரத்தின் ஒரு நிலையான, அடிப்படையான முடிவு. மக்களின் அந்த நிலையான நடத்தைதான் பொருளாதாரத் திட்டத்தின் அஸ்திவாரம். 
உற்பத்தி-தேவை-பயன்பாடு-சந்தை ஆகியவை
கொண்ட சங்கிலித் தொடரில் மனிதன் ஒரு சாதாரண அங்கம் மட்டுமே. ஆனால் மனிதர்களை உணர்ச்சிக் குவியலாக, குழப்பங்களின் முடிச்சாகப் பார்க்கும் பொருளாதார நிபுணராக ரிச்சர்ட் தேலர் அறியப்படுகிறார்.
தங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்வதில் ஐயம் உள்ளவர்களாக, தயக்கம் உள்ளவர்களாக, பல சந்தர்ப்பங்களில் தங்களுக்கு என்ன தேவை என்று தெரியாதவர்களாக, அல்லது சில நேரங்களில் முன்யோசனையின்றி சடாரென்று முடிவெடுப்பவர்களாக மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள். 
இது போன்ற மனிதர்களையும் உள்ளடக்கியதுதான் ஒரு சமூகத்தின் பொருளாதாரம் என்பது அவருடைய கோட்பாடுகளின் அடிப்படை. புள்ளிவிவரக் கோட்டையான பொருளாதாரத்தில் கூடுதல் மனிதத்துவத்தையும் உளவியலையும் புகுத்தியவர் என்று ரிச்சர்ட் தேலர் பாராட்டப்படுகிறார்.
வறட்டுப் புள்ளிவிவரங்களுடன் மனித நடத்தையியலையும் கலந்து சிந்தியுங்களேன் என்று சக பொருளாதார நிபுணர்களை அவர் வேண்டிக் கொள்கிறார்.
பொருளாதார ஆய்வு மேற்கொண்டு அவர் முனைவர் பட்டம் பெற்ற பிறகு கூடுதல் கவனம் செலுத்தியது உளவியல் துறையில். ஒரு பொருளாதார நிபுணரின் முக்கிய லட்சணமும் தகுதியும் கணித அறிவு ! ஆனால் அதை மட்டும் அடிப்படையாக கொண்டு இவர் செயல்படவில்லை. அதனால் அவருடைய ஆரம்ப ஆராய்ச்சி காலத்தில் சக பொருளாதார ஆய்வாளர்களும் துறையில் மூத்தவர்களும் அவரைப் புறந்தள்ளினார்கள். 
மனிதர்களின் சிந்தனை, நடத்தையில் மாறுபாடு இவற்றின் அடிப்படையில் சமூகத்தின் பொருளாதாரப் போக்கைக் காணும் "நடத்தை பொருளாதார இயல்" என்ற புதிய கோட்பாட்டுத் துறைக்கு உறுதியான, கண்ணியமான இடத்தைப் பெற்றுத் தந்தார்.
அவருடைய கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று - மனிதர்கள் எப்போதும் பகுத்தறிவை வெளிப்படுத்தி நடந்து கொள்வதில்லை. அதிலும் பொருளாதார விவகாரங்களில் மனிதன் நிச்சயம் பகுத்தறிவுடன் செயல்படுவதில்லை. ரிச்சர்ட் தேலரின் ஓர் உதாரணம் கவர்ச்சிகரமானது - மழைக் காலத்தில் குடைக்கு கூடுதல் விலை கொடுத்து வாங்க யாரும் தயாராக இல்லை என்பது!
நல்ல பொருளாதார சிந்தனை ஏற்பட வேண்டுமானால், "மக்கள்' என்பவர்கள் வெறும் கூட்டமல்ல, அது பல மனநிலைகளைக் கொண்ட மனிதர்களின் தொகுப்பு என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன் போன்ற நாடுகளில் ரிச்சர்ட் தேலரின் கோட்பாடுகள் அடிப்படையில் தொழிலாளர் சேமநல நிதித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சமூகத்தின் அடிப்படைக் கூறான மனிதனின் அன்றாட வாழ்வில் இன்பம் அளிக்கும் சின்னஞ்சிறு விஷயங்களை ஒரு பொருளாதார நிபுணரின் சிந்தனை நிறைவேற்றினால் அதுவே அவருடைய மிகப் பெரிய வெற்றி என்கிறார் ரிச்சர்ட் தேலர்.
ஆரம்பத்தில் அவரை ஒதுக்கிய சக நிபுணர்களின் அங்கீகாரத்தையும் அவர் பெற்றுவிட்டார். உலகமும் அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com