ரூ.1,349 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்: ஏர்டெல்-செல்கான் நிறுவனம் ஒப்பந்தம்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான செல்கான் நிறுவனத்துடன்
ரூ.1,349 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்: ஏர்டெல்-செல்கான் நிறுவனம் ஒப்பந்தம்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான செல்கான் நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனை உருவாக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன் விலை, ரூ.1,349-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் "எனது முதல் ஸ்மார்ட்போன்' திட்டத்தை தொடங்கியது. அப்போது, கார்பன் நிறுவனத்துடன் இணைந்து ரூ.2,000 விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.
 இந்த நிலையில், மற்றொரு திட்டமாக செல்கான் நிறுவனத்துடன் இணைந்து அதைவிட குறைந்த விலையுடைய 4ஜி ஸ்மார்ட்போனை தயாரிக்க ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணையவசதியுடன் கூடிய ஃபீச்சர் போனை ரூ.1,500 டெபாசிட்டில் அறிமுகம் செய்வதாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு சலுகைகளுடன் கூடிய தொகுப்பு திட்டங்களை வரிசை கட்டி அறிமுகப்படுத்தி வருகின்றது.
 கடந்த வாரம் வோடபோன் இந்தியா நிறுவனம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.999 விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளதாக தெரிவித்தது.
 அந்த வரிசையில், ஏர்டெல் நிறுவனம் தற்போது, சந்தையில் ரூ.3,500 விலை மதிப்பைக் கொண்ட செல்கான் ஸ்மார்ட் 4ஜி போனை ரூ.1,349 விலையில் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
 இதுகுறித்துஅந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
 "செல்கான் ஸ்மார்ட் 4ஜி' (ரூ.3,500 சந்தை விலை) ஸ்மார்ட்போன் 4 அங்குல திரை, இரட்டை சிம், எப்எம் ரேடியோ உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கியது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தைக் கொண்ட இந்த போன் கூகுள் பிளே ஸ்டோர், யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வசதிகளை உள்ளடக்கியது. ஏர்டெல் மாதாந்திர தொகுப்பு திட்டம் ரூ.169 உடன் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
 இந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போனை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முதல் கட்டமாக ரூ.2,849 செலுத்தி தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு ரூ.169-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 18 மாதங்களுக்குப் பிறகு ரூ.500 ரொக்கமாக திரும்ப வழங்கப்படும். அதன் பிறகு 36 மாதங்கள் கழித்து ரூ.1,000 கூடுதலாக திரும்ப அளிக்கப்படும். மொத்தம் ரொக்க சலுகையாக ரூ.1,500 வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
 ரூ.169 திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய விரும்பாத வாடிக்கையாளர் அவர்கள் விருப்பத்துக்கேற்ப, வேலிடிட்டி தேவைக்கேற்ப பல்வேறு கட்டண விகிதங்களில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
 ஆனால், இந்த ரொக்கத்தை திரும்ப அளிக்கும் சலுகை முதல்கட்டமாக 18 மாதங்களுக்கு ரூ.3,000 மதிப்பிற்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கே பொருந்தும்.
 இந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் பெறும் வாடிக்கையாளரே அதற்கு முழு உரிமையாளர் ஆவார் என்று ஏர்டெல் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 இந்த ஒப்பந்தம் குறித்து பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நுகர்வோர் வர்த்தக பிரிவு இயக்குநர் ராஜ் புடிபெட்டி தெரிவித்ததாவது: செல்கான் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் சந்தையில் 4 ஜி ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதே.
 செல்கான் நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் வலுவான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதிலும், குறிப்பாக, தென்னிந்திய சந்தைகளில் இந்த நிறுவனத்துக்கு விநியோக தொடர்புகள் மிக அதிகமாக உள்ளது. அதன் உதவியால், இந்த ஒப்பந்தத்தின் மூலமாக பரவலான பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் குறைந்த விலை 4ஜி ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் கொண்டு சேர்க்க முடியும்.
 எதிர்காலத்தில் இதுபோன்ற கூட்டு ஒப்பந்தங்களை ஏர்டெல் நிறுவனம் மேலும் பல செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com