25% சலுகை வரிவிதிப்பில் 3 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதி

பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை அதிகரிக்கும் என்பதால் 25 சதவீத சலுகை வரி விதிப்பில் 3 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு வியாழக்கிழமை அனுமதி வழங்கியது
25% சலுகை வரிவிதிப்பில் 3 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதி

பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை அதிகரிக்கும் என்பதால் 25 சதவீத சலுகை வரி விதிப்பில் 3 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
சர்வதேச சந்தையில் கடந்த ஜூலை மாதம் சர்க்கரையின் விலை வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, உள்நாட்டில் அதன் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் சர்க்கரைக்கான இறக்குமதி வரி 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. 
ஆனால் தற்போது, பண்டிகை காலம் வரவிருப்பதையடுத்து சர்க்கரைக்கான தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 25 சதவீத சலுகை வரி விதிப்பில் 3 லட்சம் டன் சர்க்கரையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள வியாழக்கிழமை அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம், உள்நாட்டு சந்தையில் சர்க்கரையின் அளிப்பை அதிகரிக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்க்கரை உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் 2016-17 பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 2.10 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் 2015-16 பருவ உற்பத்தியான 2.50 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவாகும். ஆண்டுக்கு 2.40-2.50 கோடி டன் சர்க்கரை தேவைப்படுகிறது.
உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் 5 லட்சம் டன் சர்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. மேலும், பண்டிகை காலத்தையொட்டி அடுத்த இரு மாதங்களுக்கு ஆலைகளில் சர்க்கரையை இருப்பு வைக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
சில்லறை விலை சந்தையில் ஒரு கிலோ சர்க்கரை தற்போது ரூ.42-க்கு விற்கப்படுகிறது. அதேசமயம், பிராண்டட் சர்க்கரையின் விலை கிலோ ரூ.50-ஆக உள்ளது. 
சர்வதேச சந்தையில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து சர்க்கரையின் விலை 8 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்திலும் சர்க்கரை உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்று இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் தலைவர் டி.சரிதா ரெட்டி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
2016-17 -இல் 45.64 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு பயிரிடும் பரப்பு நடப்பு ஆண்டில் 49.88 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. அதன் காரணமாக, அடுத்த பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 2.51 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 40 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் உள்ளது. இது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாகும் என்றார் அவர்.
2016-17 பருவத்தில் உலக அளவில் சர்க்கரை உற்பத்தி 7 சதவீதம் அதிகரித்து 17.93 கோடி டன்னாகவும், தேவை 1.7 சதவீதம் உயர்ந்து 17.47 கோடி டன்னாகவும் இருக்கும் என சர்வதேச சர்க்கரை கூட்டமைப்பின் செயல் இயக்குநர் ஜோஸ் ஓரைவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com