'ஊபர்' கால் டாக்ஸிக்கு லண்டனில் தடை: 40,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

'ஊபர்' கால் டாக்ஸிக்கு லண்டனில் தடை: 40,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

ஊபர் கால் டாக்ஸி நிறுவனத்துக்கு லண்டன் போக்குவரத்துத்துறை வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

உலகத்தின் பல்வேறு இடங்களில் ஊபர் என்ற கால்டாக்ஸி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊபர் நிறுவனத்துக்கு லண்டனில் தடை விதித்து அந்நாட்டு போக்குவரத்துத்துறை அறிவித்தது.

ஊபர் கால்டாக்ஸி நிறுவனம் சமீபகாலமாக பல குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக பெண் பயணிகளிடம் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் அந்நிறுவனத்தின் மீது உள்ளது. மேலும், ஒவ்வொரு இடங்களிலும் பின்பற்றப்படும் விதிகளை மீறி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகிறது.

தற்போது போக்குவரத்து விதிகளை மீறியது மற்றும் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஊபர் நிறுவனத்துக்கு லண்டனில் தடை விதித்து அந்நாட்டு சாலைப் போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளிட்டது.

இதையடுத்து வரும் செப்டம்பர் 30-ந் தேதியுடன் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைகிறது. இதனால் அக்டோபர் முதல் லண்டனில் ஊபர் நிறுவனம் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஊபர் நிறுவனத்தில் பணிபுரியும் 40,000 தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தத் தடையை எதிர்த்து ஊபர் நிறுவனம் அடுத்த 21 தினங்களுக்குள் மறுசீராய்வுக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனால், இவ்விவகாரத்தில் ஊபர் நிறுவனம் இதுவரை எந்தக் கருத்தயைும் தெரிவிக்கவில்லை. 

ஊபர் நிறுவனத்தின் மீது சாலைப் போக்குவரத்துத்துறையின் இந்தத் தடை விவகாரத்தை ஆதரிப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

லண்டனில் இயங்கி வரும் அனைத்து நிறுவனங்களும் இங்குள்ள சட்டதிட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பு மிக அவசியம்.

லண்டன் மக்களின் நலனில் அக்கறை கொண்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த நிறுவனமாக இருந்தாலும் இங்குள்ள சட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியான முடிவாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com