பிரைவேட் லிமிடெட் நிறுவனமாகிறது டாடா சன்ஸ்

டாடா சன்ஸ் நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக்க அந்த குழுமத்தின் பெரும்பான்மை பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. 

டாடா சன்ஸ் நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக்க அந்த குழுமத்தின் பெரும்பான்மை பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. 
டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து அண்மையில் விலகிய சைரஸ் மிஸ்திரி குடும்பத்தினர் அவர்களுடைய பங்குகளை வெளி சந்தையில் விற்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்தார். சைரஸ் மிஸ்திரி குடும்பம் டாடா சன்ஸில் 18.4 சதவீத பங்குகளையும், டாடா டிரஸ்ட் 66 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. 
பதவி விலகலுக்கு பிறகு சைரஸ் மிஸ்திரி குடும்பம் வெளியில் பங்குகளை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி டாடா சன்ஸ் நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக்க பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் அது முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் போதுமான பங்குதாரர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. இருப்பினும் எந்த முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது என்று உடனடியாகத் தெரியவில்லை. பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றும் தீர்மானம் நிறைவேறுவதற்கு குறைந்தபட்சம் 75 சதவீத பங்குதாரர்கள் ஆதரவு தேவை என்று அந்த தகவல்கள் தெரிவித்தன.
பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தைப் பொருத்தவரை நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவர் தனது பங்குகளை சட்டப்பூர்வமாக யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். 
ஆனால், பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரர் தனது பங்குகளை வெளி சந்தையில் விற்பனை செய்ய முடியாது. மாறாக நிறுவனத்துக்குள் அங்கம் வகிக்கும் முதலீட்டாளர்களிடமே தங்களது பங்குகளை விற்பனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com