பயணிகள் வாகன விற்பனை 33 லட்சத்தை நெருங்கி சாதனை

பயணிகள் வாகன விற்பனை சென்ற நிதி ஆண்டில் 33 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம்(சியாம்) தெரிவித்துள்ளது.
பயணிகள் வாகன விற்பனை 33 லட்சத்தை நெருங்கி சாதனை

பயணிகள் வாகன விற்பனை சென்ற நிதி ஆண்டில் 33 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம்(சியாம்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரபல நிறுவனங்களின் பயன்பாட்டு வாகனங்களுக்கு மவுசு அதிகரித்ததையடுத்து சிறிய நகரங்களில் இதற்கான தேவை விறுவிறுப்படைந்தது. இதையடுத்து 2016-17-இல் 30,47,582-ஆக இருந்த பயணிகள் வாகன விற்பனை சென்ற நிதி ஆண்டில் 7.89 சதவீதம் உயர்ந்து 32,87,965 ஆனது.
உள்நாட்டு சந்தைகளில் கார் விற்பனை 21,03,847 என்ற எண்ணிக்கையிலிருந்து 3.33 சதவீதம் அதிகரித்து 21,73,950-ஆனது. யுடிலிட்டி வெகிக்கிள் எனப்படும் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 20.97 சதவீதம் உயர்ந்து 9,21,780 கோடியானது.
உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்த போதிலும் அதன் ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டில் 7,58,727 என்ற எண்ணிக்கையிலிருந்து 1.51 சதவீதம் சரிவடைந்து 7,47,287 ஆனது. அனைத்து பிரிவுகளிலுமான வாகன விற்பனை சென்ற நிதி ஆண்டில் 14.22 சதவீதம் அதிகரித்து 2,49,72,788 ஆக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமை இயக்குநர் விஷ்ணு மாத்தூர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பயணிகளுக்கான பேருந்து விற்பனையைத் தவிர்த்து, சென்ற நிதி ஆண்டு மோட்டார் வாகன துறைக்கு ஏற்றமிகு ஆண்டாக முடிவடைந்திருக்கிறது. சிறிய நகரங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் அந்தப் பகுதிகளின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளன.
சென்ற 2017-18 நிதி ஆண்டில் பயணிகள் வாகன உற்பத்தி 40 லட்சத்தை கடந்தும், பயன்பாட்டு வாகனங்கள் உற்பத்தி 10 லட்சத்தை தாண்டியும் சாதனை படைத்துள்ளன. அதேபோன்று இருசக்கர வாகன உற்பத்தி முதல் முறையாக 2.3 கோடியையும், விற்பனை 2 கோடியையும் கடந்துள்ளது. 
பெரிய கார் வாங்குபவர்கள் தங்களது விருப்பங்களை மாற்றிக் கொண்டு வருவதால் நடப்பு 2018-19 நிதி ஆண்டில் பயணிகள் வாகன விற்பனை என்பது ஒற்றை இலக்க வளர்ச்சியாகவே இருக்கும். அதேசமயம், பயன்பாட்டு வாகனங்களை பொருத்தவரையில் அதன் வளர்ச்சி வலுவானதாக இருக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com