பிட்காயினில் முதலீடு செய்வது பாதுகாப்பானதுதானா?

பிஸினஸ் நொடிச்சுப் போய் ரொம்ப காலம் கஷ்டப்பட்டேன். அப்புறம் பிட்காயின்ல முதலீடு செஞ்சேன். நிறைய வருமானம் கிடைச்சு இப்போ நல்லா இருக்கேன்...' 
பிட்காயினில் முதலீடு செய்வது பாதுகாப்பானதுதானா?

பிஸினஸ் நொடிச்சுப் போய் ரொம்ப காலம் கஷ்டப்பட்டேன். அப்புறம் பிட்காயின்ல முதலீடு செஞ்சேன். நிறைய வருமானம் கிடைச்சு இப்போ நல்லா இருக்கேன்...' 

இப்போதெல்லாம் இதுபோன்ற வெற்றிக் கதைகளை நிறையவே கேட்க முடிகிறது.

இருந்தாலும் கூடவே, 36 வட்டி நிதி நிறுவனங்கள், மல்ட்டி லெவல் மார்கெட்டிங், தேக்குமரம், ஈமு கோழி திட்டங்கள் போன்ற "வெற்றிக் கதை'களும் அசரீரி போல மனதுக்குள் ஒலிப்பதை யாரும் தவிர்க்க முடியாது.

காரணம், இந்த எல்லா திட்டங்களுமே மிகக் குறுகிய காலத்தில் பை நிறைய வருவாய் தரும் கற்பக விருட்சங்களாக அறிமுகப்படுத்தப்படுபவை.

அதே பாணியில் அறிமுகப்படுத்தப்படும் பிட் காயின்கள் குறித்தும் பலருக்கு சந்தேகம் எழுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அதனால்தான் பிட்காயின்கள் குறித்து கேள்விப்பட்டதுமே "ஆளை விடுங்க சாமி' என்று கையெடுத்துக் கும்பிட்டு பலர் ஒதுங்கிவிடுகிறார்கள்.

ஆனால் இந்த உஷார் பேர்வழிகள் ஒருபுறம் இருந்தாலும், "ஏதோ சிறப்பா சொல்றாங்க... போட்டுத்தான் பார்ப்போமே! வந்தால் வரட்டும்' என்று ஏதோ விட்டேற்றியாக ஒரு சூதாட்டத்தைப் போல் பிட்காயினில் "பணம் கட்டுபவர்'களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த இரு தரப்பினருக்குமே உள்ள ஒரு ஒற்றுமை, பிட்காயினிலில் முதலீடு செய்வது எவ்வளவு பாதுகாப்பு? அதில் என்னென்ன இடர்பாடுகள் உள்ளன? என்பதெல்லாம் முழுமையாகத் தெரியாமலேயே அதுகுறித்து முடிவுகள் எடுப்பதுதான்!

சொல்லப்போனால், பிட்காயின் என்றால் என்னவென்பதே பலருக்கும் எளிதில் புரியாத இடியாப்பச் சிக்கலாக இருக்கிறது.

இருந்தாலும், கண்களைக் கட்டி காட்டில் விட்டவர்களைப் போல ஆளுக்கொரு திசையில் சென்று, அந்த முதலீடு குறித்து பலரும் பல கருத்துகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

எல்லாம் இருக்கட்டும்...

உண்மையில், பிட்காயின்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதுதானா?
அது பணம் காய்ச்சி மரமா, அல்லது படு பாதாளமா?

இந்தக் கேள்விக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்லி விட முடியாது.

பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு எவ்வளவு பொறுமை தேவையோ, அந்த அளவுக்கு இதில் உள்ள பாதுகாப்புத் தன்மைகளையும், இடர் அபாயங்களையும் கூட கொஞ்சம் பொறுமையாகத்தான் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தற்போது இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களை வாங்கி விற்பவர்களின் எண்ணிக்கை திடீரென்று பெருகிக் கொண்டே வருகிறது. நாட்டின் பணப்பரிமாற்றத்தில் 10 சதவீதம் மெய்நிகர் நாணயங்கள் பங்கு வகிக்கப்பதாக ஊர்ஜிதம் செய்யாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இந்த ராக்கெட் வளர்ச்சிக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? போட்ட பணத்துக்குக் கிடைக்கும் பெருத்த லாபம்தான்!

உதாரணத்துக்கு, கடந்த 2013-ஆம் ஆண்டில் 100 ரூபாய்க்கு ஒருவர் பிட்காயின் வாங்கியிருந்தால், தற்போது அதன் மதிப்பு 2017-ஆம் ஆண்டு ஜூன் வாக்கில் ரூ.30,000-ஆக உயர்ந்திருக்கும். அதாவது, 30 சதவீத வளர்ச்சி! 

ஆனால் அதே நேரம், இதே போல இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது ஒப்பிடக் கூடிய வேறு எந்த முதலீட்டு வழிமுறையும் இல்லாத காரணத்தால் முதலீட்டாளர்களின் ஒரே ஆபத்பாந்தவனாக பிட்காயின்கள் பார்க்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் கூட இந்த அளவுக்கு லாபம் கிடையாது.

இதுவும் மெய்நிகர் நாணய முதலீட்டு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இருந்தாலும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், ரூபாய் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி என்ற அமைப்பு இருப்பதைப் போல, மெய்நிகர் நாணயப் பரிமாற்றங்கள் எந்த அமைப்பின் அதிகார வரம்புக்குள் அடங்குவதில்லை.

இதனால், உங்களுக்கு அந்தப் பணம் திரும்பக் கிடைக்காமல் போனால் தெரிந்தவர்களிடம் சொல்லிப் புலம்ப முடியுமே தவிர, யாரிடமும் போய் முறையிட முடியாது. இருந்தாலும், பிட்காயின் தொடர்வலையைப் பொருத்தவரை, யாரும் யாரையும் ஏமாற்ற முடியாத அளவுக்கு சாதுர்யமாகப் பின்னப்பட்டுள்ளதாகக் கூறப்பவதால் அதில் நம்பி முதலீடு செய்யலாம் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

இந்த இடரை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டு பிட்காயின்களில் முதலீடு செய்தாலும், அது சட்டரீதியில் பிரச்னைகளை சந்திக்குமோ என்ற அச்சம் பலருக்கு உள்ளது.

எனினும், இந்தியாவில் பிட்காயின் வர்த்தகத்தை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. சொல்லப் போனால், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார வல்லுநர்களே பிட்காயினுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் பிட்காயினுக்கு சட்டரீதியிலான ஆபத்து இல்லை என்று கூறப்பட்டு வந்தது. இருந்தாலும், பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயம் சார்ந்த பரிமாற்றங்களை அனுமதிக்கக் கூடாது என்று முறைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மெய்நிகர் நாணய முதலீட்டாளர்கள் பதறிப் போனார்கள்.

இந்தியாவில் பிட்காயினின் எதிர்காலம் என்னாகும்? என்ற ஒரு மாபெரும் கேள்விக்குறி உருவானது.

ஆனால், பிட்காயினுக்கு வங்கிகளில் இதுபோன்ற முட்டுக்கட்டைகள் விழுவது இது புதிதல்ல என்பதால் ரிசர்வ் வங்கியின் அந்த அறிவிப்பு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்கிறது பிட்காயின் சேவையளித்து வரும் ஒரு நிறுவனம்.

"ஏற்கெனவே நீண்ட காலமாக வங்கிகள் செயல்படுத்தி வந்ததைத்தான் தற்போது ரிசர்வ் அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியிருக்கிறது. இதனால் நிலைமையில் பெரிய மாற்றம் வந்துவிட்டதாகக் கூற முடியாது.

உண்மையில், பலர் நினைப்பதைப் போல இந்தியாவில் பிட்காயின்களுக்கு தடை விதிக்கப்படவே இல்லை' என்கிறார் அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பிட்காயின்களுக்கு சட்ட சிக்கல் இல்லை என்றே தோன்றலாம். 

ஆனால், மத்திய அரசு நினைத்தால் பொருளாதாரச் சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொண்டு சிக்கலை ஏற்படுத்த முடியும் என்பதையும் முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அம்சங்களிலெல்லாம் பாதுகாப்பு விஷயத்தில் பிட்காயின்கள் ஓரளவு தேறினாலும், இடைத் தரகு நிறுவனங்களால் முதலீட்டளர்கள் எளிதில் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்பது பிட்காயின் விவகாரத்தில் மிகவும் ஆபத்தானதாகும்.

பிட்காயின்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் நாம் தேர்ந்தெடுக்கும் இடைத்தரகு நிறுவனங்கள் எப்படிப்பட்டவை என்பதை தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்வது, கல்லைக் கட்சிக் கொண்டு கிணற்றில் குதிப்பதைப் போன்றது என்கிறார் அத்தகைய நிறுவனத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி.

இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாகி பலரும் பணத்தை இழந்துள்ளார்கள் என்பதால் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த வகையில் பாரம்பரிய முதலீடுகளுக்கு இருப்பதைப் போன்ற இடர்கள் மட்டுமன்றி, புதிய இடர் அபாயங்களும் பிட் காயின் முதலீட்டில் உண்டு. அதே போல் பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை.

ஆனால், பிட்காயின்கள் உண்மையிலேயே பாதுகாப்பானவைதானா? என்பதை இந்த இரு அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்து முதலீட்டாளர்கள்தான் முடிவுக்கு வர வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com