
மின்சார கார்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க உரிமம் தேவையில்லை: மத்திய அரசு
By DIN | Published on : 17th April 2018 12:41 AM | அ+அ அ- |
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மின்சார கார்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மின்சார சட்ட விதிமுறைகளின்படி, அதன் பகிர்மானம், விநியோகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றுக்கு உரிமம் பெற வேண்டியது கட்டாயமாகும். அதனால்தான், மின்சாரத்தை நுகர்வோருக்கு விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் இத்தகைய (பகிர்மானம், விநியோகம், வர்த்தகம்) நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய தேவை இருக்காது. எனவே, மின்சார சட்டம் 2003-பிரிவின் கீழ், மின் வாகனங்களுக்கான பேட்டரிகளை சார்ஜிங் செய்யும் மையங்களை அமைக்க உரிமம் பெறத் தேவையில்லை என்று மத்திய மின்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு , மின்சார வாகனங்கள் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.