கார்களின் விலையை உயர்த்த டொயோட்டா திட்டம்

அடுத்த மாதம் கார்களின் விலையை உயர்த்த டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கார்களின் விலையை உயர்த்த டொயோட்டா திட்டம்

அடுத்த மாதம் கார்களின் விலையை உயர்த்த டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் என்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிகரித்து வரும் இடுபொருள் செலவினத்தை சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும், இதுநாள் வரையில் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லாமல் இருந்தோம். ஆனால், தற்போது நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
தற்போது, எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்வை அமல்படுத்துவது என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது இறுதிசெய்யப்பட்டு அடுத்த மாதம் முதல் விலை உயர்வு இருக்கும் என்றார் அவர்.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ரூ.5.49 லட்சம் விலையுடைய எட்டியோஸ் லிவா முதல் அதிநவீன சொகுசுக் காரான ரூ.1.41 கோடி விலையுடைய லேண்ட் குரூஸர் வரை விற்பனை செய்து வருகிறது.
இதனிடையே விலை உயர்வு காரணமாக கார் விற்பனை சரிவடையும் என சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. 
2018-19 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கான சுங்க வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும்; உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்தார். 
பட்ஜெட்டில் சலுகை அறிவிப்புகளை எதிர்நோக்கியிருந்த மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஜேட்லியின் எதிர்பாராத இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்தது. 
இதையடுத்து, சுங்க வரி உயர்வை தாங்கள் சுமக்க இயலாது என திட்டவட்டமாகத் தெரிவித்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களின் விலையை மாடல்களுக்கேற்ப ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அதிகரிப்பதாக தெரிவித்தன. 
இந்த நிலையில், விலை உயர்வு தங்களின் விற்பனையை பாதிக்கும் என்று தற்போது அந்த நிறுவனங்கள் கவலைபடத் தொடங்கியுள்ளன. 
இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதற்கு பின்பான விலையேற்றம் என்பது கார்களின் விற்பனையை சரிவடையச் செய்யும். நடப்பாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்நோக்கியிருந்த நிலையில், ஒற்றை இலக்க வளர்ச்சியை பெறுவதற்கே போராட வேண்டியிருக்கும் என சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com