5G: தென் கொரியக் கூட்டணிக்கு அச்சாரம் போடும் இந்தியா!

2ஜி, 3ஜி, 4ஜி பயன்பாடு முடிவுக்கு வந்து 5ஜி யுகம் ஆரம்பமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது. 
5G: தென் கொரியக் கூட்டணிக்கு அச்சாரம் போடும் இந்தியா!

2ஜி, 3ஜி, 4ஜி பயன்பாடு முடிவுக்கு வந்து 5ஜி யுகம் ஆரம்பமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது. 

3ஜி, 4ஜி அறிமுகத்தில் கோட்டை விட்டது போல 5ஜியிலும் நடந்து விடக்கூடாது என்பதில் இந்தியா மிகத் தெளிவாக உள்ளது. அதனால்தான், 5ஜி தொழில்நுட்பத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க தொலைத் தொடர்பு செயலர் தலைமையில் தற்போதே உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உயர்மட்ட குழுவைத் தவிர, தொழில்நுட்ப தரம், பெரிய அளவில் சோதனைகளை நடத்த பல்வேறு துணைக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

5ஜி-க்கான தொழில்நுட்ப வடிவமைப்பு, மேம்பாடு, தயாரிப்பு உள்ளிட்டவற்றில் இறுதி செயல்வடிவம் வரும் ஜூன் மாதத்துக்குள் உருவாக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் முடிசூடா மன்னனாகத் திகழும் தென்கொரியாவுடன் கூட்டணி அமைக்க இந்தியா அச்சாரம் போட்டு அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப குறியீட்டு பட்டியிலில் தென்கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம், அந்த பட்டியலில் இந்தியா 134-ஆவது இடத்தில் உள்ளது. இதனை உணர்ந்து தென்கொரியாவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டால் இந்தியாவில் 5ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்திவிடலாம் என்பது இந்தியாவின் நம்பிக்கை.

தென்கொரியாவில் 90 சதவீத வீடுகளில் பிராட்பேண்ட் இணையதள சேவையின் 1,000-எம்பிபிஎஸ் ஆகும். இதிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் அந்த நாடு எந்த அளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளதை காணலாம்.

இது போன்ற சாதகமான அம்சங்களை மனதில் கொண்ட தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா, மொபைல் காங்கிரஸ் மாநாட்டுக்காக ஸ்பெயின் சென்றிருந்த போதே 5ஜி தொழில்நுட்பம் தொடர்பாக இருநாடுகளுக்கிடையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பினார். 

அதன் விளைவாகத்தான், தற்போது, தென்கொரியாவுடன் இணைந்து 5ஜி சோதனை மையங்களை அமைப்பது குறித்து இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

சர்வதேச அளவில் 5ஜி சேவையை தென்கொரியாதான் வெற்றிகரமாக தொடங்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில், தென்கொரியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜிக்கான சோதனை ஓட்டத்தை பியோங்சாங்கில் அண்மையில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கி விட்டன. 

தென்கொரியா பாணியிலேயே இந்தியாவும் 5ஜி தொழில்நுட்பத்தை முன்னதாகவே வரவேற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதே முன்னெடுத்துச் செல்ல ஆயத்தமாகி விட்டது. இதற்கு, தென்கொரியாவின் தொலைத்தொடர்பு துறை தொழில்நுட்ப அனுபவம் நிச்சயம் கைகொடுக்க என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு நிறையவே உள்ளது. 

தர நிர்ணய மற்றும் தொழில்நுட்ப விதிமுறைகள் 2019-ஆம் ஆண்டுக்குள் இறுதிசெய்யப்பட்டு அதன்பிறகு 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகும் என்பது இத்துறை சார்ந்த நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வெகுஜனமாகிய நமது எதிர்பார்ப்பும் அதுவே...! 

-அ. ராஜன் பழனிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com