வாழை ஏற்றுமதி வணிக வளாகம்: ஆந்திரத்தை முந்தும் அவசியத்தில் தமிழகம்

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்டு வாழை ஏற்றுமதிக்கான வணிக வளாகத்தை அமைக்க, ஆந்திரத்தை முந்தும் வகையில் தமிழகம் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வாழை ஏற்றுமதி வணிக வளாகம்: ஆந்திரத்தை முந்தும் அவசியத்தில் தமிழகம்

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்டு வாழை ஏற்றுமதிக்கான வணிக வளாகத்தை அமைக்க, ஆந்திரத்தை முந்தும் வகையில் தமிழகம் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 வாழை உற்பத்தி: இந்தியாவின் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழை உற்பத்தியானது முக்கிய பங்கு வகிக்கிறது. 830 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக பிரேசிலில் 486.99 ஆயிரம் ஹெக்டேர், பிலிப்பைன்ஸில் 449.61 ஆயிரம் ஹெக்டேர், தான்சானியாவில் 420 ஆயிரம் ஹெக்டேர், சீனாவில் 373.45 ஆயிரம் ஹெக்டேர் என உலக நாடுகளில் மொத்தம் 5014.06 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.

 இந்தியாவில் மட்டும் மொத்தமாக 29,7
80 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலக உற்பத்தியில் 30 சதவீதமாகும். இந்திய உற்பத்தியில் தமிழகத்தில் 30 சதவீதம் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

 தமிழகத்தை அடுத்து குஜராத், ஆந்திரம், உத்தரப் பிரதேசம், மகராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய 10 மாநிலங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

 இந்த 10 மாநிலங்களிலும் சுமார் 27 ஆயிரம் மெட்ரிக் டன் வாழை உற்பத்தியாகிறது. சர்வதேச அளவில் வாழைப் பழ ஏற்றுமதி வர்த்தகமானது ரூ.55 ஆயிரம் கோடியாக உள்ளது. இதில், இந்தியாவின் பங்களிப்பு 0.5 சதவீதம் மட்டுமே. இந்தியாவில்இருந்து ரூ. 250 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி நடைபெறுகிறது.

 தமிழகம் முன்னிலை: சர்வதேச அளவில் இந்தியாவில்தான் வாழை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில்தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தேனி, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

 தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ரகங்களில் ரோபஸ்டா, குள்ள வாழை, கோ.1 மட்டி மற்றும் சன்ன செங்கதலி, காவன்டிஷ் ரகங்கள் வாழைப்பழம் ஏற்றுமதிக்கு உகந்தவையாகும். மொந்தன், நேந்திரன், வயல் வாழை மற்றும் சாம்பல் நிற மொந்தன் ஆகியவை வாழைக்காய் ஏற்றுமதிக்கு உகந்தவை. மலைப் பகுதிக்கு ஏற்ற ரகங்களாக விருப்பாட்சி, சிறுமலை, செவ்வாழை, மனோரஞ்சிதம், நமரை மற்றும் லாடன் ஆகியவை உள்ளன.
 குறை என்ன?: வாழை உற்பத்தியில் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகம் இருந்தாலும், ஏற்றுமதி தரத்துக்கு தயார்படுத்துவதில்லை என்ற குறையுள்ளது. அத்தகைய தரத்துக்கு வாழையை உற்பத்தி செய்தால் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். மேலை நாடுகளில் இத்தகைய தரமான வாழை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.700 ஊதியமாக பெறும் நிலை உள்ளது. இதேநிலை இந்தியாவிலும் வர வேண்டும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக இந்திய தொழில் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 ஆலோசனைக் கருத்தரங்கு: இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், தமிழக அரசின் வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து வாழை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களை தமிழகத்தில் உற்பத்தி மண்டலங்கள் வாரியாக நடத்தி வருகின்றன.
 மத்திய அரசின் வரைவுத் திட்டம்: மத்திய அரசின் 2018-19ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வேளாண் வளர்ச்சிக்காக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், 100 பில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு இலக்காக கொண்டு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாகவும் அறிவித்துள்ளது. இதன்படி, வேளாண் விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய மத்தியஅரசால் வரைவு திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
 தமிழகத்தில் திருச்சியை வாழை ஏற்றுமதிக்கும், ஆந்திரத்தில் கடப்பா, அனந்தப்பூர் மாவட்டங்களை வாழை ஏற்றுமதிக்கும், கர்நாடகத்தில் பெல்காம், மைசூர் பகுதிகளை மாதுளை ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தயார்படுத்தவுள்ளது. இதேபோல, உத்தரப் பிரதேசம், மகராஷ்டிரத்தில் மாம்பழ ஏற்றுமதிக்கும், ஸ்ரீநகர் ஆப்பிள் ஏற்றுமதிக்கும், நாக்பூர் ஆரஞ்சு ஏற்றுமதிக்கும் தயார்படுத்தப்படவுள்ளன.
 ஆந்திரத்தை முந்துமா?: வாழை ஏற்றுமதியில் தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மட்டுமே தேர்வாகியுள்ளது. ஆனால், ஆந்திரத்தில் கடப்பா, அனந்தப்பூர் என இரு மாவட்டங்களை தேர்வு செய்துள்ளது. ஆந்திரத்தில் வாழை உற்பத்தி குறைவு. தமிழகத்தில்தான் அதிகம். எனவே, ஆந்திரத்தை முந்திக் கொண்டு திருச்சியை வாழை ஏற்றுமதி வளாகமாக அறிவிக்க மாநில அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் வாழை விவசாயிகள்.
 இதுதொடர்பாக, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் மகாதானபுரம் வி. ராஜாராம் கூறியது:
 மத்திய அரசின் 2018ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி வளாக வரைவுத்திட்டத்தில் திருச்சி மாவட்டமானது வாழை ஏற்றுமதி வளாகமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய வாழை ஆராய்ச்சி நிலையமும் திருச்சி மாவட்டத்தில்தான் உள்ளது. இதுமட்டுமல்லாது தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமையிடமும் திருச்சி மாவட்டத்தில்தான் உள்ளது. ஆனால், மத்திய அரசின் வரைவுத்திட்டத்தில் தமிழகத்தில் ஒரு பகுதி (திருச்சி) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திரத்தில் 2 பகுதிகள் (கடப்பா, அனந்தப்பூர்) குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஆந்திரத்தை முந்திக் கொண்டுதமிழகத்துக்கு இந்த ஏற்றுமதி வளாகத்தைப் பெற்றுத்தர மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டம் செயல்முறைக்கு வந்தால் தமிழக வாழை விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவர். ஏற்றுமதி வளாகத்தைச் சார்ந்து பிற தொழில் வேலைவாய்ப்புகளும் தமிழகத்தில் அதிகரிக்கும் என்றார் அவர்.
 -ஆர். முருகன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com