4-ஆவது வாரமாக பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து நான்காவது வாரமாக முன்னேற்றத்தைக் கண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டது முதலீட்டாளர்களிடையே
4-ஆவது வாரமாக பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்


இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து நான்காவது வாரமாக முன்னேற்றத்தைக் கண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்கா மற்றும் துருக்கி நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துருக்கியிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா வரியை அதிகரித்துள்ள நிலையில், துருக்கியும் அதேபோன்ற பதில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஐபோன், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை புறக்கணிக்க வேண்டும் என துருக்கி அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், துருக்கியிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு மேலும் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருநாடுகளுக்கிடையில் உள்ள வர்த்தக உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இருநாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் துருக்கி கரன்ஸி லிராவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டின் தொடக்கத்திலிருந்து அதன் மதிப்பு 38 சதவீதம் சரிவடைந்தது. குறிப்பாக, கடந்த ஒருவாரத்தில் மட்டும் லிராவின் மதிப்பு 7 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. 
இதன் பாதிப்பு உலக நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடந்த வாரம் 70.40-ஆக வீழ்ச்சியடைந்தது. 
இதைத் தவிர, இறக்குமதி அதிகரிப்பால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை உயர்ந்தது, சீனா பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை ஆகியவையும் கடந்த வார பங்கு வர்த்தகத்தில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தின. 
இருப்பினும் வார இறுதியில் வெளியான ஜூலை மாத சில்லறை பணவீக்கம், பொது பணவீக்கம் குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் பங்குச் சந்தைகளுக்கு சாதகமான அமைந்தன. 
மேலும், நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக அமைந்தது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை பேசி தீர்க்க அமெரிக்கா-சீனா ஒப்புக் கொண்டது உள்ளிட்ட நிகழ்வுகள் பங்குச் சந்தைகளின் முன்னேற்றத்துக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. இதன் காராணமாகவே, பங்கு சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு ஏற்றத்தைக் கண்டன.
கடந்த வார பங்கு வர்த்தகத்தில் ஆரோக்கியபராமரிப்பு துறை குறியீட்டெண் அதிகபட்சமாக 5.33 சதவீதம் உயர்ந்தது. இதையடுத்து, தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 2.78 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 2.37 சதவீதமும், தொழில்நுட்பம் 2 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.33 சதவீதமும், மோட்டார் வாகனம் 0.58 சதவீதமும் உயர்ந்தன. 
அதேசமயம், எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 2.18 சதவீதமும், பொதுத் துறை 1.44 சததவீதமும், பொறியியல் பொருள்கள் 1.29 சதவீதமும், உலோகம் 1.06 சதவீதமும், ஐபிஓ 0.70 சதவீதமும், மின்சாரம் 0.56 சதவீதமும் சரிந்தன. 
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில், 16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 15 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில் சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டியது சன் பார்மா ஆகும். இந்நிறுவனப் பங்கின் விலை கடந்த வாரத்தில் 12.59 சதவீதம் ஏற்றமடைந்தது. இதைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி 3.63 சதவீதமும், ஐடிசி 3.33 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.84 சதவீதமும், யெஸ் வங்கி 2.60 சதவீதமும், கோல் இந்தியா 1.88 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 1.86 சதவீதமும், ஹிந்துஸ்தான் யுனிலீவர் 1.85 சதவீதமும், மஹிந்திரா அண்டு மஹிந்திரா 1.69 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 1.13 சதவீதமும், பார்தி ஏர்டெல் பங்கின் விலை 1.06 சதவீதமும் உயர்ந்தன.
அதேசமயம், ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை 4.38 சதவீதமும், வேதாந்தா 3.87 சதவீதமும், ஓஎன்ஜிசி 3.52 சதவீதமும், கோட்டக் வங்கி 1.85 சதவீதமும், ஹெச்சிடிஎஃப்சி வங்கி பங்கின் விலை 1.80 சதவீதமும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 78 புள்ளிகள் உயர்ந்து 37,947 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.17,811.53 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. இதற்கு முந்தைய மூன்று வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 1,372 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 41 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 11,470 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,24,798.55 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com