வியப்பை அளித்த விலகல்!

உலக அளவில் செல்வாக்கான பதவியை ஒரு இந்தியர் பெற்றால் நாடே அவரை நோக்கித் திரும்புவதில் வியப்பில்லை; அப்படி ஒரு பதவியைப் பெற்றவர்தான்
வியப்பை அளித்த விலகல்!

உலக அளவில் செல்வாக்கான பதவியை ஒரு இந்தியர் பெற்றால் நாடே அவரை நோக்கித் திரும்புவதில் வியப்பில்லை; அப்படி ஒரு பதவியைப் பெற்றவர்தான் இந்திரா நூயி. உலகம் முழுவதும் அடையாளம் காணக் கூடிய பெப்சி குளிர் பானம் போன்றவற்றைத் தயாரிக்கும் பெப்சிகோவின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். அதன் வரலாற்றில் காணாத உச்சத்தை அவரது தலைமையின் கீழ் அடைந்தது பெப்சி நிறுவனம். அண்மையில் பெப்சிகோவின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகப் போவதாக இந்திரா நூயி அறிவித்தார். தலைமைப் பதவி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது போலவே, அவரது பதவி விலகல் அறிவிப்பும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.
அவர் பள்ளி, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தவர். கல்விக்குப் பிறகு சில ஆண்டுகள் ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட நிறுவனங்களில் சில காலம் பணியாற்றிய பிறகு, நிர்வாக இயல் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். நிர்வாக இயலில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், நிதி ஆலோசனை நிறுவனம், மோட்டரோலா போன்ற நிறுவனங்களில் பணி. 1994-ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்தது தான் அவரது வாழ்வில் திருப்புமுனை.
நூறாண்டு கண்ட குளிர்பான நிறுவனம் பெப்சிகோ. அதில் இந்திராவுக் விரைவான வளர்ச்சி.
1997-இல் பெப்சிகோவின் ஃபாஸ்ட் ஃபுட் பிரிவான யம் பிராண்ட்ஸ் மறுசீரமைப்பு, ட்ராபிகானா, குவேக்கர் ஓட்ஸ் போன்றவற்றின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து பெப்சியுடன் இணைப்பதிலும் முக்கியப் பங்காற்றினார். 
2001-இல் அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரி பொறுப்புகளுக்கு உயர்ந்தார். நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த ஸ்டீவன் ரைநமண்ட் 2007-இல் ஓய்வு பெற்றதையடுத்து, பாரம்பரியமான அந்நிறுவனத்தின் 5-ஆவது தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார் இந்திரா நூயி. அந்நிறுவனத்தின் உயர் பதவியை வகிக்கும் முதல் பெண் அவர்தான்.
அவருடைய அடுத்தடுத்த நிர்வாக நடவடிக்கைகளால் பெப்சிகோ இல்லத்திலிருந்து ஆண்டுதோறும் புதிய புதிய பிராண்டுகள் சர்வதேச அளவில் அறிமுகமாகின. ஒவ்வொன்றும் நூறு கோடி டாலர் வருவாயை ஈட்டுவதாக இருந்தது. நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டரை மடங்கு அதிகரித்தது.
இந்திரா நூயி தலைமை பொறுப்புக்கு வந்ததும், பெப்சிகோவின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. உற்சாக குளிர் பானமாக அறியப்பட்ட பெப்சி பிராண்ட் பானங்களை, ஆரோக்கியமான உணவுப் பொருள் நிறுவனமாக மாற்றியது. உணவு, உடல் ஆரோக்கியம் குறித்த கண்ணோட்டம் உலகெங்கும் மாறி வந்த நிலையில், பெப்சி அதற்கு ஈடு கொடுத்து தன்னை விரைவாக மாற்றிக் கொண்டது.
கடந்த பல ஆண்டுகளாக உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார் இந்திரா. தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் நீண்ட காலம் இருந்துவிட்ட நிலையில், அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது. பெப்சிகோ நிறுவன நிர்வாக குழு தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பு வகித்து வந்த அவர் வரும் அக்டோபர் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்துவிட்டார். நிர்வாகத்தில் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்ற காரணத்தால், அடுத்த ஆண்டு வரை நிர்வாக குழு தலைவர் பொறுப்பை மட்டும் வகிக்கப் போவதாக கூறியுள்ளார்.
அவரது தலைமையின் கீழ், பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே பெப்சிகோ நிறுவனம் கண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. லாபத்தைக் கொண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குப் பங்களிப்பு செய்வதைவிட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் பாதையில் சென்று லாபம் ஈட்டுவது சிறந்தது என்றார் அவர்.
நிறுவனத்தில் மொத்தம் 24 ஆண்டுகள் பணி, சிஇஓ பொறுப்பில் வெற்றிகரமான 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வை அறிவித்துள்ளார். பணியிலிருந்து விலகினாலும், முழு ஓய்வு எடுப்பாரா இந்திரா? அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அனுதாபியான அவர், அக்கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனின் தீவிர ஆதரவாளர். அதிபர் தேர்தலில் டிரம்ப்பிடம் ஹிலாரி தோல்வியுற்றபோது, இந்திரா நூயி துவண்டு போனார். ஹிலாரி வெற்றி பெற்று அதிபராகியிருந்தால், இந்திராவுக்கு அரசுப் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு என்று பேசப்பட்டது. வாஷிங்டன் அரசியல் அவருடைய லட்சியமா என்ற கேள்விக்கு, "ஏன் இருக்கக் கூடாது, அதையும் முயற்சி செய்யலாமே' என்று கூறியிருந்தார்.
ஆனால் ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு அளித்த பேட்டியில், "இத்தனை காலம் பெப்சி குடும்பம் பற்றியே எண்ணி வந்தேன்; எனவே ஓய்வு காலத்தை சொந்தக் குடும்பத்துடன் கழிக்கவே விரும்புகிறேன்!' என்று கூறியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com