அசுர வளர்ச்சியில் 3 தமிழக நகரங்கள்!

உலகளவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளன.
அசுர வளர்ச்சியில் 3 தமிழக நகரங்கள்!

உலகளவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளன.
 அவற்றில், தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்களும் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன.
 அடுத்த இருபது ஆண்டுகளில், மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியடையும் சர்வதேச நகரங்கள் குறித்த ஆய்வை "ஆக்ஸ்ஃபோர்டு எக்கனாமிக்ஸ்' அமைப்பு அண்மையில் மேற்கொண்டது. அதில் உலக அளவில் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் முதல் 10 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தது என்பதை அந்தப் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. அதிலும் மற்றொரு சிறப்பாக, அந்த 10 நகரங்களின் 3 தமிழகத்தைச் சேர்ந்தவை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 இந்த பட்டியலில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரம் முதலிடத்தில் உள்ளது. இங்கு வைரத் தொழில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பட்டைத் தீட்டப்படும் வைரங்களுக்கு உலகளவில் போட்டி அதிகம். எனவே, இந்நகரம் 2019-2035 ஆண்டுகளுக்கிடையில் சிறப்பான வளர்ச்சியை எட்டும். இதன் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 9.17 சதவீதம் என ஆக்ஸ்ஃபோர்டு எக்கனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.
 இதையடுத்து அப் பட்டியலில், ஆக்ரா, பெங்களூரு நகரங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது. இவற்றின் ஆண்டு வளர்ச்சி விகிதம் முறையே 8.58 சதவீதம் மற்றும் 8.5 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதைத் தவிர, 8.47 சதவீத சராசரி ஆண்டு வளர்ச்சியுடன் ஹைதராபாத் நான்காவது இடத்திலும், 8.41 சதவீத வளர்ச்சியுடன் நாகபுரி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
 சர்வதேச அளவில் பின்னலாடைத் தொழிலில் கொடி கட்டி பறக்கும் திருப்பூர் நகரம் இப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதன் சரசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.36 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 8.36 சதவீத சராசரி ஆண்டு வளர்ச்சியுடன் ராஜ்கோட் நகரம் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி நகரம் இப்பட்டியலில் 8.29 சதவீத வளர்ச்சியுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. பெல் உள்ளிட்ட பொறியியல் சாதன தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு அதிகளவில் உள்ளதால் அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 8.17 சதவீத சராசரி ஆண்டு வளர்ச்சியுடன் சென்னை ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம், நிதி சார்ந்த நிறுவனங்களின் தலைமையகமாக சென்னை திகழ்வதால் அதன் வளர்ச்சி எதிர்வரும் 16 ஆண்டுகளில் மிகச்சிறப்பான வகையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் 10-ஆவது இடத்தில் ஆந்திரத்தின் விஜயவாடா இடம் பெற்றுள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 8.16 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 எவ்வாறாயினும், தமிழக நகரங்களுக்கும், பிற இந்திய நகரங்களுக்கும் வளமான எதிர்காலம் உண்டு என்பதை ஆக்ஸ்ஃபோர்டு எக்கனாமிக்ஸ் உரக்க சொல்லியுள்ளது!
 -அ. ராஜன் பழனிக்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com