"ஒபெக்'கிலிருந்து கத்தார் விலகல்...இந்தியாவை பாதிக்குமா ?

 "பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு' என்பதன் சுருக்கம்தான் இது. இந்த அமைப்பின் 15 உறுப்பு நாடுகள்தான் உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் 44 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
"ஒபெக்'கிலிருந்து கத்தார் விலகல்...இந்தியாவை பாதிக்குமா ?

"ஒபெக்'...
 "பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு' என்பதன் சுருக்கம்தான் இது.
 இந்த அமைப்பின் 15 உறுப்பு நாடுகள்தான் உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் 44 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
 உலகில் அறியப்பட்ட 81.5 சதவீத எண்ணெய் வளம், இந்த அமைப்பைச் சேர்ந்த நாடுகளிடம்தான் கொட்டிக் கிடக்கிறது.
 பெட்ரோலியப் பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, கச்சா எண்ணெய் சந்தையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், வாடிக்கையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலன்களைப் பேணவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயம் செய்வதில் இந்த அமைப்பு மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.
 பொதுவாக, இந்தியா போன்ற பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்திலும், அதன் மூலம் அரசியல் சூழலிலும் கச்சா எண்ணெய் விலை என்பது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
 அந்த வகையில், கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் ஒபெக் கூட்டமைப்பு, சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகத் திகழ்ந்து வருகிறது.
 இத்தகைய சூழலில், சுமார் 58 ஆண்டுகளாக அந்த அமைப்பில் அங்கம் வகித்து வந்த கத்தார், ஒபெக்கிலிருந்து வெளியேறப்போவதாக அண்மையில் அதிரடியாக அறிவித்திருக்கிறது.
 தங்களது கச்சா எண்ணெய் தயாரிப்பு மிகவும் குறைவுதான் என்பதாலும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாலும் ஒபெக் அமைப்பிலிருந்து விலகுவதாக கத்தார் எரிசக்தித் துறை இணையமைச்சர் சாட் அல்-காபி விளக்கமளித்துள்ளார்.
 அவர் சொல்வதைப் போல, கத்தாரின் ஏற்றுமதியில் கச்சா எண்ணை மிகச் சிறிய பங்கைத்தான் வகிக்கிறது. இயற்கை எரிவாயு மூலம்தான் அந்த நாடு பெரும்பான்மையான வருவாயை ஈட்டி வருகிறது. திரவ நிலை இயற்கை எரிவாயுவைப் பொருத்தவரை உலகிலேயே கத்தார்தான் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.
 எனவே, கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கிலிருந்து விலகுவதற்கு கத்தார் சொல்கிற காரணத்தை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள முடிகிறது. இருந்தாலும், அந்த முடிவுக்கு அரசியலும் முக்கியக் காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
 ஒபெக்கிலிருந்து வெளியேறுவதற்கு அரசியல் காரணங்கள் எதுவுமில்லை என்று சாட் அல்-காபி திட்டவட்டமாகக் கூறினாலும், ஒபெக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் சவூதி அரேபியாவுக்கும், கத்தாருக்கும் இடையிலான ராஜீய ரீதியிலான மோதல் கத்தாரின் இந்த முடிவுக்கு முக்கியமான ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது என்கிறார்கள் அவர்கள்.
 இதை அல்-காபியே மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார். "நாங்கள் மிகச் சொற்பமாகவே பங்கு வகிக்கும் ஓர் அமைப்பில், அதுவும் தனியொரு நாடால் ஆட்டுவிக்கப்படும் அமைப்பில் எங்களது உழைப்பையும், ஆதாரங்களையும் விரயம் செய்ய விரும்பவில்லை" என்று கூறியதன் மூலம், சவூதி அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட விரும்புவதை அவர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.
 உண்மையில், கத்தாரும், சவூதி அரேபியாவும் எப்போதுமே எதிரும் புதிரும்தான். அரேபிய கண்டத்தில் ஒரு குட்டி நாடான கத்தார், அக்கம் பக்கத்து நாடுகளுடன் ஒத்துப் போகாமல், தனக்கென்று தனிக் கொள்கையை வகுத்து செயல்பட்டு வருகிறது.
 முக்கியமாக, ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானுடன் கத்தார் ஒட்டி உறவாடி வருவது, சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியாவுக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதுபோல், தனது "அல் ஜஸீரா' தொலைக்காட்சி மூலம் அரபு நாடுகளில் கிளர்ச்சியைத் தூண்டி வருவதாக கத்தார் மீது சவூதி அரேபியா குற்றம் சாட்டி வருகிறது.
 முக்கியமாக, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கக் கூட்டுப் படையில் கத்தார் அங்கம் வகித்தாலும், சிரியாவில் அதிபர் அல்-அஸாதுக்கு அந்த உதவி அளித்து வருகிறது. மேலும், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புகளுக்கும் கத்தார் ஆதரவு நல்கி வருகிறது.
 இதுபோன்ற காரணங்களால், சவூதி அரேபியாவுக்கும், கத்தாருக்கும் இடையே எப்போதுமே பனிப்போர் தான்!
 ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிப் போய், சவூதி தலைமையிலான கூட்டணி நாடுகள் கத்தாரை அழைத்து "ஈரான் - துருக்கியுடனான உறவைத் துண்டிக்க வேண்டும்; அல் ஜசீரா தொலைக்காட்சியை இழுத்து மூட வேண்டும்; அரபு நாடுகளுடன் ராணுவ-பொருளாதார-கலாசார நட்புறவைப் பேண வேண்டும்" என்று கறாரான நிபந்தனைகளை விதித்தது.
 இருந்தாலும், "அப்படியெல்லாம் செய்தால், அது எங்கள் நாட்டு இறையாண்மையை உங்களிடம் அடமானம் வைப்பதைப் போலாகிவிடும்' என்று கூறி, அந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டது கத்தார்.
 அதனைத் தொடர்ந்து, "பயங்கரவாதிகளுடனான" தொடர்பை கத்தார் விட மறுப்பதாகக் கூறி, அந்த நாட்டுடனான தூதரக உறவை சவூதி அரேபியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் துண்டித்துக் கொண்டது. சவூதியுடன் சேர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளும் கத்தாருடனான உறவை முறித்துக் கொண்டன.
 மேலும், கத்தார் மீது பல்வேறு தடைகளையும் அந்த நாடுகள் விதித்தன. இப்படியாக, பிற அரபு நாடுகளை சேர்த்துக் கொண்டு கத்தாரை சவூதி அரேபியா சாமர்த்தியமாக தனிமைப்படுத்தியது.
 இருந்தாலும், இதற்கெல்லாம் அசராத கத்தார், ஈரான் மற்றும் துருக்கி நாடுகளுடனான தனது உறவை இன்னும் நெருக்கமாக்கி கொண்டது.
 இஸ்லாமிய அரசியல் அமைப்புகளுக்கான தனது ஆதரவையும் கத்தார் விடவில்லை. இதன் காரணமாக, சவூதிக்கும், கத்தாருக்கும் இடையே சமாதானம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மேலும் மேலும் மங்கி வந்தது.
 இந்தச் சூழலில்தான், சவூதி அரேபியாவின் ஆதிக்கம் ஓங்கியிருந்த ஒபெக்கிலிருந்து விலகும் முடிவை கத்தார் அறிவித்துள்ளது.
 எனினும், இந்த முடிவால் ஒபெக் அமைப்புக்கோ, அதன் மூலம் கச்சா எண்ணெய் சந்தைக்கும், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுமா? என்பதுதான் இந்த தருணத்தில் முக்கியமாக எழும் கேள்வியாக உள்ளது.
 இதற்குப் பதிலளிக்கும் பொருளாதார நிபுணர்கள், ஒரு சில காரணங்களைத் தவிர கத்தார் வெளியேற்றம் ஒபெக்கை பெரிய அளவில் பாதிக்காது என்கிறார்கள்.
 ஒபெக் அமைப்பைப் பொருத்தவரை, கச்சா எண்ணெய் உற்பத்தியில் கத்தாரின் பங்களிப்பு வெறும் இரண்டே சதவீதம் என்பதால், அது வெளியேறுவது கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே அவர்களின் கணிப்பு.
 எனினும், ஒபெக் உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்து வைப்பது, ரஷியா போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுடன் பேசி ஒப்பந்தங்களை முடித்து வைப்பது போன்ற பணிகளை கத்தார் இதுவரை திறம்பட செய்து வந்தது.
 எனவே, இந்த விவகாரத்தைப் பொருத்தவரை கத்தார் வெளியேறவது ஒபெக் கூட்டமைப்புக்கு ஓர் இழப்பாக இருக்கக் கூடும். இது, அமைப்பின் செயல்பாட்டிலும், சர்வதேச கச்சா எண்ணெயின் விலையிலும் மிகச் சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதும் ஒரு சில நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
 அந்த வகையில், ஒபெக்கிலிருந்து கத்தார் வெளியேறுவதால் அந்த அமைப்பிலோ, சர்வதேச கச்சா எண்ணெய் விலையிலோ அச்சம் கொள்ளத் தக்க அளவு பாதிப்பு ஏற்படாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
 இந்தியாவைப் பொருத்தவரை, திரவ நிலை இயற்கை எரிவாயுவைத்தான் கத்தாரிடமிருந்து பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. அந்த எரிபொருளின் விலைக்கும், ஒபெக்கிலிருந்து கத்தார் வெளியேறுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால், இதுகுறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
 இருந்தாலும், கத்தாரின் இந்த முடிவு, ஒபெக் அமைப்புக்கே முடிவு கட்டுவதற்தான ஆரம்பமாகக் கூட இருக்கலாம் என்று கூட சில சர்வதேச பொருளாதார ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 ஒபெக் கூட்டமைப்பில் இருப்பதைவிட, தனித்து செயல்படுவதுதான் ஓர் எண்ணெய் ஏற்றுமதி நாட்டின் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதை, அந்த அமைப்பிலிருந்து வெளியேறியதன் மூலம் பிற உறுப்பு நாடுகளுக்கு கத்தார் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
 எனவே, பிற நாடுகளும் ஒவ்வொன்றாக ஒபெக்கிலிருந்து வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் சில சர்வதேச சந்தை ஆய்வாளர்கள்.
 அதே நேரம் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதற்காக அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்களே ஆறுதல் கூறுகின்றனர்.
 ஒபெக் அமைப்பின் கட்டுப்பாடு இல்லாமல் போவது, கச்சா எண்ணெய் சந்தைக்கு சில தீமைகள் உண்டு என்பது போல சில நன்மைகளும் உண்டு என்பதால் ஒபெக் கூட்டமைப்பு சிதறுவதை நினைத்து கவலைப்படவும் தேவையில்லை, சந்தோஷப்படவும் தேவையில்லை என்கிறார்கள் அவர்கள்.
 ஆக, இப்போதைய நிலையில், ஒபெக்கிலிருந்து கத்தார் வெளியேறுவது இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்காது என்பதே நிபுணர்களின் நிலைப்பாடாக உள்ளது.
 - நாகா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com