மின்சார வாகனங்கள் தயாரிப்பு: கைகோக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

இன்னும் சில ஆண்டுகளில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இந்தியச் சாலைகள் முழுவதும் ஓடச் செய்யும் இமாலயப் பொறுப்பை மத்திய அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தலையில் சுமத்தியிருக்கிறது.
மின்சார வாகனங்கள் தயாரிப்பு: கைகோக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

இன்னும் சில ஆண்டுகளில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இந்தியச் சாலைகள் முழுவதும் ஓடச் செய்யும் இமாலயப் பொறுப்பை மத்திய அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தலையில் சுமத்தியிருக்கிறது.

இப்போது நாம் சாலைகளில் சர்வசாதாரணமாகக் காணும் பெட்ரோல், டீசல் கார்களை, வரும் 2030-ஆம் ஆண்டுக்குப் பிறகு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், அதன் மூலம் உலக வெப்பமயமாதலைத் தவிர்க்கவும் இந்தியா எடுத்து வரும் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

எனினும், நாட்டின் தற்போதைய சந்தைச் சூழலில், மின்சாரக் கார்களை அறிமுகப்படுத்துவதும், அதனை வியாபார ரீதியில் வெற்றிகரமாக்குவதும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும்.

பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு நன்குப் பழகிப் போன இந்தியர்களிடையே மின்சார வாகனங்களைக் கொண்டு சேர்ப்பது நிறுவனங்களுக்கு மிகச் சவாலாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

ஏற்கெனவே, பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியச் சந்தைகளில் அறிமுகமான "ரேவா' போன்ற மின்சாரத்தில் இயங்கும் கார்கள் படுதோல்வி அடைந்தது, தற்போது கூட சந்தையில் அறிமுகமாகியுள்ள பல மின்சார பைக்குகள் சரியாக விற்பனையாகாதது போன்ற காரணங்கள் அரசின் கொள்கையை அமல்படுத்த நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும், இத்தகைய சவால்களையெல்லாம் எதிர்கொள்வதற்காகவும், இந்தியச் சாலைகளை சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களால் நிரப்புவதற்காகவும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுக்கிடையேயான போட்டியை மறந்து ஒன்றுக்கொன்று கைகோக்கத் தொடங்கியுள்ளன.

சுஸூகி-டொயோட்டா

ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் ஜாம்பவான்களான சுஸூகியும், டொயோட்டாவும் மேற்கொண்டுள்ள கூட்டணி, இத்தகைய கூட்டு முயற்சிகளில் ஒன்று.

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியச் சந்தையில் ஒரு மின்சாரக் கார் ரகத்தை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகின்றன.

இந்தக் கார், குஜராத் மாநிலத்திலுள்ள சுஸூகி நிறுவனத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான், சுஸூகியின் இந்தியத் துணை நிறுவனமான மாருதி சுஸூகி, "ஈ-சர்வைவர்' என்ற உத்தேச மாதிரிக் காரை உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பெட்ரோலிய எரிபொருள் கார்களுக்கான இந்தியச் சந்தையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் மாருதி, மின்சாரக் கார்களுக்கான சந்தையிலும் கோலோச்ச வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறது.

இதற்காக, டென்úஸா, தோஷிபா ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து, குஜராத்தில் ஒரு லித்தியம்-ஐயான் பேட்டரித் தொழிற்சாலையை அமைக்கவும் மாருதி திட்டமிட்டு வருகிறது.

""எந்தவொரு காரியமும் கூட்டணி அமைத்துச் செயல்பட்டால் அது எளிதாக அமையும். நிறுவனங்களிடையே இத்தகைய கூட்டணி அமையும்போது, அது ஒரு நிறுவனத்திடமிருந்து மற்ற நிறுவனம் கற்றுக் கொள்வதற்கு வழி வகுக்கும்'' என்கிறார் மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயலதிகாரியுமான கெனிச்சி அயுகவா.

டொயோட்டா நிறுவனத்தைப் பொருத்தவரை, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் விற்பனையாகும் தனது வாகனங்களில் 80 சதவீதத்தை மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்ற கங்கணம் கட்டியுள்ளது.

இதற்காக, பல்வேறு வகையான எதிர்காலத் தொழில்நுட்பத் தீர்வுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகக் கூறுகிறார் டோயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அகிடோ டாசிபனா. 

மின்சார வாகனங்கள் விவகாரத்தில் இந்த நிறுவனம் உலக அளவில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் சர்வதேசச் சந்தையில் 15.2 லட்சம் மின்சார வாகனங்களை விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டிலேயே அந்த இலக்கை டொயோட்டா கடந்து விட்டது. அந்த வகையில் இந்தியச் சந்தையில் டொயோட்டாவும், அதனுடன் கூட்டு வைத்துள்ள சுஸூகியும் தனது இலக்கை அடைவதற்கான முயற்சியில் நம்பிக்கையுடன் இறங்கியுள்ளன.

மஹிந்திரா - ஃபோர்டு

சுஸூகியையும், டொயோட்டாவையும் போலவே, இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்டு மஹிந்திரா, அமெரிக்க ஆட்டோமொபைல் ஜாம்பவனான ஃபோர்டு ஆகிய இரு நிறுவனங்களும், இந்தியச் சந்தைக்கான மின்சார வாகனங்களை உருவாக்குவதில் கூட்டாகச் செயல்பட முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தொடங்கியதாகவும், மின்சார வாகன அறிமுகத்தால் இந்திய வாகனச் சந்தையில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, பரபஸ்பர அனுபவங்கள், தொழில்நுட்பங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வது குறித்து இரு நிறுவனங்களும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டணியின் விளைவாக, தனது பெரிய வகை மின்சாரக் காருக்கான மென்பொருளை ஃபோர்டிடமிருந்து மஹிந்திரா பெற்றது. ஃபோர்டு நிறுவனமும், மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார வாகனத் தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொண்டது.

மின்சார வாகனங்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தும்போது ஏற்படக் கூடிய பிரச்னைகளை இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள நினைப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா கூறுகையில், ""இந்தியச் சந்தையில் மின்சார வாகனங்களுக்கு எந்த அளவு வரவேற்பு இருக்கும் என்பதை யாராலும் உறுதியாககச் சொல்ல முடியவில்லை. இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதைவிட, செய்த முதலீட்டுக்கு நியாயம் கற்பிப்பதுதான் தற்போது முக்கியமான தேவையாக உள்ளது'' என்கிறார்.

ஃபோர்டு நிறுவனம் மட்டுமன்றி, மின்சாரத் தொழில்நுட்பங்களைப் பெறுவதற்காக தென் கொரியாவைச் சேர்ந்த ஸாங்யோங் மோட்டார் நிறுவனத்துடனும் மஹிந்திரா நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது.

இதுமட்டுமின்றி, ரெனால்ட்-நிஸான்-மிட்சுபிஷி ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டணியும் இந்தியச் சந்தையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவதில் தங்களது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக இந்த நிறுவனங்கள் இணைந்து, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக 100 கோடி டாலர் (சுமார் ரூ.6,400 கோடி) நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள முன்னணி வர்த்தக வாகன நிறுவனமான அசோக் லேலண்டும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மேம்படுத்துவதற்காக இஸ்ரேலிய நிறுவனமான பினர்ஜியுடன் கைகோத்துள்ளது. ஏற்கெனவே, சன் மொபிலிட்டி நிறுவனத்தின் தொழில்நுட்பக் கூட்டுறவுடன்தான் அசோக் லேண்டு நிறுவனம் தனது முதல் மின்சார பேருந்தான "சர்க்யூட் எஸ்'ஐ வெளியிட்டது.

உலக நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிக்கு இந்தியா அளிக்கும் ஒத்துழைப்பாக பெட்ரோலிய வாகனத் தடைக் கொள்கை வகுக்கப்பட்டது.
அந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதில் இந்த தயக்கத்தை உடைத்தெறிந்து, தங்களுக்கிடையிலான கூட்டுறவின் மூலம் தடைகளைத் தாண்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் காட்டி வரும் உற்சாகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை ஆட்டோமொபைல் எக்ஸ்போ கண்காட்சியில் கண்கூடாகக் காண முடிகிறது.


""எந்தவொரு காரியமும் கூட்டணி அமைத்து செயல்பட்டால் அது எளிதாக அமையும். நிறுவனங்களிடையே இத்தகைய கூட்டணி அமையும்போது, அது ஒரு நிறுவனத்திடமிருந்து மற்ற நிறுவனம் கற்றுக் கொள்வதற்கு வழி வகுக்கும்'' 

- கெனிச்சி அயுகவா, சிஇஓ, மாருதி சுஸூகி

""வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எங்களது வாகனங்களில் 80 சதவீதத்தை மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்ற, பல்வேறு வகையான
எதிர்காலத் தொழில்நுட்பத் தீர்வுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்''  

- அகிடோ டாசிபனா, நிர்வாக இயக்குநர்,
டொயோட்டா கிர்லோஸ்கர்


""இந்தியச் சந்தையில் மின்சார வாகனங்களுக்கு எந்த அளவு வரவேற்பு இருக்கும் என்பதை யாராலும் உறுதியாககச் சொல்ல முடியவில்லை. இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதைவிட, செய்த முதலீட்டுக்கு நியாயம் கற்பிப்பதுதான் தற்போது முக்கியமான தேவையாக உள்ளது'' 

- பவன் கோயங்கா, நிர்வாக இயக்குநர்,
மஹிந்திரா அண்டு மஹிந்திரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com