பழைய வாகனங்கள் வாங்குவோர் கவனத்துக்கு...

இருசக்கர, நான்கு சக்கர பழைய வாகனங்களை வாங்க, விற்க என நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சந்தைகள் பெருகி வருகின்றன. ஆன்லைன் மூலமாகவும் பழைய வாகனங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
பழைய வாகனங்கள் வாங்குவோர் கவனத்துக்கு...

இருசக்கர, நான்கு சக்கர பழைய வாகனங்களை வாங்க, விற்க என நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சந்தைகள் பெருகி வருகின்றன. ஆன்லைன் மூலமாகவும் பழைய வாகனங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நிதி நிறுவனங்களில் பணம் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் ஆன்லைன் மூலமாக சந்தையில் விற்கப்படுகின்றன.

புதிய வாகனங்களை வாங்கும் போது ஏற்படும் அதிகப்படியான செலவுகளை (பதிவு செலவு, வரி, காப்பீடு கட்டணம்) தவிர்க்கும் வகையில், பழைய வாகனங்களை வாங்குவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமன்றி, அனைத்து ரக வாகனங்களையும் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

ஆர்.சி. புத்தகத்தில் உள்ளவாறு, அதன் உரிமையாளரால் கையொப்பம் இடப்பட்ட படிவம் எண் 29இல் 2, படிவம் எண் 30இல் ஒன்றை கேட்டுப் பெற வேண்டும். மேலும், ஆர்.சி.புத்தகத்தில் உள்ளபடி அந்த வாகனத்தின் என்ஜின் எண், ஃபிரேம் எண் ஒரே மாதிரியாக உள்ளதா என்பது குறித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் திருட்டு வண்டிகளை தெரியாமல் வாங்குவதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

வாகனத்துக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தால் அதற்கான பாலிசி பத்திரத்தையும், ஏற்கெனவே நிதி நிறுவனம் மூலம் அந்த வாகனம் வாங்கப்பட்டிருந்தால் அந்த நிறுவனத்தில் இருந்து பணம் திருப்பிச் செலுத்தியதற்கான என்ஓசி கடிதம் வழங்கப்பட்டுள்ளதையும் கேட்டுப் பெற வேண்டும். அந்த என்ஓசி கடிதம் மூலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகத்தில் ஃபைனான்ஸ் கேன்சல் செய்யப்பட்டிருந்தால் மிக நல்லது.

இருசக்கர வாகனங்கள், சொந்த உபயோக வாகனங்கள் என்றால், 15 ஆண்டுகளுக்கு சாலை வரி செலுத்தப்பட்டிருக்கும். அதற்கு மேல் என்றால் பசுமை வரி உள்ளிட்ட வரிகள் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பிற வகை வாகனங்கள் என்றால் வாகனத்தை பயன்படுத்த எத்தனை ஆண்டுகள் வரை பெர்மிட் (அனுமதி) உள்ளது, பசுமை வரி, சாலை வரி போன்றவை முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

கார் போன்ற வாகனங்களை வாங்கும்போது, அது சொந்த உபயோகத்திற்கானதா, வாடகை உபயோகத்துக்கானதா, சரக்கு ஏற்றுவதற்கான அனுமதி உள்ளதா? பயணிகளை ஏற்ற அனுமதி என்றால் எத்தனை பயணிகளை ஏற்ற அனுமதி, சரக்கு ஏற்ற என்றால் எத்தனை டன் சரக்குகளை ஏற்ற அனுமதி என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அந்தந்த வகை வாகனங்களுக்கு ஏற்றவாறு முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா? ஆண்டுக்கொருமுறை எப்.சி. காட்டப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். வரி முறையாக செலுத்தாமல் இருந்தால், மொத்த வரியையும் சேர்த்து செலுத்த வேண்டிய சூழல் வரும். அப்போதுதான் பெயர் மாற்றம் போன்றவற்றை செய்ய முடியும்.

பழைய வாகனங்களை வாங்குவோர், உடனடியாக ஆர்.சி.புத்தகம் மற்றும் காப்பீட்டில் பெயர் மாற்றம் செய்து விடுவது நல்லது. இதன் மூலம் வாகனத்தால் ஏற்படும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்வது எளிதாகும்.

எனவே, ஒரு வாகனத்தை வாங்கும்போது இதுபோன்ற தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இல்லாதபட்சத்தில், அந்த வாகனத்தை வாங்குவதை தவிர்ப்பதே நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com