புத்தாண்டில் எப்படி இருக்கும் பங்குச்சந்தை?

பங்குச் சந்தையை பொருத்தவரையிலும், கடந்த 2017 முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது
புத்தாண்டில் எப்படி இருக்கும் பங்குச்சந்தை?

பங்குச் சந்தையை பொருத்தவரையிலும், கடந்த 2017 முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது. கடந்த ஆண்டில் பங்குச் சந்தை பல்வேறு சவால்களை சந்தித்திருந்தாலும் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை ஒளி ஏற்பட்டதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 2017-இல் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 29 சதவீதமும், தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 30 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளன.
 கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் பங்குச் சந்தை முதலீடு அதிக லாபத்தைக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள், சந்தை வல்லுநர்களிடையே எழுந்துள்ளது.
 புத்தாண்டைப் பொருத்தவரையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள், அரசியலில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், மத்திய பட்ஜெட், 8 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், இந்திய ரிசர்வ் வங்கி, அமெரிக்க
 ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகள் உள்ளிட்டவை இந்திய பங்குச் சந்தைகளை வழிநடத்தும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 மத்திய பட்ஜெட்: புத்தாண்டு தொடங்கியதும் சந்தையின் கவனம் அனைத்தும் மத்திய பட்ஜெட் மீது விழத் தொடங்கிவிடும். வரும் பட்ஜெட் மிகவும் பிரபலமான பட்ஜெட்டாக ஏழை, எளிய, விவசாயப் பெருங்குடி மக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கிராமங்கள் அதிகம் கொண்டுள்ள தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்குகள் கணிசமான அளவு குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தல்கள், 2019 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு அதிகக் கவனம் செலுத்தப்படும் என்றும் கணிக்கப்படுகிறது. இது பங்குச் சந்தையில் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
 ஆர்பிஐ கொள்கை: அண்மையில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவை அடுத்து வரும் நிதிக் கொள்கைக் கூட்டங்களில் எதிரொலிக்கும். எனவே, எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் பார்த்தால், 2019-ஆம் ஆண்டு மத்தியில் வங்கி வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்துவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சர்வதேச முதலீட்டு ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது கவனிக்கத்தக்கது.
 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்: 2016, நவம்பர் 8-ஆம் தேதி பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, நாடெங்கும் ஜிஎஸ்டி குறித்து பேசப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் கடும் பாதிப்பைச் சந்தித்து வருவதாகத் தொழில் துறையினர் தெரிவித்தனர். ஆனால், மத்திய அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஜிஎஸ்டியின் உண்மையான பலன் நிறுவனங்களின் அடுத்து வரும் காலாண்டு நிதிநிலை முடிவுகளில் நன்றாகத் தெரிவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் 3, 4-ஆம் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பை விஞ்சியிருக்கும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. ஜிஎஸ்டியால் நிறுவனங்களின் நிகர லாபம் அதிகரிக்கும்பட்சத்தில் சந்தையில் எழுச்சியைக் காண முடியும் என்று புரோக்கிங் நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
 ஃபெடரல் கொள்கை: அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் ஒவ்வொரு அறிவிப்பும் எப்போதும் சர்வதேச அளவில் பங்குச் சந்தை, நிதிச் சந்தைகளில் எதிரொலிப்பது வழக்கம். அதேபோன்று வரும் ஆண்டிலும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வெளியிடும் அறிவிப்புகள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவை பொருத்தவரையில், வங்கி வட்டி விகிதத்தை ஃபெடரல் ரிசர்வ் உயர்த்தாமல் இருந்தால், பங்குச் சந்தை, நிதிச் சந்தைகளில் அன்னிய முதலீடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம், சாலை மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவை உள்கட்டமைப்புத் துறை நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிசாதமாக அமைந்துள்ளன.
 கடந்த 2017-ஆம் ஆண்டு பொதுத் துறை வங்கிகளுக்கு சோதனைக் காலமாக அமைந்தது. வாராக் கடன் அளவு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. வாராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. பொதுத் துறை வங்கிகளுக்கு கணிசமான மூலதனத்தையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன் தாக்கம் வங்கிகளின் காலாண்டு முடிவுகளில் தெரிய வரும். இது பங்குச் சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
 காரணிகள்: இந்தியாவைப் பொருத்தவரையிலும், பருவமழை நல்ல நிலையில் உள்ளது, நுகர்வோர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, வளர்ச்சி பெற்று வரும் கிராமப் பொருளாதாரம், செழிப்பான விவசாயம், தொழில் துறை வளர்ச்சி, உத்வேகம் பெறும் பொருளாதார வளர்ச்சி, மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் தொழில் துறையினர் கொண்டுள்ள அதீத நம்பிக்கை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வு ஆகியவை புத்தாண்டிலும் பங்குச் சந்தை மேலும் உத்வேகம் பெறுவதற்கு முக்கியக் காரணிகளாக உள்ளன என்று மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
 அன்னிய முதலீடு: பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு மத்தியில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்து தங்களது முதலீடுகளை கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் பெற்றனர். ஆனால், இப்போது மீண்டும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தை, நிதிச் சந்தைகளில் முதலீடுகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். இது தொடரும் பட்சத்தில் 2018-ஆம் ஆண்டிலும் பங்குச்
 சந்தையில் உற்சாகத்துக்கு பஞ்சம் இருக்காது என்று சந்தை வட்டாரம் தெரிவிக்கிறது.
 இந்நிலையில், மோர்கன் ஸ்டான்லி 2018 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 35,700 புள்ளிகûளைத் தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளது. இதைத் தொடர்ந்து, உலக அளவில் பணப்புழக்கமும், பொருளாதாரமும் வளர்ச்சி பெறும் பட்சத்தில் சென்செக்ஸ் அதிவிரைவாக 41,500 புள்ளிகளைக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கணித்துள்ளது. இதேபோன்று, சர்வதேச முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாஸ் தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 11,600 புள்ளிகளைத் தொடும் என்று கணித்துள்ளது. இவை முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இருப்பினும், வல்லுநர்களில் ஒரு பிரிவினர் கடும் சவலாகளுக்கு இடையேதான் பங்குச் சந்தையில் வர்த்தகம் இருக்கும் என்றும், குறைந்தபட்சம் 10 சதவீதம் வரை வீழ்ச்சி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அது ஆரோக்கியமான கரெக்ஷனாக அமையும்பட்சத்தில் அதன்பிறகு சந்தை உற்சாகம் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளனர்.
 ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். நீண்ட கால அடிப்படையில் நல்ல வலுவான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரும் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைப் பெற்றுள்ளனர் என்பதுதான் பங்குச் சந்தை
 வரலாறு கூறும் உண்மை.
 -மல்லி எம்.சடகோபன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com