முதலீட்டாளர்களுக்கு லாபமளித்த "2017'

கடந்த சில ஆண்டுகளில் பங்குச் சந்தையின் செயல்பாடு மிகச் சிறப்பாக அமைந்த ஆண்டாகவும் 2017 அமைந்தது.
முதலீட்டாளர்களுக்கு லாபமளித்த "2017'

கடந்த சில ஆண்டுகளில் பங்குச் சந்தையின் செயல்பாடு மிகச் சிறப்பாக அமைந்த ஆண்டாகவும் 2017 அமைந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் கடந்த ஓராண்டில் 28 சதவீதம் ஏற்றம் பெற்று ஆண்டில் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) அன்று 34,056 புள்ளிகளில் நிலைகொண்டுள்ளது. அதாவது ஓராண்டில் 7,430 புள்ளிகள் ஏற்றம் பெற்றுள்ளது.
 இதேபோல 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 28.65 சதவீதம் உயர்ந்து 10,530 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. மொத்தம் 2,345 புள்ளிகள் உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் 52 வார குறைந்தபட்ச அளவாக 26,447 ஜனவரி 2-ஆம் தேதி பதிவாகியுள்ளது. 52 வார அதிகபட்ச அளவாக 34,137 என இந்த மாதம் 27-ஆம் தேதி பதிவாகியுள்ளது. இதேபோல நிஃப்டி 52 வார குறைந்தபட்ச அளவாக 8,277 என பதிவாகியுள்ளது. அதிகபட்ச அளவாக 10,552 என இந்த மாதம் 27-ஆம் தேதி பதிவாகியுள்ளது.
 மொத்தத்தில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு சுமார் ரூ.45.50 லட்சம் கோடி உயர்ந்து ரூ.151.74 லட்சம் கோடியாக ஏற்றம் கண்டுள்ளது.
 தேசியப் பங்குச் சந்தையில் 10 ரியல் எஸ்டேட் நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 115 சதவீதம் வரை உயர்ந்து அதிகம் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்துள்ளது. 50 நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி -50 நெக்ஸ்ட் 48 சதவீதம், 50 நடுத்தர நிறுவனப் பங்குகள் உள்ளடக்கிய நிஃப்டி மிட்கேப் குறியீடு 55 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான அளவு லாபத்தை அளித்துள்ளது. 16 ஆட்டோ நிறுவனங்களை உள்ளடக்கிய ஆட்டோ குறியீடு 34 சதவீதம், 12 தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளை உள்ளடக்கிய வங்கிக் குறியீடு 43 சதவீதம், 10 எரிசக்தி நிறுவனங்களை உள்ளடக்கிய எரிசக்தித் துறை குறியீடு 43 சதவீதம், 14 நிதி சேவை நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடு 44 சதவீதம், 15 நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கிய எஃப்எம்சிஜி குறியீடு 33 சதவீதம், 10 ஐடி நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி ஐடி குறியீடு 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
 14 ஊடக நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி மீடியா குறியீடு 36 சதவீதம், 15 உலோக நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி மெட்டல் குறியீடு 51சதவீதம், 12 பொதுத் துறை வங்கிகளை உள்ளடக்கிய நிஃப்டி பிஎஸ்யு வங்கி குறியீடு 26 சதவீதம், 10 தனியார் வங்கிகளை உள்ளடக்கிய நிஃப்டி தனியார் வங்கி குறியீடு 43 சதவீதம் உயர்ந்துள்ளது.
 ஆனால், மருந்து தயாரிப்பு அல்லது அது தொடர்புடைய முன்னணி நிறுவனங்கள் (10) உள்ளடக்கிய நிஃப்டி ஃபார்மா குறியீடு மட்டும் 5.21 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள், விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட மாற்றம், அமெரிக்க சுகாதார நிறுவனத்தின் கிடுக்கிப்பிடிகள் உள்ளிட்டவை இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. நிஃப்டியில் இடம் பெற்றுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ் 115 சதவீதம் உயர்ந்து அதிகம் லாபம் பெற்ற பட்டியலில் முன்னணியில் உள்ளது. இதேபோல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (54%), டாடா ஸ்டீல் (88%), வேதாந்தா (55%), ரிலையன்ஸ் (75%), இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் (85%), ஹிண்டால்கோ (78%), ஹெச்டிஎஃப்சி பேங்க் (58%), இண்டஸ் இந்த் பேங்க் (52%), பார்தி ஏர்டெல் (77%), ஹிந்துஸ்தான் யுனி லீவர் (68%), மாருதி (86%), அதானி போர்ட்ஸ் (52%) ஆகியவை அதிகம் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்துள்ளன. இதேபோல, நடுத்தர நிறுவனப் பங்குகளில் டாடா குளோபல் (164%), டிவிஎஸ் மோட்டார்ஸ் (112%)), எல் அண்ட் டி ஃபைனான்ஸ் (107%), அதானி எண்டர்பிரைஸஸ் (134%), பிசி ஜூவல்லர்ஸ் (135%), வோல்டாஸ் (106%), டால்மியா பாரத் (141%) ஆகியவை 100 சதவீதத்துக்கும் மேலான லாபத்தை அளித்துள்ளது.
 நிதி சேவை நிறுவனங்களில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் (81%) பாரத் ஃபைனான்ஸ் (75%), பஜாஜ் ஃபைனான்ஸ் (115%), பஜாஜ் ஃபைனான்சியல் சர்வீஸஸ் (87%) ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளது.
 தனியார் வங்கிகளான சவுத் இந்தியன் பேங்க், ஆர்பிஎல் பேங்க், யெஸ் பேங்க், கோடாக் பேங்க், இண்டஸ் இந்த் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 40 முதல் 63 சதவீதம் வரை ஏற்றம் பெற்றுள்ளன.
 குறிப்பாக நீண்ட கால அடிப்படையில் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பங்குச் சந்தையில் கணிசமான லாபம் கிடைத்துள்ளது என்பது மட்டும் நிதர்சன உண்மை.
 -எம்எஸ்ஜி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com